அண்மையில் நிறைவடைந்த 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் கலந்துரையாடினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு, இந்தியா அதிக எண்ணிக்கையில் பதக்கம் வெல்லும் வகையில் சிறப்பாக விளையாடி, பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். பதக்கம் வென்றவர்களின் விளையாட்டுத் திறன், இந்தியாவின் நிலையையும், கவுரவத்தையும், அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் தங்களுக்கு கிடைத்துள்ள பெருமை மற்றும் புகழ் காரணமாக கவனத்தை இழந்து விடாமல், தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், பிரதமர் இந்த கலந்துரையாடலின்போது வலியுறுத்தினார். மேலும் தொழில்நுட்ப உதவிகளைப் பயன்படுத்தி, விளையாட்டு வீர்ர்கள் தங்களை சுயமாக மேம்படுத்திக் கொள்வதுடன், உலகின் முன்னணி வீரர்களின் சாதனைகளை அறிந்து அதன் அடிப்படையில் தங்களது திறமைகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் எனவும், அவர் கேட்டுக் கொண்டார்.
மிகவும் ஏழைக் குடும்பங்கள், கிராமப்பகுதிகள் மற்றும் சிறிய நகரங்களில் இருந்து வந்த இளம் வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக விளையாடி பதக்கம் வென்றிருப்பதைப் பார்க்கும்போது, மிகவும் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் தெரிவித்தார். கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களிடம் உண்மையான திறமை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றை கண்டறிந்து அவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்து வெளி உலகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டிற்காக விளையாடி பதக்கம் வென்ற சில வீரர், வீராங்கனைகளின் பெயரைக் குறிப்பிட்ட பிரதமர், அவர்கள் சந்திக்க நேர்ந்த கடினமான சூழ்நிலைகள் பற்றி சுட்டிக்காட்டியபோது மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார். அத்தகைய விளையாட்டு வீரர்களின் மனோதிடம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு தலை வணங்குவதாக குறிப்பிட்ட பிரதமர், இவர்களது முயற்சிகள் நாட்டில் உள்ள மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையட்டும் என்றும் தெரிவித்தார்.
தங்களுக்கு கிடைத்த கவுரவத்தைக் கண்டு, விளையாட்டு வீரர்கள் ஓய்வாக இருந்துவிடக்கூடாது என்று வலியுறுத்திய பிரதமர், எதிர்கால வெற்றிக்காக தொடர்ந்து கடின முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். பதக்கம் வென்றவர்களுக்கு இப்போதுதான் மாபெரும் சவால் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தை இழந்து விடக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) கர்னல். ராஜ்யவர்தன் ரத்தோர் இந்த நிகழ்ச்சியின்போது உடனிருந்தார்.
அவர் தமது தொடக்க உரையில், பிரதமரின் தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் அரசின் முன்முயற்சிகள் காரணமாகத்தான் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரித்ததுடன் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 2010-ஆம் ஆண்டு குவாங்ஷோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெற்ற 65 பதக்கங்களே, இந்தியா இதுவரை வென்ற அதிக பதக்கங்களாக இருந்த நிலையில், தற்போது இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பாங்கில் நடைபெற்ற 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முந்தைய சாதனைகளை முறியடித்து இந்தியா 69 பதக்கங்களை வென்றுள்ளது.