கர்நாடக மாநிலம் தும்கூரில் வியாழக்கிழமை 02.01.2020 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில், க்ரிஷி கர்மான் விருதுகளையும், மாநிலங்களுக்கான விருதுகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கவுள்ளார். முன்னோடி விவசாயிகளுக்கான வேளாண் அமைச்சரின் க்ரிஷி கர்மான் விருதுகளையும் அவர் வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமரின் கிசான் (பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி) திட்டத்தின்கீழ், டிசம்பர் 2019-மார்ச் 2020 வரையிலான காலத்திற்குரிய 3-வது தவணையாக தலா ரூ.2000-மும் விடுவிக்கப்படவுள்ளது. இதன்மூலம் சுமார் 6 கோடி பயனாளிகள் பயனடைவார்கள். 8 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு பிரதமரின் கிசான் திட்ட உதவி வழங்குவதற்கான சான்றிதழ்களையும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பயனாளிகளிடம் ஒப்படைக்கவுள்ளார்.
இதே நிகழ்ச்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மீனவர்களுக்கு, ஆழ்கடல் மீன்பிடி கலன்கள் மற்றும் மீன்பிடி கலன்களுக்கான டிரான்ஸ்பாண்டர்களையும் பிரதமர் ஒப்படைக்கவுள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளையும் அவர் வழங்கவுள்ளார்.
விழா நடைபெறும் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடும் பிரதமர், அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.