புதுதில்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12, 2024 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் சிவில் விமானப் போக்குவரத்து குறித்த 2-வது ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.
அனைத்து உறுப்பு நாடுகளும் "தில்லி பிரகடனத்தை" ஏற்றுக்கொள்வதையும் பிரதமர் பிரகடனம் செய்வார். இந்தப் பிராந்தியத்தின் விமானப் போக்குவரத்துத் துறையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்திட்டமாகும்.
இந்த மாநாடும், டெல்லி பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதும் ஆசிய பசிபிக் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு, பத்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே நிலவும் ஒத்துழைப்பு உணர்வை எடுத்துக்காட்டுகிறது.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புடன் (ICAO) இணைந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள சிவில் விமானப் போக்குவரத்து குறித்த ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் அளவிலான மாநாடு, ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் உள்ள போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களை ஒன்றிணைக்கும். அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையில் அதிக ஒத்துழைப்பை மேம்படுத்தும் அதே வேளையில், உள்கட்டமைப்பு மேம்பாடு, நிலைத்தன்மை மற்றும் தொழிலாளர் சக்தி மேம்பாடு போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்வதில் இந்த மாநாடு கவனம் செலுத்தும்.