மேன்மைமிகு உஸ்பெகிஸ்தான் அதிபர் அவர்களே, வணக்கம்!
டிசம்பர் 14 அன்று பதிவியேற்ற ஐந்தாம் ஆண்டுக்குள் நுழைவதற்காக தங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வருடம் உஸ்பெகிஸ்தான் வருவதற்கு நான் மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால், கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக அது இயலவில்லை. ஆனால், தற்போதைய ‘எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம்’ காலத்தில், காணொலி மூலம் தங்களை சந்திப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவும், உஸ்பெகிஸ்தானும் வரலாற்று சிறப்புமிக்க கலாச்சாரங்களைக் கொண்டவை. பண்டைய காலத்தில் இருந்து நமது தொடர்புகள் நீடித்து வந்திருக்கிறது.
நமது பிராந்தியத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த நமது புரிதல் மற்றும் அணுகல் ஒத்து இருக்கிறது. அதனால் நமது உறவு வலுவானதாக இருக்கிறது.
2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தாங்கள் இந்தியாவுக்கு வருகை தந்த போது, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கும் வாய்ப்பை நாம் பெற்றோம். அதன் மூலம் நமது உறவுகளுக்கு புதியதொரு உத்வேகம் கிடைத்தது.
தீவிரவாதம், அடிப்படைவாதம் மற்றும் பிரிவினைவாதம் குறித்து ஒரே மாதிரியான கவலைகளை நாம் கொண்டிருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் இருவரும் உறுதியாக இருக்கிறோம். பிராந்திய பாதுகாப்பு விஷயங்களிலும் நாம் ஒரே மாதிரியான அணுகலை வைத்திருக்கிறோம்.
ஆப்கானிஸ்தான் அமைதி செயல்பாடு, ஆப்கானிஸ்தான் தலைமையில், ஆப்கானிஸ்தானால், ஆப்கானிஸ்தான் கட்டுப்பாட்டில் நடைபெற வேண்டுமென்பதில் நாம் இருவரும் உடன்படுகிறோம். கடந்த இரு தசாப்தங்களின் பலன்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
சமர்கண்டில் இருந்து கடந்த வருடம் தனது பயணத்தை தொடங்கிய இந்திய–மத்திய ஆசிய பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்பை இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இணைந்து எடுத்தன.
கடந்த சில வருடங்களாக நமது பொருளாதாரக் கூட்டு வலுவடைந்திருக்கிறது.
உஸ்பெகிஸ்தானுடனான வளர்ச்சிக் கூட்டணியை மேலும் தீவிரப்படுத்த நாம் விரும்புகிறோம்.
இந்திய கடனுதவியுடன் பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்படுகின்றன என்பதை அறிந்து மகிழ்கிறேன்.
இந்தியாவின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை தங்களது வளர்ச்சிக்காக பகிர்ந்து கொள்ள நாங்கள் தயராக இருக்கிறோம்.
உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், பயிற்சி மற்றும் திறன்வளர்த்தல் போன்ற துறைகளில் இந்தியாவுக்கு நிபுணத்துவம் உள்ளது. இது உஸ்பெகிஸ்தானுக்கு பயன்படலாம். நமது இரு நாடுகளுக்கிடையேயான வேளாண்மை கூட்டுப் பணிக் குழு குறிப்பிடத்தக்க மற்றும் நேர்மறை நடவடிக்கை ஆகும். நமது பரஸ்பர வேளாண் வர்த்தகத்தை விரிவாக்கும் வாய்ப்புகளை இது வழங்கி, இரு நாடுகளின் விவசாய சமுதாயத்துக்கு உதவும்.
நமது பாதுகாப்புக் கூட்டு இருதரப்பு உறவுகளின் வலுவான தூணாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
நமது ராணுவத்தினர் கடந்த வருடம் தங்களது முதல் கூட்டு பயிற்சியை மேற்கொண்டனர். விண்வெளி மற்றும் அணுசக்தி துறைகளிலும் நாம் இணைந்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
கொவிட்-19 பெருந்தொற்றின் கடினமான காலகட்டத்திலும், மருந்து விநியோகம், மக்களின் பாதுகாப்பான பயணம் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தது திருப்தி அளிக்கிறது.
நமது மாநிலங்களுக்கிடையேயான கூட்டுறவும் அதிகரித்து வருகிறது. ஹரியானா மற்றும், ஃபர்கானாவுக்கிடையேயான உறவு, குஜராத் மற்றும் அண்டிஜானின் வெற்றிகரமான உதாரணத்தின் அடிப்படையில் தற்போது கட்டமைக்கப்படுகிறது.
தங்களது சிறப்பான தலைமையின் கீழ் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை உஸ்பெகிஸ்தான் கண்டு வருகிறது. இந்தியாவும் சீர்திருத்தங்களின் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது.
கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை இது விரிவாக்கும்.
நமது இன்றைய ஆலோசனை இந்த முயற்சிக்கு புதிய பாதையையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
தொடக்கவுரை ஆற்ற வருமாறு தங்களை அழைப்பதை கவுரமாகக் கருதுகிறேன்.
நன்றி!!
குறிப்பு: இது, பிரதமர் இந்தியில் ஆற்றிய உரையின், உத்தேசமான மொழிபெயர்ப்பாகும்.