இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் பயணத்திற்கு முன்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை வருமாறு.
”2018 மே 29 முதல் ஜூன் 2 வரை நான் இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறேன். இந்த 3 நாடுகளுடனும் இந்தியா பெருமளவிற்கு நீடித்த ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளது.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ விடுத்த அழைப்பின் பேரில், மே 29 அன்று, நான் ஜகார்த்தா செல்கிறேன். பிரதமர் என்ற முறையில் நான் இந்தோனேசியா செல்வது இதுவே முதல்முறையாகும். அதிபர் விடோடோவுடன், நான் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். அத்துடன் இந்தியா – இந்தோனேசிய தொழில்துறை தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்திலும் நாங்கள் கூட்டாக பங்கேற்று கலந்துரையாட உள்ளோம். இந்தோனேசியாவில் வசிக்கும் இந்திய சமுதாயத்தினரிடையேயும் நான் உரையாற்ற இருக்கிறேன்.
இந்தியாவும், இந்தோனேசியாவும் மிகவும் வலுவான நட்புறவை கொண்டிருப்பதுடன் மிக நீண்ட வரலாற்று மற்றும் நாகரீக இணைப்புகளை கொண்ட நாடுகளாகும். இருநாடுகளும் பல்வேறு இன, மத, பன்முக மற்றும் சமூகங்களை கொண்ட நாடுகளாக உள்ளன. எனது இந்தோனேசிய பயணம், ஆசியாவின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகளிடையே மேலும் நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், இருதரப்பு நட்புறவை மேம்படுத்தவும், பயனுள்ளதாக அமையும் என நான் நம்புகிறேன்.
மே 31 அன்று சிங்கப்பூர் செல்லும் வழியில், அந்நாட்டின் புதிய தலைமைக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக, மலேசியாவில் குறுகிய நேரப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். அங்கு மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.
சிங்கப்பூரில், நிதித்தொழில்நுட்பம், திறன்மேம்பாடு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் செயற்கை புலனாய்வு உள்ளிட்ட அம்சங்களில் இந்தியா- சிங்கப்பூர் இடையேயான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்தவிருக்கிறேன். நகர்ப்புற வளர்ச்சி, திட்டமிடல், நவீன நகரங்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில், சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவுடன் முக்கிய பங்குதாரர்களாக உள்ளன. எனது சிங்கப்பூர் பயணம். இருநாடுகளும் மேலும் நெருங்கிய ஒத்துழைப்புக் கொள்வதற்கு வழிவகுக்கும்.
மே 31 அன்று, இந்தியா-சிங்கப்பூர் நிறுவனத்தையும், புதிய கண்டுபிப்புகள் பற்றிய கண்காட்சியையும் பார்வையிட இருக்கிறேன். வர்த்தக மற்றும் சமுதாயம் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், சிங்கப்பூரைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்க உள்ளேன்.
ஜூன் 1-அன்று சிங்கப்பூர் அதிபர் கலிமா யாகூப்பை சந்திக்க இருக்கிறேன். அத்துடன் சிங்கப்பூர் பிரதமர் லீ-யுடன்,
இருநாட்டு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவதுடன் அங்குள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கும் சென்று, இளம் மாணவர்களுடன் கலந்துரையாட இருக்கிறேன்.
அன்று மாலையில், ஷாங்ரி-லா சொற்பொழிவு நிகழ்ச்சியிலும் சிறப்புரையாற்ற இருக்கிறேன். இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் ஒருவர் உரையாற்றுவது இதுவே முதன்முறையாகும். மண்டல பாதுகாப்பு மற்றும் அமைதி, நிலைத்தன்மை குறித்து இந்தியாவின் கருத்துகளை எடுத்துரைக்க இது ஒரு மாபெரும் வாய்ப்பாக அமையும்.
ஜூன் 2 அன்று, 1948 மார்ச் 27 அன்று காந்தியடிகளின் அஸ்திக் கரைக்கப்பட்ட கடற்பகுதியான, கிளிஃபோர்டு பயர் பகுதியில் பெயர்ப்பலகை ஒன்றை திறந்துவைக்க இருக்கிறேன். மேலும், இந்தியாவுடன், நாகரீக ரீதியான பிணைப்புகளைக் கொண்ட சில வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்ல இருக்கிறேன்.
எனது நிகழ்ச்சிகளின் நிறைவாக, சிங்கப்பூரில் உள்ள சாங்கி கடற்படைத் தளத்திற்கு சென்று, அங்கு ஐ என் எஸ் சாத்பூராவை பார்வையிட்டு, இந்திய – சிங்கப்பூர் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் கலந்துரையாட இருக்கிறேன்.
இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் நான் மேற்கொள்ளவிருக்கும் பயணம், இந்தியாவில் கிழக்கை உற்று நோக்குங்கள் கொள்கைக்கு வலு சேர்ப்பதுடன், இந்த 3 நாடுகளுடனுடனான நட்புறவுகளையும் ஒத்துழைப்புகளை அதிகரிக்க உதவும் என்றும் நான் நம்புகிறேன்.