அபுதாபி பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபுக் குடியரசின் ராணுவப் படைகளின் துணைத் தலைமைத் தளபதியுமான மேதகு ஷேக் முகமத் பின் சயேத் அல் நஹ்யானுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.
அனைத்து வகையில் இருதரப்பு ஒத்துழைப்பு வளர்ந்து வருவது குறித்து இரு தலைவர்களும் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். முழுமையான இரு தரப்பு ராணுவ கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.
அபுதாபியில் இந்த மாதம் நடைபெற்ற ஓஐசி வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தமைக்காக மேதகு பட்டத்து இளவரசருக்கு நன்றி தெரிவிக்கவும் பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பங்கேற்பு அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கான பொதுவான நோக்கங்களை எட்டுவதில் பங்களிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.