வணக்கம்!,
நாடு சுதந்திரம் பெற்ற பவளவிழாவைக் கொண்டாடும் போது இந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது. அடுத்த சில ஆண்டுகளில் சுயசார்பு இந்தியா இயக்கத்திற்கு மகளிர் சக்தி ஒரு புதிய ஆற்றலை உருவாக்கும். உங்களுடன் பேசியது இன்று என்னை உற்சாகப்படுத்தியது. இன்றைய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சரவையிலிருந்து எனது சகாக்கள், மதிப்பிற்குரிய ராஜஸ்தான் முதலமைச்சர், மாநில அரசுகளின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் (மாவட்ட கவுன்சில்கள்), நாட்டின் சுமார் 3 லட்சம் இடங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான சகோதரிகள் மற்றும் மகள்கள், மற்றும் பெரியோர்களே!
சகோதர சகோதரிகளே,
சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய சகோதரிகளுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களின் நம்பிக்கையை என்னால் உணர முடிந்தது. முன்னோக்கிச் செல்ல வேண்டும்; ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவர்களின் உத்வேகத்தையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். அது உண்மையில் நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது.
நண்பர்களே,
கொரோனா காலத்தில் சுய உதவிக் குழுக்கள் மூலம் நமது சகோதரிகள் நாட்டு மக்களுக்கு சேவை செய்த விதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைந்தது. முகக்கவசங்கள், சுத்திகரிப்பான்கள் தயாரித்தல், தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்குதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் உங்கள் பங்களிப்பு ஒப்பிட முடியாதது. ஒரே சமயத்தில் தங்கள் குடும்பங்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் அதே வேளையில், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் எங்கள் கோடிக்கணக்கான சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள்.
நண்பர்களே,
பெண்களிடையே தொழில் முனைவோரை அதிகரிப்பதற்கும், சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதில் அவர்கள் அதிக பங்காற்றுவதற்காகவும் ஒரு பெரிய நிதி உதவி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் பெண் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கங்களில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான சுயஉதவிக் குழுக்களுக்கு 1600 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. ரக்ஷா பந்தனுக்கு முன்னதாக வழங்கப்பட்டுள்ள இந்தத் தொகை கோடிக்கணக்கான சகோதரிகளின் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும். உங்கள் தொழில்கள் செழிக்கட்டும்! உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
நண்பர்களே,
சுய உதவி குழுக்கள் மற்றும் தீன் தயாள் அந்தியோதயா யோஜனா இன்று கிராமப்புற இந்தியாவில் ஒரு புதிய புரட்சியைக் கொண்டு வருகிறது. பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் இந்த இயக்கம் கடந்த 6-7 ஆண்டுகளில் வலுப்பெற்றுள்ளது. நாடு முழுவதும் சுமார் 70 லட்சம் சுய உதவிக் குழுக்களுடன் சுமார் எட்டு கோடி சகோதரிகள் தொடர்பு கொண்டுள்ளனர். கடந்த 6-7 ஆண்டுகளில், சுய உதவிக் குழுக்கள் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது எங்கள் அரசு அமைக்கப்பட்டபோது, வங்கிக் கணக்கு கூட இல்லாத கோடிக்கணக்கான சகோதரிகள் இருப்பதைக் கண்டோம். எனவே, ஜன்தன் கணக்குகளைத் தொடங்க நாங்கள் ஒரு பெரிய இயக்கத்தைத் தொடங்கினோம். இன்று நாட்டில் 42 கோடிக்கும் அதிகமான ஜன் தன் கணக்குகள் உள்ளன, இதில் 55 சதவிகித கணக்குகள் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுடையவை. இந்தக் கணக்குகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
சகோதர சகோதரிகளே,
நாங்கள் வங்கிக் கணக்குகளைத் தொடங்கினோம், வங்கிகளிடமிருந்து எளிதாகக் கடன் பெற வகை செய்தோம். தேசிய வாழ்வாதார திட்டத்தின் கீழ், சகோதரிகளுக்கு தற்போதைய அரசாங்கம் வழங்கிய உதவித் தொகை முந்தைய அரசாங்கம் வழங்கியதை விட பல மடங்கு அதிகம். மேலும், சுமார் ரூ. 3.75 லட்சம் கோடி உத்தரவாதம் பிணை ஏதுமில்லாமல் சுயஉதவிக் குழுக்களுக்குக் கிடைத்துள்ளது
நண்பர்களே,
இந்த ஏழு ஆண்டுகளில், சுய உதவி குழுக்கள் தங்கள் வங்கிக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துகின்றன. கிரி ராஜ் அவர்கள் குறிப்பிட்டது போல வங்கிக் கடன்களில் 9 சதவிகிதம் வாராக் கடனாக இருந்த காலம் இருந்தது. இப்போது இரண்டரை சதவிகிதமாகக் குறைந்துள்ளது. முன்பு இந்த சுயஉதவிக் குழுக்கள் ரூ.10 லட்சம் வரை உத்தரவாதமில்லாமல் கடன் பெற முடிந்தது. இப்போது இந்த வரம்பு ரூ. 20 லட்சம். முன்பு, நீங்கள் கடனைப் பெற வங்கிக்குச் சென்றபோது, வங்கி உங்கள் சேமிப்புக் கணக்கை கடனுடன் இணைக்கச் சொல்லும், மேலும் சில பணத்தை டெபாசிட் செய்யச் சொல்லும். இப்போது இந்த நிபந்தனையும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நண்பர்களே,
சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் புதிய இலக்குகளை நிர்ணயித்து புதிய ஆற்றலுடன் முன்னேற வேண்டிய நேரமிது. கிராமப்புற மகளிரும், கிராமப்புறங்களும் செழிப்புடன் இருக்க உதவும் சூழ்நிலைகளை அரசாங்கம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் எப்போதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முடிவற்ற சாத்தியங்கள் உள்ளதாக இருந்து வருகிறது. வேளாண் மற்றும் வேளாண் சார் தொழில் தொடர்பான பல முயற்சிகளுக்கு ஒரு சிறப்பு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 1.25 கோடி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பு சகோதரிகள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். புதிய வேளாண் சீர்திருத்தங்கள் நாட்டின் விவசாயத்திற்கும் நமது விவசாயிகளுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல், சுயஉதவிக் குழுக்களுக்கான மகத்தான வாய்ப்புகளையும் அளிக்கிறது. இப்போது நீங்கள் விளைபொருட்களை நேரடியாக பண்ணையில் இருந்து விற்கலாம். உணவு பதப்படுத்தும் அலகு அமைத்து பொருட்களை நன்கு பேக்கேஜ் செய்து பின்னர் விற்கலாம். இப்போதெல்லாம் ஆன்லைனும் ஒரு பெரிய ஊடகமாக மாறி வருகிறது, அதை நீங்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். உங்கள் தயாரிப்புகளை நகரங்களுக்கு எளிதாக அனுப்பலாம். நீங்கள் ஜிஎம் போர்ட்டல் மூலமாகவும் பயன் பெறலாம்.
நண்பர்களே,
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இது தொடர்பாக அனைத்து உதவிகளையும் வழங்குகிறது. பழங்குடிப் பகுதிகளில் உள்ள் சகோதரிகள் பாரம்பரியமாக இத்தொழிலுடன் தொடர்புடையவர்கள். சுய உதவிக் குழுக்களுக்கும் இத்துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்கும் பிரச்சாரம் நடக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து பேசிய சகோதரிகள் நம்மிடம் கூறியதைக் கேட்டோம். சகோதரி ஜெயந்தி கொடுத்த எண்கள் அனைவருக்கும் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. சுயஉதவிக் குழுக்களுக்கு இதில் இரட்டைப் பங்கு உண்டு. ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்கிற்கு எதிராக நீங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் மாற்றுப் பொருளுக்காக உழைக்க வேண்டும். .
நண்பர்களே,
இன்று நாட்டின் சகோதரிகளுக்கும், மகள்களுக்கும் மாறிவரும் சூழலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அனைத்து சகோதரிகளும் வீடு, கழிவறை, மின்சாரம், தண்ணீர், எரிவாயு போன்ற வசதிகள் பெற வகை செய்யப்படுகிறது. கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, தடுப்பூசி மற்றும் பிற தேவைகள் குறித்து அரசாங்கம் முழுமையாக உணர்ந்து செயல்படுகிறது. இது கண்ணியத்தையும் நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. விளையாட்டு மைதானம், அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் போர்க்களம் வரை இந்த நம்பிக்கையை நாம் காண முடிகிறது. விடுதலை பெற்று 75 ஆண்டுகளை கொண்டாடும் பவள விழா ஆகஸ்ட் 15, 2023 வரை தொடரும்.. சில சமூக சேவைகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம். உங்கள் பகுதியில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட 12-16 வயதிற்குட்பட்ட சகோதரிகள், இளம் மகள்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். தற்போது நாடு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. உங்கள் முறை வரும்போது நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். கிராமங்களில் உள்ள மற்ற மக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். உங்கள் கிராமங்களில், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நற்பணிக்காக, இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் அடுத்த ஆகஸ்ட் 15 வரை ஒரு வருடத்தில் 75 மணிநேரம் ஒதுக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யலாம்.. தூய்மை, நீர் பாதுகாப்பு, கிணறுகள் மற்றும் குளங்கள் தூர் வாருதல் போன்ற பிரச்சாரங்களை நடத்தலாம். நீங்கள் ஓரிரு மாதங்களில் மருத்துவர்களை அழைத்து, நோய்கள் மற்றும் பெண்களின் உடல்நலம் குறித்து விளக்க ஒரு திறந்த கூட்டம் நடத்தலாம். இது அனைத்து சகோதரிகளுக்கும் பேருதவியாக இருக்கும் நீங்கள் சில சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளலாம். இது நிறைய பயனளிக்கும். நீங்கள் ஒரு பெரிய பால்பண்ணைக்குச் செல்லலாம் அல்லது அருகிலுள்ள சூரிய சக்தி ஆலைக்குச் செல்லலாம். இப்போதுதான் பிளாஸ்டிக் பற்றி கேள்விப்பட்டோம், நீங்கள் அங்கு சென்று ஜெயந்தி அவர்கள் எப்படி வேலை செய்கிறார் என்று பார்க்கலாம். உத்தரகாண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பேக்கரி மற்றும் பிஸ்கட்டுகளை நீங்கள் இப்போது பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். இதற்கு அதிக செலவு இல்லை, ஆனால் உங்கள் நம்பிக்கை வளரும். நீங்கள் கற்றுக் கொண்டது நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்கள் உங்கள் பணிகளோடு, சில தொண்டுகள் புரியவும் நேரம் ஒதுக்குங்கள், இதனால் நீங்கள் நலப்பணிகளைச் செய்கிறீர்கள் என்பதை சமுதாயமும் உணரும்.
இந்தியாவின் 8 கோடி பெண்களின் கூட்டு சக்தியால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள், அது எவ்வளவு தூரம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும். இந்த எட்டு கோடி பேரும், படிக்கவோ எழுதவோ தெரியாத தங்கள் சகோதரி அல்லது தாய்க்கு தங்கள் குழுக்கள் மூலமாக எழுத்தறிவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அதிகம் செய்யத் தேவையில்லை, ஆனால் உங்கள் சிறிய முயற்சியும் சிறந்த சேவையாக இருக்கும். அந்த சகோதரிகள் பின்னர் மற்றவர்களுக்குக் கற்பிக்க முடியும். நான் உங்கள் பேச்சைக் கேட்கும்போது உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது; நானும் உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று உணர்ந்தேன்.
கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், நீங்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் முன்னேறுகிறீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தபோதிலும், நீங்கள் விடவில்லை; புதிதாக ஏதாவது செய்தீர்கள். நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஒவ்வொரு வார்த்தையும் நான் உட்பட அனைவருக்கும் மிகவும் ஊக்கமளிக்கிறது.
அனைத்து சகோதரிகளுக்கும் நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன். வரவிருக்கும் ரக்ஷா பந்தனுக்கு உங்கள் ஆசிகள் கிடைத்து மேன்மேலும் பணி செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கட்டும். மகிழ்ச்சியான ரக்ஷா பந்தன் நாளையொட்டி, முன்கூட்டியே உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!