உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சர்வதேச பெட்ரோலிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
ரோஸ்நெப்ட், பாரத் பெட்ரோலியம், ரிலையன்ஸ், சவுதி ஆரம்கோ, எக்ஸ்ஸான் மொபில், ராயல் டச்சு ஷெல், வேதாந்தா, வுட் மேக்கென்ஜி, ஐ.எச்.எஸ். மார்க்கிட், ச்லம்பர்கர், ஹால்லிஸ்பர்ட்டன், எக்ஸ்கோல், ஓ.என்.ஜி.சி., இந்தியன் ஆயில், கெயில், பெட்ரோநெட் எல்.என்.ஜி., ஆயில் இந்தியா, எச்.பி.சி.எல்., டெலோனெக்ஸ் எனர்ஜி, என்.ஐ.பி.எப்.பி., சர்வதேச எரிவாயு யூனியன், உலக வங்கி மற்றும் சர்வதேச எரிசக்தி முகமை ஆகியற்றின் தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர்கள் திரு. தர்மேந்திர பிரதான், திரு. ஆர்.கே. சிங் ஆகியோரும், நிதி ஆயோக், பிரதமரின் அலுவலகம், பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சக மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தை நிதி ஆயோக் அமைப்பு ஒருங்கிணைப்பு செய்திருந்தது. இந்தத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் திரு. ராஜீவ் குமார் ஆகியோர் தங்களுடைய சுருக்கமான உரைகளில் மேலோட்டமாக விவரித்தனர். இந்தியாவில் உள்ள எரிசக்தித் துறை வளர்ச்சிக்கான எதிர்பார்ப்பு குறித்தும் அவர்கள் குறிப்பிட்டனர். மின்சாரமயமாக்கல் மற்றும் சமையல் எரிவாயு விரிவாக்கம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றம் குறித்தும் அவர்கள் பேசினர்.
நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி திரு. அமிதாப் காந்த், தனது சிறிய காட்சி விளக்கத்தின்போது, பெட்ரோலிய எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் இந்தியாவில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், இவற்றில் இனி உள்ள சவால்கள் குறித்தும் விவரித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்களை பல்வேறு பங்கேற்பாளர்கள் பாராட்டினர். எரிசக்தித் துறையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி சீர்திருத்தங்களை வேகமாகவும் முனைப்புடனும் கொண்டு வந்தமைக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். ஒருங்கிணைந்த எரிசக்திக் கொள்கை, ஒப்பந்த வரையறைகள் மற்றும் ஏற்பாடுகள், புவியியல் சார்ந்த தகவல்கள் தொகுப்புகள், பயோ எரிபொருள்களை ஊக்குவித்தல், எரிவாயு கிடைத்தலை மேம்படுத்துதல், எரிவாயுத் தொகுப்பு ஏற்படுத்துதல், ஒழுங்காற்று பிரச்சினைகள் போன்ற அம்சங்களின் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எரிவாயுவையும், மின்சாரத்தையும் ஜி.எஸ்.டி. வரம்பில் சேர்க்க வேண்டும் என பங்கேற்பாளர்கள் பலர் பரிந்துரை செய்தனர். பெட்ரோலிய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலில் சமீப காலங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை வருவாய்த் துறை செயலாளர் திரு. ஹஸ்முக் ஆதியா விளக்கினார்.
தங்கள் கருத்துகளைத் தெரிவித்த பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் திரு. மோடி, 2016-ல் நடைபெற்ற முந்தைய கூட்டத்தில் பெறப்பட்ட பல ஆலோசனைகள், கொள்கை உருவாக்கத்துக்கு உதவிகரமாக இருந்தன என்று தெரிவித்தார். பல்வேறு விஷயங்களில் மேலும் சீர்திருத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். விஷயங்களில் கவனம் செலுத்தி பங்கேற்பாளர்கள் ஆலோசனைகள் தெரிவித்திருப்பதாகப் பிரதமர் பாராட்டினார்.
தங்களுடைய நிறுவனங்களின் நலன்களைப் பற்றி மட்டுமே கருத்தில் கொள்ளாமல், பெட்ரோலிய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்தியாவின் தனித்துவமான தன்மை மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இதயபூர்வமான ஆலோசனைகளைக் கூறியதற்காக, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இன்றைக்கு தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் கொள்கை, நிர்வாகம் மற்றும் ஒழுங்காற்றுப் பிரச்சினைகளை உள்ளடக்கியதாக இருந்தன என்று அவர் கூறினார்.
இந்தியாவின் எரிசக்தித் துறைக்கு தங்களின் ஆதரவை உறுதியுடன் தெரிவித்தமைக்காக ரஷியப் பிரதமர் திரு. விளாடிமிர் புதினுக்கும், ரோஸ்நெப்ட்க்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். சவுதி அரேபியாவின் 2030 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கு ஆவணத்தை அவர் பாராட்டினார். சவுதி அரேபியாவுக்கு தாம் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த அவர், அங்கு எரிசக்தித் துறையில் முன்னேற்றகரமான பல முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். குறுகிய எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
இந்தியாவில் எரிசக்தித் துறையின் நிலை அதிக அளவுக்கு சமநிலையற்று உள்ளதாக பிரதமர் கூறினார். முழுமையான எரிசக்திக் கொள்கை குறித்து தெரிவிக்கப்பட்ட ஆலோசனையை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் எரிசக்தி கட்டமைப்பை மேம்படுத்தி, எரிசக்தி கிடைக்கும் நிலையை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் வலியுறுத்தினார். உயிர்திரள் ஆதாரங்களைக் கொண்ட எரிசக்தித் துறையில் உள்ள வாய்ப்புகளைக் குறிப்பிட்ட அவர், நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தில் கூட்டு முயற்சிகள் மற்றும் பங்கேற்புகளை வரவேற்பதாகத் தெரிவித்தார். பெட்ரோலிய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் புதிய சிந்தனைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தூய்மையான மற்றும் அதிக எரிபொருள் சிக்கன பொருளாதாரத்தை நோக்கி இந்தியா முன்னேறும் போது, இதன் பயன்கள் சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் சம அளவில் இது பரவலாக சென்று சேர வேண்டும் என்றும், குறிப்பாக பரம ஏழைகளுக்கு சென்று சேர வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுக் காட்டினார்.