ஹர ஹர மகாதேவ், வாரணாசி மக்களுக்கு வாரணாசி சேவகரின் வாழ்த்துக்கள்! இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து மருத்துவர்களையும் வாழ்த்துகிறேன். மருத்துவப் பணியாளர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனைகளில் தூய்மையைப் பராமரிக்கும் முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ள சகோதர, சகோதரிகள், கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! இந்தச் சமயத்தில் நான் உங்களுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், சூழ்நிலை காரணமாக உங்களை மெய்நிகர் வடிவில் சந்திக்க வேண்டியதாயிற்று. ஆனால், நான் எதைச் செய்தாலும் அது காசியை உத்தேசித்தே செய்கிறேன் என்பதே உண்மை.
நண்பர்களே, 2021-ம் ஆண்டு நல்ல தீர்மானங்களுடன் தொடங்கியுள்ளது. இன்று, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி வழங்கும் திட்டம் நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. முதல் இரண்டு கட்டங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. இன்று, இந்தியா தனது இரண்டு சொந்த தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. விரைவில் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தடுப்பூசிகளை விரைவாக கொண்டு செல்ல தயாராகி வருகிறது. இந்த விஷயத்தில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளதுடன், மற்ற நாடுகளுக்கும் உதவி வருகிறது.
நண்பர்களே, கடந்த ஆறு ஆண்டுகளில் வாரணாசியிலும், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் மருத்துவ உள்கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது பூர்வாஞ்சல் பகுதி முழுவதற்கும் கொரோனா காலத்தில் உதவிகரமாக இருந்துள்ளது. இதே வேகத்தில் இன்று தடுப்பூசி போடுவதற்கும் வாரணாசி தயாராகி உள்ளது. இதற்காக, பதினைந்து மையங்கள் உருவாக்கப்பட்டு, சுகாதாரத் துறையைச் சேர்ந்த சுமார் 20,000 பேருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது. அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். யோகி அரசுக்கும், அதன் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
நண்பர்களே, வாரணாசியில் உங்கள் அனுபவம் என்ன? தடுப்பூசியில் ஏதாவது பிரச்சினை உள்ளதா? இது பற்றி தெரிந்து கொள்வதற்காகவே நான் உங்களிடம் வந்துள்ளேன். காசி மக்களின் அனுபவங்கள் எனக்கு பயன்படும். என்னிடம் முதலில் வாரணாசி மாவட்ட மகளிர் மருத்துவமனை தலைவர் சகோதரி புஷ்பா பேசுவார் என அறிவித்துள்ளனர். வணக்கம் புஷ்பா ஜி,
புஷ்பா தேவி; மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என் பெயர் புஷ்பா தேவி. இந்த மருத்துவமனையில் நான் ஓராண்டாக பணியாற்றி வருகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி; நல்லது, முதல் கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களில் நீங்களும் ஒருவர் என்பதால், உங்களுக்கு வாழ்த்துக்கள். கொரோனாவைப் பார்த்து மக்கள் அஞ்சிய காலம் ஒன்று உண்டு. இப்போது நிலைமை என்ன என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாடும் உங்களை இப்போது கவனிக்கிறது.
புஷ்பா தேவி; முதலில் எனது சுகாதார பணியாளர்கள் சார்பில் தடுப்பூசிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் நானும் ஒருவர். நான் இப்போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். எனது குடும்பத்தினரும் மற்றவர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். இதில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை என்று கூறி, செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு நான் அறிவுறுத்தி வருகிறேன். எனக்கு தடுப்பூசியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மற்ற தடுப்பூசிகளைப் போலவே இதுவும் உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
பிரதமர்; இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரித்திருப்பது பெருமை அளிக்கும் விஷயமாகும். ஆனால், அதன் வெற்றி உங்களைப் போன்ற லட்சக்கணக்கான முன்களப்பணியாளர்களையே சாரும். உங்களுக்கு தடுப்பூசியால் எந்த பிரச்சினையும் இல்லை, பக்க விளைவுகள் இல்லை என்று கூறிகிறீர்கள். இதை நம்பிக்கையுடன் மற்றவர்களுக்கு தெரிவிப்பீர்களா?
புஷ்பா தேவி; ஆம்.
பிரதமர்; நான் கேட்பது புரிகிறதா?
புஷ்பா தேவி; ஆம் ஐயா!
பிரதமர் நரேந்திர மோடி; இது ஒரு வழக்கமான தடுப்பூசியைப் போல உள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால். சிலருக்கு இது பற்றி தயக்கம் உள்ளதே? நீங்கள் மருத்துவத் துறையில் இருக்கிறீர்கள். தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு, மக்களுக்கு உறுதி அளியுங்கள்.
புஷ்பா தேவி; மக்களிடம் உறுதியளிக்க வேண்டியது அவசியமாகும். ஒன்பது மாதங்களுக்குள் பிரதமரால் இந்த தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. இதில் எந்த வித தயக்கமும் தேவையில்லை. இதனால் பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே, ஒவ்வொருவரும் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி; சரியாகச் சொன்னீர்கள் புஷ்பாஜி. தடுப்பூசி தயாரிப்பு முற்றிலும் அறிவியல் நடைமுறையாகும். நமது விஞ்ஞானிகள் கடினமாக உழைத்து இதனை கொண்டு வந்துள்ளனர். ஏன் இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை என்று எனக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் நான் விஞ்ஞானிகள் சொன்னதை கூறினேன். இது அரசியல்வாதிகள் தீர்மானிப்பதல்ல. வாழ்த்துக்கள் புஷ்பாஜி, ஆரோக்கியமாக இருந்து தொடர்ந்து தொண்டாற்றுங்கள்.
பிரதமர் நரேந்திர மோடி; வணக்கம் ராணிஜி.
ராணி குன்வர் ஶ்ரீவத்சவ்; வணக்கம் ஐயா. காசி மக்களின் சார்பில் நான் மாண்புமிகு பிரதமரை வாழ்த்துகிறேன். என் பெயர் ராணி குன்வர் ஶ்ரீவத்சவ். நான் ஆறு ஆண்டுகளாக இந்த மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றுகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி: இந்த ஆறு ஆண்டுகளில் எத்தனை பேருக்கு நீங்கள் தடுப்பூசி போட்டுள்ளீர்கள்? ஒரு நாளில் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடுவீர்கள்?
ராணி; ஐயா, நாங்கள் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடுவோம்.
பிரதமர் நரேந்திர மோடி; நீங்கள் ஏராளமானோருக்கு தடுப்பூசி போட வேண்டியதிருக்கும். உங்கள் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்படும் போலிருக்கிறதே.
ராணி; தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது என் பாக்கியமே.
பிரதமர் நரேந்திர மோடி; மக்களும் உங்களை வாழ்த்துவார்கள்.
ராணி; ஆமாம் ஐயா, நான் பலருடைய ஆசிகளைப் பெற்றுள்ளேன். என்னுடன் சேர்ந்து, 10 மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்கச் செய்த உங்களை மக்கள் வாழ்த்துகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி: இதற்கு நான் உரிமை கொண்டாட முடியாது. முதலில் நீங்கள்தான் இதற்கு உரிமையாளர்கள். ஏனெனில், துணிச்சலுடன் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தொண்டாற்றியவர்கள் உங்களைப் போன்றவர்கள்தான். இதே போல விஞ்ஞானிகளுக்கும் இதில் பங்குண்டு. உங்களது நம்பிக்கையை மக்களிடம் கொண்டு சென்று பரப்புங்கள். எனது வாழ்த்துக்கள் ராணிஜி, நன்றி.
ராணி; நன்றி ஐயா, வணக்கம்.
பிரதமர் நரேந்திர மோடி: வணக்கம் டாக்டர்.
டாக்டர் வி.சுக்லா; வாழ்த்துக்கள் சார், நான் டாக்டர் வி. சுக்லா, முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மருத்துவமனை, வாரணாசி. எனது மருத்துவ சகாக்கள் சார்பில் வாழ்த்துக்கள்.
பிரதமர் நரேந்திர மோடி; ஆம் சுக்லாஜி. உங்களது அனுபவம் என்ன? நமது காசி மக்களுக்கு திருப்தியா?
டாக்டர் சுக்லா; அவர்கள் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர் சார். ஒவ்வொருவரிடமும் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. குறுகிய காலத்தில், வளர்ந்து வரும் நாடான நாம், தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். முதல் தடுப்பூசிக்கு நீங்கள் எங்களைத் தேர்வு செய்துள்ளீர்கள். நாங்கள் மிகவும் பெருமையாக உணர்கிறோம். எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி; நானும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், மருத்துவர்களாகிய நீங்கள் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளீர்கள். இந்த நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றியதில் கொரோனா முன்களப் பணியாளர்களின் பங்கு மிக அதிகம் என நான் மீண்டும், மீண்டும் கூறி வருகிறேன். சரி, சுக்லாஜி உங்கள் அனுபவத்தைக் கூறுங்கள்.
டாக்டர் சுக்லா; சார், எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு முதலில் தடுப்பூசி போட வைத்திருப்பது எங்களிடம் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. மேலும் அதிக முனைப்புடன் எங்கள் பணியை மேற்கொள்வோம். மருத்துவர்களாகிய நாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டது மக்களிடையே, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி: கடவுள் நம்மிடம் அன்பு காட்டியுள்ளார். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக, கழிவறைகள் கட்டுவது, தூய்மை விழிப்புணர்வு என அரசு மேற்கொண்ட சுகாதார திட்டங்கள், ஏழை மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இந்த நோய் பரவாமல் தடுத்ததற்கு முக்கிய காரணம். மருத்துவர்களின் இடையறாத உழைப்பும் இறப்பு விகிதம் குறைவாக இருந்ததற்கு காரணமாகும். உங்கள் தோழர்களிடம் நம்பிக்கை உணர்வு எந்த அளவில் உள்ளது?
டாக்டர் சுக்லா: அது மிக அதிகமாக உள்ளது. மக்கள் முற்றிலும் திருப்தி அடைந்துள்ளனர். யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை. எல்லா தடுப்பூசிகளையும் போல, தலைவலி, காய்ச்சல், சளி என்பது இதிலும் இருக்கும் ஆனால், அதனால், கவலைப்பட வேண்டியதில்லை. மக்களுக்கு அச்சத்தைப் போக்கவே, நாங்கள் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். இது மக்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி; மக்கள் பல்வேறு கேள்விகளை கேட்பார்களே, எப்படி கையாளுகிறீர்கள்?
டாக்டர் சுக்லா; ஒவ்வொரு தடுப்பூசிக்கும் பின்னால் சிறு அளவில் பக்க விளைவு வருவது வழக்கம்தான் என நாங்கள் மக்களிடம் எடுத்துக் கூறுகிறோம். நேற்று வரை, நாட்டில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், ஒரு சிலருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. தடுப்பூசி போடுபவர்கள் அரை மணி நேரம் உட்கார வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அதன்பின்பு அவர்கள் வழக்கமான வேலையைச் செய்யலாம். இதய நோய், புற்றுநோய் போன்ற தீவிர நோயாளிகளுக்கும் தடுப்பூசி அவசியமாகும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுப்பூசியுடன் தொடர்புபடுத்த முடியாது. இந்தியாவைப் போல வேறு எங்கும் இத்தகைய பெரிய தடுப்பூசி அளிக்கும் திட்டத்தை இதுவரை நடைமுறைப்படுத்தியதில்லை.
பிரதமர் நரேந்திர மோடி: உங்களது முயற்சி பாராட்டுதலுக்குரியது. உங்களுக்கும், உங்களது குழுவினருக்கும் வாழ்த்துக்கள்! வணக்கம் ரமேஷ்ஜி,
ரமேஷ் சந்த் ராய்; மாண்புமிகு பிரதமர் அவர்களை வணங்குகிறேன். நான் பண்டிட் தினதயாள் உபாத்யாயா மருத்துவமனையில் ஆய்வக டெக்னீசியனாக பணியாற்றுகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி; நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா?
ரமேஷ் சந்த் ராய்; ஆமாம் சார். முதல் கட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது பெருமை அளிக்கிறது.
பிரதமர்; ஒரு சீனியர் டெக்னீசியன் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், மற்றவர்களிடம் இது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும்.
ரமேஷ் சந்த் ராய்; உண்மை சார். அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம்.
பிரதமர்; உங்கள் குழுவில் நம்பிக்கை அதிகரித்துள்ளதா?
ரமேஷ் சந்த் ராய்; மக்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். முதல் கட்டத்தில் 81 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தனர். 19 பேர் வேறு ஏதோ காரணத்திற்காக வேறு இடத்திற்கு சென்று விட்டனர். ஆனால், எங்கள் மருத்துவமனையில் தொடர்ந்து தடுப்பூசி போட்டு வருகிறோம்.
பிரதமர்; மிகவும் நன்றி. வணக்கம் ஷ்ராங்க்லாஜி,
ஷ்ராங்க்லா சவுகான்; உங்களுக்கு வாழ்த்துக்கள் சார். நான் ஏஎன்எம் ஆக பணியாற்றுகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி; உங்களது சேவை அளப்பரியது. இந்த நெருக்கடியில் உங்களைப் போன்றவர்களின் சேவையை அளவிட முடியாது. இது வரை எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர்? ஒரு நாளில் எத்தனை பேருக்கு ஊசி போடுவீர்கள்?
ஷ்ராங்க்லா சவுகான்; ஜனவரி 16-ம் தேதி நான் முதலில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதே நாளில் 87 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
பிரதமர்; 87 பேருக்கு தடுப்பூசி போடுவது சிறிய விஷயம் அல்ல. அவர்கள் அனைவரும் உங்களை வாழ்த்தியிருப்பார்கள் அல்லவா?
ஷ்ராங்க்லா சவுகான்; ஆம் சார். அனைவரும் பணியில் இருந்தவர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி; உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்களது முயற்சிகள் காரணமாக நீங்கள் அனைவரும் நலமுடன் இருப்பீர்கள், மேலும் சமுதாயத்துக்கு சேவை புரிவீர்கள். இன்று உங்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. காசி மக்களுடன், தடுப்பூசி போடும் நாளில் கலந்துரையாடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த முகாமை முன்னெடுத்து செல்லும் மருத்துவ துறை நண்பர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். காசி மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என நான் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இரண்டாவது கட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடவிருக்கிறோம். காசியின் சேவகர் என்ற முறையில், கூடிய விரைவில் இந்த முயற்சியில் நாம் வெற்றி பெறுவோம் என வேண்டிக் கொள்கிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!
பொறுப்பு துறப்பு; இது ஒரு தோராயமான மொழி பெயர்ப்பு. மூல உரையாடல் இந்தியில் நடத்தப்பட்டது.