புதுதில்லி பிரகதி மைதானத்தில் ஜூன் 9 அன்று காலை 10.30 மணிக்கு உயிரி தொழில்நுட்ப புதியதொழில் கண்காட்சி 2022-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார்.
இந்த கண்காட்சி ஜூன் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். இந்த கண்காட்சிக்கு உயிரி தொழில்நுட்பத் துறையும், உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி சபையும் ஏற்பாடு செய்துள்ளன. உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி சபை அமைக்கப்பட்டதன் 10 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. “உயிரி தொழில்நுட்ப புதிய தொழில்களில் புதிய கண்டுபிடிப்புகள்: தற்சார்பு இந்தியாவை நோக்கி” என்பது இதன் மையப்பொருளாகும்.
தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், உற்பத்தியாளர்கள், முறைப்படுத்துவோர், அரசு அதிகாரிகள் ஆகியோரை இணைக்கும் தளமாக இந்தக் கண்காட்சி இருக்கும். இதில் 300 க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. சுகாதாரக் கவனிப்பு, மரபணு தொழில்நுட்பம், உயிரி மருந்து, தொழில்துறை உயிரி தொழில்நுட்பம், கழிவிலிருந்து மதிப்புறு பொருளை நோக்கி, தூய எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் உயிரி தொழில்நுட்ப பயன்பாட்டை விளக்குவதாக இந்தக் கண்காட்சி இருக்கும்.