ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) நாடுகளின் தலைவர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிஷ்கெக் நகருக்கு (கிர்கிஷ் குடியரசு) ஜூன் 13,14, தேதிகளில் நான் பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
இந்தப் பிராந்தியத்தில் பல்முனை, அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு நாம் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழுநேர உறுப்பினராக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வுசெய்யப்பட்டபிறகு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பல்வேறு விவாத வழிமுறைகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்று வருகிறது. கடந்த ஆண்டு முதலே கிர்கிஷ் குடியரசின் தலைமைக்கு நாம் முழு ஆதரவு அளித்து வருகிறோம்.
இந்த மாநாட்டில், சர்வதேச பாதுகாப்பு நிலைமை, பல்முனை பொருளாதார ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மற்றும் சர்வதேச, பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் இடையே, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சு நடத்த நான் திட்டமிட்டுள்ளேன்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு முடிந்தபிறகு, கிர்கிஷ் குடியரசின் அதிபர் விடுத்த அழைப்பை ஏற்று, கிர்கிஷ் குடியரசு நாட்டில் ஜூன் 14, 2019-ல் இருதரப்பு அரசுமுறைப் பயணத்தில் ஈடுபட உள்ளேன்.
இந்தியாவுக்கும், கிர்கிஷ் குடியரசுக்கும் இடையே வரலாற்றுப்பூர்வமான மற்றும் நாகரீக தொடர்பு உள்ளது. பாரம்பரிய முறையில் சிறப்பான மற்றும் நட்புரீதியான உறவை கொண்டுள்ளோம். அண்மைக்காலத்தில், ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவு விரிவடைந்துள்ளது.
நானும், அதிபர் ஜீன்பெக்கோவ்-வும், முழுமையான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதங்களை நடத்துவதோடு, இந்தியா-கிர்கிஷ் வர்த்தக கூட்டமைப்பின் முதல் கூட்டத்தில் கூட்டாக உரையாற்ற உள்ளோம்.
கிர்கிஷ் குடியரசு நாட்டுக்கு நான் மேற்கொள்ள உள்ள பயணம், கிர்கிஷ் குடியரசு நாட்டுடனும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளுடனும் நமது ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதுடன், மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.