கோவாவில் 2016 அக்டோபர் 15-16 தேதிகளில் நடைபெறவுள்ள எட்டாவது பிரிக்ஸ் உச்சிமாநாடு, முதலாவது பிரிக்ஸ்-பிம்ஸ்டெக் அணுகலுக்கான உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார். இந்த உச்சிமாநாடுகள் துவங்குவதற்கு முன்னதாக பிரிக்ஸ், பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை பிரதமர் வரவேற்று இன்று அறிக்கை வெளியிட்டார்.
ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் தெரிவித்திருந்ததாவது:
“2016 அக்டோபர் 15-16 தேதிகளில் கோவாவில் எட்டாவது பிரிக்ஸ் உச்சிமாநாடு, முதலாவது பிரிக்ஸ்-பிம்ஸ்டெக் அணுகலுக்கான உச்சிமாநாடு ஆகியவற்றை முன்னின்று நடத்துவதில் இந்தியா மிகவும் மகிழ்ச்சியடைகிறது. பிரிக்ஸ், பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த பத்து தலைவர்களையும் மனமார வரவேற்பதில் நான் மிகுந்த ஆவலுடன் உள்ளேன். இந்தியா – ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கெடுக்க வருகைதரவுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருதரப்பு நாடுகளின் உறவுகளை மேம்படுத்த வருகைதரும் பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் ஆகியோரை கோவாவில் வரவேற்கின்ற வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது.
காலங்களைக் கடந்த ரஷ்யாவுடனான முற்றிலும் புதுமையான நட்புறவு, கூட்டணி ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் ரஷ்ய அதிபர் புடின் அவர்களின் இந்த வருகை நமக்கு ஒரு வாய்ப்பைத் தரவுள்ளது. முக்கியமான கேந்திர விஷயங்களுக்கான கூட்டாளியாக விளங்கும் பிரேசில் நாட்டுடன் புதிய துறைகளில் ஒத்துழைப்பை உருவாக்குவதாக அதிபர் டெமர் அவர்களின் வருகை அமையும்.
நமது நோக்கங்களுக்குக் குறுக்கே நிற்கும் சர்வதேச, பிரதேச ரீதியான சவால்கள் குறித்து சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளின் எனது சக தலைவர்களுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்துவதிலும் நான் மிகுந்த ஆவலுடன் உள்ளேன்.
பிரிக்ஸ் அமைப்பின் இந்த ஆண்டிற்கான தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ள நாடு என்ற வகையில் வர்த்தகம், விளையாட்டு, கல்வி, திரைப்படங்கள், உதவித்தொகைகள், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வகையான துறைகளிலும் மக்களின் பரஸ்பர தொடர்புகளை வளர்த்தெடுப்பதற்கு முக்கியத்துவம் தருவதில் இந்தியா வலுவான முனைப்பை மேற்கொண்டுள்ளது.
பிரதிபலிப்பை ஏற்படுத்துகின்ற, கூட்டான, உள்ளடக்கிய தீர்வுகளை வடிவமைப்பதற்கான நமது முயற்சிகளில் நமது மக்களே முக்கியமான பங்குதாரர்களாக இருக்கின்றனர் என்ற நம்பிக்கையே இதில் அடிநாதமாக அமைகிறது. பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி, அவசர கையிருப்பு ஏற்பாடுகள் போன்ற முன்முயற்சிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது மட்டுமின்றி, புதிய முன்முயற்சிகளையும் நாங்கள் கோவாவில் துவக்கவிருக்கின்றோம்.
இந்த பிரிக்ஸ் உச்சிமாநாடானது பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, வளர்ச்சி, அமைதி, நிலைத்தன்மை, சீர்திருத்தம் போன்றவற்றிற்கான நமது பொதுவான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் என்பதிலும் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.
முதல் முறையாக பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவர்களான வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகியவர்களை உள்ளடக்கிய அணுகலுக்கான உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவிருக்கிறது என்பது குறித்தும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய மனித குலத்தின் மூன்றில் இரண்டு பங்கு மக்களை உள்ளடக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த உச்சிமாநாடு ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவை உரிய பயன்களை அளிக்கும் என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம்.
நம்மைச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறிய கூட்டாக உறுதிமேற்கொள்ளவும், புதிய கூட்டணிகளுக்கான பாலங்களை உருவாக்கவும் இந்தியா மிகுந்த ஆவலுடன் இருக்கிறது.”