உணவுப் பதப்படுத்துதல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் ஈடுபட்டுள்ள உலகம் முழுவதையும் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். தற்போது நடைபெற்றுவரும் உலக உணவு இந்தியா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், அமேசான் (இந்தியா), ஆம்வே, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், கார்ஜில் ஆசியா பசிபிக், கோக-கோலா இந்தியா, டான்ஃபோஸ், பியூச்சர் குழுமம், கிளாக்சோ ஸ்மித்கிலைன், ஐசே ஃபுட்ஸ் (Ise Foods), ஐடிசி, கிக்கோமன், லுலு குழுமம், மெக்கெயின், மெட்ரோ கேஷ் மற்றும் கேர்ரி, மோன்டேலேஸ் இன்டர்நேஷனல், நெஸ்லே, ஓஎஸ்ஐ குழுமம், பெப்ஸிகோ இந்தியா, சீல்டு ஏர், சரஃப் குழுமம், ஸ்பேர் இன்டர்நேஷனல், தி ஹெயின் செலஸ்டியல் குழுமம், தி ஹார்ஷி கம்பெனி, டிரென்ட் லிமிடெட், வால்மார்ட் இந்தியா ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த முன்னணி தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல், உணவுப் பதப்படுத்துதல் தொழில் நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
எளிதாக தொழில் செய்வதற்கு வாய்ப்புள்ள நாடுகள் குறித்து உலக வங்கி அண்மையில் வெளியிட்ட பட்டியலில், இந்தியா மிகப்பெரும் அளவில் முன்னேற்றம் அடைந்ததற்காக பிரதமருக்கு பல்வேறு தலைமைச் செயல் அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர். விவசாய வருமானத்தை இரு மடங்காக்கும் பிரதமரின் கனவு மற்றும் பிரதமரின் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்டதாக பல்வேறு தலைமைச் செயல் அதிகாரிகளும் தெரிவித்தனர். குறிப்பாக, கட்டமைப்பு சீர்திருத்தம் மற்றும் ஜிஎஸ்டி, அந்நிய நேரடி முதலீட்டு அமைப்பில் தாராளமயமாக்கல் நடவடிக்கை போன்ற திடமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
விவசாய உற்பத்தி அதிகரிப்பு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, வேலைவாய்ப்பை உருவாக்குதல், விவசாய உற்பத்திப் பொருட்களின் மதிப்பைக் கூட்டுதல் போன்றவற்றுக்கு உணவுப் பதப்படுத்துதல் துறை மிகவும் முக்கியமானது என்று கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எடுத்துரைத்தனர். இந்தியாவின் உணவுப் பதப்படுத்துதல் பணிகள், வேளாண்மை, சரக்கு ஏற்றிச் செல்தல், சில்லரை வர்த்தகம் போன்றவற்றில் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் மற்றும் புதிய முயற்சிகள் குறித்து தலைமைச் செயல் அதிகாரிகள் மேலோட்டமாக விளக்கம் அளித்தனர். அறுவடைக்குப் பிந்தைய கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக நடைமுறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாக அவர்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவின் வளர்ச்சி நடவடிக்கைகளில் தாங்களும் ஒரு அங்கமாக இருக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதற்காக தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர்களின் கருத்துக்களைப் பார்க்கும்போது, இந்தியா மீது மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது வெளிப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். தலைமைச் செயல் அதிகாரிகள் அளித்த முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைகளுக்கு பிரதமர் வரவேற்புத் தெரிவித்தார்.
வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக தலைமைச் செயல் அதிகாரிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். குறிப்பாக, இந்தியாவில் அதிகரித்துவரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்கள், அரசின் கொள்கை அடிப்படையிலான நடவடிக்கைகள் ஆகியவை உணவுப் பதப்படுத்துதல் சுற்றுச்சூழல் அமைப்பில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வெற்றிக்கான வாய்ப்புகளையே ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கான மூலதன செலவைக் குறைக்கவும், விவசாயப் பொருட்களில் சேதங்களால் ஏற்படும் இழப்புகளைப் போக்கவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவுடன் தீவிரமான மற்றும் அதிக உற்பத்தி சார்ந்த பணிகளில் ஈடுபட வேண்டும் என்று உலக தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.