பிரதமர் திரு. நரேந்திர மோடி இலங்கை அதிபர் மற்றும் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார். இலங்கையில் இன்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களில் 150 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு தனது சார்பிலும், இந்திய மக்கள் சார்பிலும் இரங்கல்களைத் தெரிவித்தார்.
ஒரு மதப் பண்டிகையின் போது புனித தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிரதமர் திரு. மோடி வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தார். இந்த கொடுஞ் செயலில் ஈடுபட்டவர்களை மனிதநேயமற்றவர்கள் என்று சாடிய பிரதமர், இது திட்டமிட்ட காட்டுமிராண்டித்தனமான செயல் என்று குறிப்பிட்டார். நமது பிராந்தியத்திலும் உலகத்தின் அனைத்து பகுதிகளிலும், மனிதத்திற்கு பெரும் சவாலாக உள்ள தீவிரவாதத்தின் மற்றொரு கடுமையான நினைவூட்டல்தான் இந்த தாக்குதல்கள், என்று அவர் கூறினார்.
தீவிரவாதத்தினால் ஏற்படும் சவால்களை சமாளித்து இலங்கையின் பாதுகாப்பை உறுதிபடுத்த தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயாராக உள்ளது என்பதை பிரதமர் மீண்டும் நினைவூட்டினார். இந்த கொடூர சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.