செயல்பாட்டு நிர்வாகம் மற்றும் உரிய காலத்தில் அமலாக்கத்திற்கான பலமுனை அமைப்பைக் கொண்ட தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையிலான பிரகதி மூலம் தமது 29-வது கலந்தாய்வுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (26.09.2018) தலைமைத் தாங்கினார்.
தொலைத்தொடர்புத்துறை சம்பந்தப்பட்ட பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வுகாண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். அண்மையில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப தலையீடுகள் உட்பட இதுதொடர்பான முன்னேற்றம் குறித்து அவரிடம் விவரிக்கப்பட்டது. தொலை தகவல் துறை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அண்மைக் கால தொழில்நுட்பங்கள் அடிப்படையில் தீர்வுகள் காணவேண்டும் என்று பிரதமர் கூறினார். சேவை வழங்குவோர் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச திருப்தியை அளிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதுவரை நடைபெற்ற 28 பிரகதி கூட்டங்களில் ரூ.11.75 லட்சம் கோடி மொத்த முதலீட்டுத் திட்டங்கள் சம்பந்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்து பொதுமக்கள் தெரிவித்துள்ள குறைகளுக்குத் தீர்வுகண்டது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.
இன்றைய 29-வது கூட்டத்தில் ரயில்வே, நகர்ப்புற மேம்பாடு, சாலை, மின்சக்தி, நிலக்கரி உட்பட 8 முக்கியமான அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். உத்தரபிரதேசம், ஜம்மு கஷ்மீர், அரியானா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டங்கள் பரவலாக உள்ளன. பிரதமரின் கனிஜ் ஷேத்ரா கல்யாண் யோஜனாவின் பணிகள் பற்றி குறிப்பாக மாவட்ட சுரங்க அமைப்புகளின் பணிகள் பற்றி பிரதமர் ஆய்வு செய்தார். கனிம வளங்களைகொண்ட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க நிதி தற்போது கிடைப்பதை குறிப்பிட்ட அவர், இந்த நிதி இந்த மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கும் தரமான வாழ்க்கைக்கும் பயன்படுத்தப்படவேண்டும் என்று மத்திய-மாநில அரசு அதிகாரிகளை வலியுறுத்தினார். இந்த மாவட்டங்களில் உள்ள, முன்னேற விரும்பும் மாவட்டங்கள் தங்களின் வளர்ச்சிப் பற்றாக்குறையைப் போக்கிக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.