பிரதமர் திரு.நரேந்திர மோடி தீவுகளின் முழுமையான வளர்ச்சியின் முன்னேற்றம் குறித்து இன்று (30.06.2018) ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதியன்று தீவுகள் மேம்பாட்டு முகமையை அமைத்தது. அதில் முழுமையான வளர்ச்சிக்கான 26 தீவுகள் பட்டியலிடப்பட்டன.
தீவுகளின் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்கள், மின்னணு தொடர்பு, பசுமை எரிசக்தி, கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், கழிவு மேலாண்மை, மீன்வள மேம்பாடு, சுற்றுலா சார்ந்த திட்டங்கள் உள்பட அவற்றின் முழுமையான வளர்ச்சியின் அம்சங்கள் குறித்து நிதி ஆயோக் செயல்முறை விளக்கப்படத்தை வழங்கியது.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிரதமர், சுற்றுலா மேம்பாட்டுக்காக கண்டறியப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த சுற்றுலாவை மையப்படுத்தும் சுற்றுச்சூழல் முறையை மேம்படுத்துவது அவசியம் என வலியுறுத்தினார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினர் செல்லக்கூடாத கட்டுப்பாடு நிறைந்த பகுதிகளுக்கு அனுமதி அளிப்பதைத் தவிர்ப்பது பற்றிய மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவு குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. தென்கிழக்காசியாவுடன் இந்தத் தீவுகளின் தகவல் தொடர்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது.
லட்சத்தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன்னேற்றம் பற்றி பிரதமர் ஆய்வு செய்தபோது, டுனா என்னும் மீன்களைப் பிடித்திட ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் லட்சத்தீவு கடற்பகுதியில் பிடிபடும் டுனா மீன்களை “லட்சத் தீவுகள் டுனா” என்னும் வணிக முத்திரையை உருவாக்குவது பற்றியும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. தூய்மையைப் பராமரிப்பதில் லட்சத்தீவுகள் நிர்வாகம் எடுத்துள்ள முன் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.
அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளின் வளர்ச்சிக்கான முக்கிய அம்சமான உள்கட்டமைப்பு மேம்பாடு பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கடற்பாசி வகைகளை வளர்ப்பது, வேளாண்துறைக்கு உதவிகரமாக இருக்கக்கூடிய இதர முன்முயற்சிகளுக்கான வாய்ப்புகள் பற்றி ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், அந்தமான் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகளின் துணைநிலை ஆளுநர்கள், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.