பண்டிட் தீன்தயாள் உபாத்யாய பிறந்த நாளையொட்டி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் – ஓ.என்.ஜி.சி. – புதியதொரு சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
சவுபாக்கியா திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி.யின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், நல்ல செயல்திறன் கொண்ட மின்சார அடுப்பை உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு அவர்களை கேட்டுக் கொண்டார். மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்யும் வகையில் அந்த அடுப்பு அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்தக் கண்டுபிடிப்பு மூலமாக, இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை தேசம் நம்பியிருக்க வேண்டிய நிலைமையில், ஒரே செயல்பாடு மூலமாக, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் கூறினார். உலக நாடுகள் மின்சார கார்கள் தயாரிப்பதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில், மின்சார கார்களுடன், மின்சார அடுப்புகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரிய பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார். இந்தத் துறையில் புதுமை சிந்தனைகளை உருவாக்கவும், முயற்சிகளைத் தொடங்கவும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி.யை அவர் கேட்டுக் கொண்டார்.