முனைப்பான ஆளுகை மற்றும் அரசு திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றி முடிக்கவும் வகை செய்யும் பிரகதி திட்டத்தின் 24 ஆவது கலந்துரையாடல் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதற்கு முன் நடைபெற்ற 23 பிரகதி கலந்தாய்வுகளின் போது சுமார் 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 208 திட்டங்கள் பற்றி விரிவான ஆய்வு செய்யப்பட்டது. 17 துறைகளில் பொதுமக்களின் குறைகளுக்கான தீர்வு குறித்தும் ஆராயப்பட்டது.
இன்று நடைபெற்ற 24 ஆவது கூட்டத்தில், உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறு நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். இது வரை மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம் குறித்து மாநில அரசால் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்களையும் பிரதமர் பார்வையிட்டார்.
தில்லி காவல் துறையினர் வழக்குகளை கையாளும் விதம் மற்றும் தீர்வு காணும் விதம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். அப்போது குறைகளை தீர்வு செய்யும் விதத்தின் தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அப்போது பிரதமர் வலியுறுத்தினார்.
தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்திஸ்கர், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா மற்றும் இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வரும் ரயில்வே, சாலை, எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் நிலக்கரித் துறை சார்ந்த 10 அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பீடு 40 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் மகப்பேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.