மத்தியப்பிரதேச மாநிலத்தின் தேகன்பூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை அகாடெமியில் ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறும் டிஜிபி-க்கள் மற்றும் ஐஜி-க்களின் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார்.
டிஜிபி-க்கள் மாநாடு ஆண்டுக்கொருமுறை நடத்தப்படுகிறது. இதில், நாடு முழுவதையும் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். இதற்கு முன்னதாக, கடந்த 2014-ம் ஆண்டில் அசாமின் குவஹாத்தியிலும், 2015-ம் ஆண்டில் குஜராத்தின் கட்ச்சில் உள்ள பாலைவனப் பகுதியான தோர்டோ-விலும், 2016-ம் ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடெமியிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தின்போது, எல்லைதாண்டிய தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, தலைமைப் பண்பு, தகவல் தொடர்புத் திறன், ஒருங்கிணைந்த பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். குறிப்பாக, காவல் படையில் தொழில்நுட்பம் மற்றும் மனித தொடர்புக்கான கருவி (human interface) ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
இதுபோன்ற கருத்தரங்குகளை தில்லியில் மட்டும் நடத்தாமல், நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பம். அதனடிப்படையிலேயே தேசிய தலைநகருக்கு வெளியே வருடாந்திர டிஜிபி-க்கள் மாநாடு நடத்தப்படுகிறது.