கத்தார் நாட்டின் மன்னர் திரு.ஷேக் தமீம்-பின்-அஹமத்-பின்-கலிஃபா –அல்-தனி, பிரதமர் திரு.நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
கத்தார் நாட்டுக்கு இந்தியா பெருமளவில் முக்கியத்துவம் அளித்திருப்பதை எடுத்துரைத்த பிரதமர், அந்நாட்டுடன் மேலும் உறவை வலுப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக அப்போது தெரிவித்தார். கத்தார் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு என்றும் சற்று தொலைவில் இருந்தாலும் நமது அண்டை நாட்டைபோலவே உறவு பாராட்டுவதாகவும் கூறினார். இரு நாடுகளின் நட்புறவை அதிவேகமாக வலுப்படுத்தும் வகையில் பெருமதிப்பிற்குரிய கத்தார் மன்னரின் தலைமைக்கும் வழிகாட்டுதலுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
பிராந்திய நிலைமை குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் விவாதித்தனர். இந்தப் பிராந்தியத்திலும் அதற்கப்பாலும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நீடித்து பயங்கரவாதத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் அதற்கு ஆதரவு அளிப்பதற்கும் முடிவுகட்ட சம்பந்தப்பட்ட துறையினர் செயல் அளவில் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட 46வது கவுன்சில் கூட்டத்தில் மரியாதை நிமித்தமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்றது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என இருநாடுகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.