ஐக்கியநாடுகள் சபையின் 74வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுவரும் தருணத்திற்கு இடையே இந்திய-பசிஃபிக் தீவுகளில் உள்ள வளரும் நாடுகளின் தலைவர்களின் கூட்டம் 2019 செப்டம்பர் 24 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஃபிஜி, கிரிபாடி குடியரசு, மார்ஷல் தீவுகள் குடியரசு, மைக்ரோனேசியாவின் கூட்டமைப்பு மாநிலங்கள், நவ்ரூ குடியரசு, பலாவ் குடியரசு, சுதந்திர பாபுவா நியூ கினியா, சுதந்திர சமோவா, சாலமன் தீவுகள், டோங்கா, டுவாலு முடியாட்சிகள், வனுவாட்டூ குடியரசு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கிழக்கு நோக்கிச் செயல்படும் கொள்கை உருவான பின்பு பசிஃபிக் தீவு நாடுகளுடனான இந்தியாவின் உறவு மேலும் ஆழமானது. இதன் விளைவாக இந்திய- பசிஃபிக் தீவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கான அரங்கு என்ற செயல்திறன் மிக்கதொரு ஏற்பாடும் உருவானது. இந்த அரங்கின் முதலாவது, இரண்டாவது கூட்டங்கள் முறையே 2015-ம் ஆண்டில் ஃபிஜி தீவுகளிலும் 2016-ம் ஆண்டில் ஜெய்ப்பூரிலும் நடைபெற்றன. இந்த அரங்கின் உச்சிமாநாடுகளில் உரையாற்றுகையில் பசிஃபிக் தீவு நாடுகளுடன் நெருங்கிய கூட்டாளியாக இருக்க இந்தியா விரும்புவதாகத் தெரிவித்ததோடு, இந்த நாடுகளின் மேம்பாட்டிற்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் நெருக்கமாகச் செயல்படவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்திருந்தார். ஐநா சபையின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் தருணத்தில் பல நாட்டுத் தலைவர்களையும் ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையில் இந்திய – பசிஃபிக் தீவு நாடுகளின் தலைவர்களை பிரதமர் நேரடியாகச் சந்தித்துப் பேசியது இதுவே முதல்முறையாகும்.
நீடித்து நிற்கும் மேம்பாட்டிற்கான இலக்குகளை அடைவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, பேரழிவுகளைத் தடுப்பதற்கான உள்கட்டமைப்பிற்காக புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டணியில் சேருவது, கொள்திறனை வளர்த்தெடுப்பது, இந்திய-ஐநாவின் வளர்ச்சிக்கான கூட்டணி நிதியின்கீழ் திட்டங்களை நிறைவேற்றுவது, இந்திய-பசிஃபிக் தீவு நாடுகளின் தலைவர்களின் ஒத்துழைப்பிற்கான எதிர்கால செயல்திட்டம் ஆகிய விஷயங்கள் குறித்தும், வளர்ச்சி குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வது குறித்தும் இந்தத் தலைவர்கள் விரிவாக விவாதித்தனர்.
இந்தியாவும், பசிஃபிக் தீவு நாடுகளும் ஒரே மாதிரியான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன என்றும் எதிர்காலத்தை பகிர்ந்து கொள்பவையாகவும் திகழ்கின்றன என்றும் பிரதமர் மோடி இத்தருணத்தில் வலியுறுத்தினார். மேம்பாடு குறித்த கொள்கைகள் மக்கள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், ஏற்றத்தாழ்வைக் குறைத்து நீடித்து நிற்பதாகவும், மக்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பங்களிப்பதாகவும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதாகவும் இருப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதில் இந்தியாவும் உறுதியோடு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேவையான வளர்ச்சிசார்ந்த மற்றும் தொழில்நுட்ப உதவியின் மூலம் வளர்ச்சிக்கான தங்களது இலக்குகளை அடைவதற்கான பசிஃபிக் தீவு நாடுகளின் முயற்சிகளை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார்.
பருவநிலை மாற்றத்தின் யதார்த்தத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை சமாளிக்க மொத்த எரிசக்திப் பயன்பாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மாற்று எரிசக்தியை வளர்த்தெடுப்பதில் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சூரிய ஒளியின் மூலமான மின் உற்பத்திக்கான சர்வதேச கூட்டணியில் இந்தப் பகுதியைச் சேர்ந்த பல நாடுகளும் இணைந்திருப்பது குறித்தும் அவர் தனது திருப்தியை தெரிவித்துக் கொண்டதோடு, இந்த முன்முயற்சியில் இணையுமாறு மற்றவர்களையும் கேட்டுக் கொண்டார். பேரழிவுகளைத் தடுப்பதற்கான உள்கட்டமைப்பிற்காக புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டணியில் சேரவும் பசிஃபிக் தீவு நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
“அனைவரோடு இணைந்து, அனைவரின் மேம்பாட்டிற்காக, அனைவரின் நம்பிக்கையைப் பெறுவது” என்ற தனது தாரக மந்திரத்தின் அடிப்படைக்கு உகந்த வகையில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சித் திட்டத்தை தங்களுக்கு விருப்பமான பகுதியில் நிறைவேற்றிக் கொள்ள உதவும் வகையில் ஒவ்வொரு பசிஃபிக் தீவு நாடுகளுக்கும் தலா ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற விகிதத்தில் மொத்தம் 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியையும் பிரதமர் மோடி இத்தருணத்தில் அறிவித்தார். மேலும் சூரிய ஒளியின் மூலமான மின் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி, பருவநிலை தொடர்பான திட்டங்களை மேற்கொள்வதற்கென இப்பகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டின் தேவையின் அடிப்படையில் நிதியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான சலுகையுடன் கூடிய கடன் வசதியை இந்தியா வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நாடுகளின் தனித்திறனை வளர்த்தெடுக்க மேம்பாட்டு உதவியை வழங்குவது, பயிற்சி வழங்குவதற்காக தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்பி வைப்பது, கூட்டாளி நாடுகளால் அடையாளம் காணப்பட்ட துறைகளில் முன்னுரிமை அடிப்படையில் வெளியுறவு சேவை நிறுவனத்தில் பசிஃபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்குப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட சிறப்பு படிப்புகளுக்கு இந்திய தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்வது ஆகியவை குறித்தும் தனது உறுதிப்பாட்டை பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினார். சுகாதாரத் துறையில் ‘மனித நேயத்திற்காக இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் பசிஃபிக் பகுதியில் ஒரு மையத்தை ஏற்படுத்தி ஜெய்ப்பூர் செயற்கை கை,கால் உறுப்புகள் பொருத்தும் முகாமை ஏற்பாடு செய்யவும் பிரதமர் முன்வந்தார்.
நாட்டுமக்களிடையே நேரடித் தொடர்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த நாடுகளின் புகழ்பெற்ற நபர்கள் இந்தியாவிற்கு வருகை தர மரியாதைக்குரிய விருந்தினர்கள் திட்டம் ஒன்றையும் பிரதமர் இத்தருணத்தில் அறிவித்தார். இத்தீவு நாடுகளிலிருந்து நாடாளுமன்ற தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை தொடரும் வகையில் 2020-ம் ஆண்டு முதல் பகுதியில் போர்ட் மோர்ஸ்பியில் நடைபெறவுள்ள இந்திய- பசிஃபிக் தீவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கான அரங்கின் மூன்றாவது உச்சிமாநாட்டிற்கு வருகை தருமாறு இந்நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் பிரதமர் வரவேற்றார்.
இருதரப்பு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி முன்வைத்த முன்முயற்சி நடவடிக்கைகளை பசிஃபிக் தீவு நாடுகளின் தலைவர்கள் வரவேற்றதோடு, தங்களது அரசுகள் இவற்றுக்கு முழுமையான ஆதரவு தரும் எனவும் குறிப்பிட்டனர்.