கேரள ஆளுநர் திரு. ஆரிஃப் முகமது கான் அவர்களே, முதல்வர் திரு.பினராயி விஜயன் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு. ஆர் கே சிங் அவர்களே, திரு. ஹர்தீப் சிங் புரி அவர்களே மற்றும் இதர விருந்தினர்களே
நண்பர்களே,
வணக்கம் கேரளா! பெட்ரோலியத் துறையில் முக்கிய திட்டங்களை திறந்து வைப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு தான் கேரளாவில் இருந்தேன். இன்றைக்கு, தொழில்நுட்பத்தின் காரணமாக, நாம் மீண்டுமொருமுறை இணைந்திருக்கிறோம்.
கேரளாவின் வளர்ச்சி பயணத்தில் முக்கிய நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகிறோம். இன்று தொடங்கும் வளர்ச்சி திட்டங்கள் மாநிலம் முழுவதும் விரவியுள்ளன. பல்வேறு துறைகள் தொடர்புடைய திட்டங்களாக அவை உள்ளன.
இந்தியாவின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்கை ஆற்றி வரும் மக்கள் உள்ள அழகான மாநிலமான கேரளாவை செழுமைப்படுத்தி, அதிகாரமளிக்கும் திட்டங்கள் இவை.
இரண்டாயிரம் மெகாவாட் திறனுள்ள நவீன புகலூர்-திருச்சூர் உயர் மின்னழுத்த நேரடி மின்சார அமைப்பு இன்று தொடங்கப்படுகிறது. தேசிய தொகுப்புடன் இணைந்த கேரளாவின் முதல் உயர் மின்னழுத்த நேரடி மின்சார அமைப்பு இதுவாகும்.
கேரளாவின் முக்கிய கலாச்சார மையமாக திருச்சூர் திகழ்கிறது. தற்போது மின்சார மையமாகவும் திகழும். மாநிலத்தின் வளர்ந்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவைப்படும் மின்சக்தியை இந்த அமைப்பு வழங்கும்.
விஎஸ்சி மின்மாற்று தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதும் இது தான் நாட்டிலேயே முதல் முறையாகும். இது நமக்கு பெருமையளிக்கும் விஷயமாகும்.
நண்பர்களே,
மாநிலத்துக்குள்ளேயே மின்சார உற்பத்தி செய்யும் ஆதாரங்கள், பருவநிலைகளை சார்ந்தே கேரளாவில் உள்ளதால், தேசிய தொகுப்பை நம்பியே பெரும்பாலும் இம்மாநிலம் உள்ளது. இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும். நாம் இதை சாதிக்க உயர் மின்னழுத்த நேரடி மின்சார அமைப்பு உதவும்.
நம்பகத்தகுந்த மின்சாரத்துக்கான அணுகல் தற்போது கிடைத்துள்ளது. வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு மாநிலத்துக்குள்ளான விநியோக வசதிகளை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். மற்றுமொரு விஷயமும் இத்திட்டம் குறித்து என்னை மகிழ்ச்சியடைய வைக்கிறது. இதில் பயன்படுத்தப்பட்ட உயர் மின்னழுத்த நேரடி மின்சார அமைப்பு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். நமது தற்சார்பு இந்தியா இயக்கத்தை இது வலுப்படுத்துகிறது.
நண்பர்களே,
மின்சார விநியோக திட்டத்தை மட்டும் நாம் நாட்டுக்கு அர்ப்பணிக்கவில்லை. மின் உற்பத்தி திட்டம் ஒன்றும் நம்மிடையே உள்ளது. 50 மெகாவாட் திறனுள்ள மற்றுமொரு தூய்மை மின்சார சொத்தான காசர்கோடு சூரிய சக்தி திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பசுமையான மற்றும் தூய்மையான மின்சாரத்திற்கான நமது நாட்டின் கனவை அடைவதை நோக்கிய நடவடிக்கை இதுவாகும். சூரிய சக்திக்கு அதிக முக்கியத்துவத்தை இந்தியா வழங்குகிறது. சூரிய சக்தியில் நாம் வலுவடைவதன் மூலம் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரை நாம் தீவிரப்படுத்துகிறோம்.
நமது தொழில்முனைவோர் ஊக்கம் பெறுகின்றனர். கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளை சூரிய ஒளி மின்சாரத்துடன் இணைத்து, உணவு உற்பத்தியாளர்களான அவர்களை மின்சார உற்பத்தியாளர்களாக மாற்றுவதற்கான பணி நடைபெற்று வருகிறது.
பிரதமரின் சோலார் பம்பு மானிய திட்டத்தின் கீழ், 20 லட்சத்துக்கும் அதிகமான சூரிய சக்தி பம்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு வருடங்களில் இந்தியாவின் சூரிய சக்தி திறன் 13 மடங்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் மூலம் உலகத்தை இந்தியா ஒன்றிணைத்துள்ளது.
நண்பர்களே,
வளர்ச்சிக்கான விசைப்பொறிகளாகவும், புதுமைகளுக்கான சக்தி மையங்களாகவும் நமது நகரங்கள் திகழ்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி, சாதகமான மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் உள்நாட்டு தேவை ஆகிய மூன்று உற்சாகமூட்டும் போக்குகளை நமது நகரங்கள் கண்டு வருகின்றன.
இத்துறையில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் நம்மிடையே உள்ளது. இத்திட்டத்தின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் சிறப்பான நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேலாண்மையில் நகரங்களுக்கு உதவுகின்றன. 54 கட்டளை மைய திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், 30 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன.
பெருந்தொற்று காலத்தில் இந்த மையங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. கேரளாவில் உள்ள இரண்டு ஸ்மார்ட் நகரங்களில், கொச்சியில் கட்டளை மையம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. திருவனந்தபுரத்தில் கட்டுப்பாட்டு மையம் தயாராகி வருகிறது.
ஸ்மார்ட் நகர் திட்டத்தின் கீழ் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை எட்டி வருகின்றன. இது வரை இந்த இரு நகரங்களில் ரூ.773 கோடி மதிப்பிலான 27 திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.
சுமார் ரூ. 2,000 கோடி மதிப்பிலான 68 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
நண்பர்களே,
நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக அம்ருத் உள்ளது. தங்களது கழிவு நீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி, மேம்படுத்திக்கொள்ள நகரங்களுக்கு அம்ருத் உதவுகிறது. ரூ .1,100 கோடி மதிப்பில் மொத்தம் 175 தண்ணீர் விநியோக திட்டங்கள் அம்ருத் திட்டத்தின் கீழ் கேரளாவில் செயல்படுத்தப்படுகின்றன.
ஒன்பது அம்ருத் நகரங்களில் அனைவருக்கும் குடிதண்ணீர் வசதி வழங்கப்பட்டுள்ளது. ரூ. 70 கோடி மதிப்பில் அருவிக்கரையில் நிறுவப்பட்டிருக்கும் ஒரு நாளைக்கு 75 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் ஆலையை இன்றைக்கு நாம் திறந்திருக்கிறோம்.
13 லட்சம் மக்களின் வாழ்க்கை தரத்தை இது மேம்படுத்தும். எனது அமைச்சரவை சகா கூறியபடி, ஒரு நபருக்கு 100 லிட்டர் தண்ணீர் திருவனந்தபுரத்தில் இது வரை விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், அதை 150 லிட்டர்களாக உயர்த்த இத்திட்டம் உதவும்.
நண்பர்களே,
பேரரசர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பேரரசர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை ஊக்கமளிக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் வளர்ச்சியின் பலன்கள் சென்றடையும் சுயராஜ்ஜியத்திற்கு அவர் முக்கியத்துவம் அளித்தார்.
இந்தியாவின் கடற்கரைகளோடு அவருக்கு சிறப்பானதொரு பந்தம் இருந்தது. வலுவான கடற்படையை கட்டமைத்த அவர், கடற்கரை மேம்பாடு மற்றும் மீனவர் நலனுக்காக கடுமையாக உழைத்தார். அவரது பணியை நாம் தொடர்கிறோம்.
பாதுகாப்புத் துறையில் தற்சார்படையும் பாதையில் இந்தியா சென்றுக் கொண்டிருக்கிறது. ராணுவம் மற்றும் விண்வெளி துறைகளில் இது வரை இல்லாத அளவிற்கு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
திறமையுள்ள பல இந்திய இளைஞர்களுக்கான வாய்ப்புகளை இந்த முயற்சிகள் அளிக்கும். அதே போன்று, சிறப்பான கடற்கரை உள்கட்டமைப்புக்கான மிகப்பெரிய நடவடிக்கையை நமது நாடு தொடங்கியுள்ளது.
நீலப் பொருளாதாரத்தில் இந்தியா முதலீடு செய்கிறது. நமது மீனவர்களின் முயற்சிகளை நாம் மதிக்கிறோம். அதிக கடன், அதிகளவில் தொழில்நுட்பம், உயர்தர உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவான அரசு கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மீனவ சமூகங்களுக்கான நமது முயற்சிகள் அமைந்துள்ளன.
விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கும் தற்போது கிடைக்கின்றன. அவர்களது கடல் பயணத்தில் உதவுவதற்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த நாம் ஊக்குவிக்கிறோம். அவர்கள் பயன்படுத்தும் படகுகளை நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கடல் உணவு ஏற்றுமதியின் மையமாக இந்தியா உருவாவதை அரசு கொள்கைகள் உறுதி செய்யும். கொச்சியில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டிலேயே செய்யப்பட்டுள்ளது.
நண்பர்களே,
மாபெரும் மலையாள கவிஞர் குமரன் ஆசான் இவ்வாறு கூறினார்: நான் உன்னுடைய ஜாதியை கேட்கவில்லை சகோதரி, நான் தண்ணீர் கேட்கிறேன், எனக்கு தாகமாக உள்ளது. வளர்ச்சி மற்றும் நல்ல ஆளுகைக்கு ஜாதி, பிரிவு, இனம், பாலினம், மதம் அல்லது மொழி தெரியாது. வளர்ச்சி என்பது அனைவருக்குமானது. அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காகவும், அனைவரின் நம்பிக்கையுடனும் என்பதன் சாரம்சம் இது தான்.
வளர்ச்சியே நமது இலக்கு. வளர்ச்சியே நமது மதம். ஒற்றுமை மற்றும் வளர்ச்சி என்னும் லட்சியத்தை அடைய நாம் அனைவரும் முன்னேறி செல்வதற்கு கேரள மக்களின் ஆதரவை நான் கோருகிறேன். நன்றி! வணக்கம்!