உயர் லட்சியம் கொண்டவையாக மாறக் கூடிய மாவட்டங்களின் மாநாட்டில் நாளை பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு புது தில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நிதி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. மாற்றத்தைக் காணப் போகும் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் பொறுப்பு அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்குவது என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனையின் அம்சமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட வளர்ச்சிக் குறியீடுகளில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் தீவிர மாற்றத்தை உருவாக்குவது என்ற பெரிய கொள்கை அளவிலான முயற்சியாக இந்தத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளை ஒருங்கிணைப்பு செய்வதற்கு, கூடுதல் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள மூத்த அரசு அதிகாரிகள் இதன் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.