ஆயுஷ்மான பாரதம் கீழ் சுகாதார உறுதித் திட்டம் என்னும் இலட்சியத் திட்டம் தொடக்கத்திற்கான ஏற்பாடுகளில் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்.
இந்த சுகாதார உறுதித் திட்டத்தை சுமுகமாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலங்களுடன் ஆலோசனைகள் உள்ளிட்ட ஏற்பாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்ட்து.
குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ. 5 லட்சம் வரையிலான நிதியுதவியை இந்தத் திட்டம் அளிக்கிறது. 10 கோடி ஏழை மற்றும் நலிந்த குடும்பங்களை இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் உள்ள ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டக் குடும்பங்களுக்கு அதிகபட்சப் பயன்களை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை, நிதி ஆயோக் மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள் இந்தத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கினார்கள்.
கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஆயுஷ்மான பாரத் கீழ் முதலாவது ஆரோக்கிய மற்றும் நல்வாழ்வு மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.