அமெரிக்க அதிபர் மேதகு டொனால்டு டிரம்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த புத்தாண்டில் அதிபர் டிரம்ப், அவரது குடும்பத்தினர், அமெரிக்க மக்கள் ஆகியோருக்கு நல்ல ஆரோக்கியம், வளம் மற்றும் வெற்றி கிட்டட்டும் என்று பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியா – அமெரிக்கா உறவுகள் மென்மேலும் வலுவடையும் வகையில் வளர்ந்து வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். சென்ற ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். இருதரப்பு நலன் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் அதிபர் டிரம்புடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகப் பிரதமர் கூறினார்.
இந்தப் புத்தாண்டில் இந்திய மக்களுக்கு வளமும், வளர்ச்சியும் ஏற்படட்டும் என்று அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள சாதனைகள் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தாம் தயாராக இருப்பதாகவும் அதிபர் வலியுறுத்திக் கூறினார்.