மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட உள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (04.08.2018) ஆய்வு செய்தார்.
இந்தத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, தரமான, அதிநவீன சுகாதார சேவைகள் கிடைக்கச் செய்யும் வகையில், இந்தக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை, நித்தி ஆயோக் மற்றும் பிரதமர் அலுவலக உயரதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு மற்றும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்தப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.
சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள முன்னேற்றத்தை விரும்பும் பிஜப்பூர் மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற விழாவில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முதலாவது “சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தை” பிரதமர் தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.