குஜராத் மாநிலம் கெவாடியாவில் அக்டோபர் 31, 2018 அன்று உலகிலேயே மிகவும் உயரமான “ஒற்றுமையின் சிலை”-யை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளன்று 182 மீட்டர் உயரமுள்ள அவரது சிலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
“ஒற்றுமையின் சிலை”-யை நாட்டுக்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கும் வகையில், திறப்பு விழாவின் போது, பிரதமரும் மற்ற பிரமுகர்களும் கலசத்தில் மண்ணையிட்டு, நர்மதா நதிநீரை ஊற்றுவார்கள். சிலைக்கு அபிஷேகம் செய்வதற்கான கருவியை பிரதமர் அழுத்துவார்.
அங்கு திரண்டிருப்போர்களிடையே பிரதமர் உரையாற்றுவார்.
பின்னர், ஒற்றுமையின் சுவரினை திறந்து வைப்பதற்காக அந்த இடத்திற்கு அவர் வருவார். ஒற்றுமையின் சிலை பாதத்தில் பிரதமர் சிறப்புப் பிரார்த்தனை செய்வார். அருங்காட்சியகம், பொருட்காட்சி, பார்வையாளர்கள் மாடம் ஆகியவற்றையும் அவர் பார்வையிடுவார். 153 மீட்டர் உயரமுள்ள இந்த மாடத்தில் ஒரே சமயத்தில் 200 பார்வையாளர்கள் வரை அமரமுடியும். சர்தார் சரோவர் அணை, அதன் நீர்தேக்கம் மற்றும் சத்புரா, விந்திய மலையடுக்குகளை அங்கிருந்து பார்வையிடலாம். இந்திய விமானப்படையின் விமானங்களின் அணிவகுப்பு மற்றும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகளும், அர்ப்பணிப்பு விழாவில் இடம்பெறும்.