பீகாரில் சாம்பரான் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.
மோதிஹரி என்ற இடத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 20,000 தூய்மைத் தூதர்கள் எனப்படும் தூய்மை இயக்கப் பணியாளர்களுக்கிடையே அவர் உரையாற்றுகிறார்.
கிராம நிலையில் சமுதாய தூய்மை அணுகுமுறையை அமல்படுத்துவதில் இந்தப் பணியாளர்கள் காலாட்படையாகச் செயல்பட்டு
ஊக்கப்படுத்துகிறார்கள். திறந்தவெளி மலம்கழிப்பு இல்லாத நாடாக இந்தியா உருவெடுப்பதில் முன்னேற்றத்தின் உந்துவிசையாக இந்தப் பணியாளர்கள் செயலாற்றுகிறார்கள்.
நூறாண்டுகளுக்கு முன்னர் 1917 ஏப்ரல் 10 –ம் தேதி அன்று இன்டிகோ பயிர் செய்ய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்ட விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராட மகாத்மா காந்தி சாம்பிரான் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். இந்தச் சாம்பிரான் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு விழா நிறைவினை 2018 –ம் ஆண்டு ஏப்ரல் 10 –ம் தேதி குறிக்கிறது. இந்த நிறைவு நிகழ்ச்சி தூய்மை இயக்கத்தின் சத்தியாகிரகமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.