மின்சாரம், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி, சுரங்கம் ஆகிய முக்கியமான துறைகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினார். இரண்டு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைகள், நிதி ஆயோக் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிதி ஆயோக் முதன்மை செயல் அலுவலர் திரு அமிதாப் காந்த், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின் உற்பத்தித் திட்டங்களின் திறன் 344 கிகாவாட்ஸ் ஆக உயர்ந்துள்ளது என்று விவரித்தார். 2014ம் ஆண்டு நாட்டின் மின்சாரப் பற்றாக்குறை 4 சதவீதமாக இருந்தது. தற்போது 2018ம் ஆண்டு ஒரு சதவீதம் மட்டுமே மின்சாரப் பற்றாக்குறை இருக்கிறது. மின் பகிர்வு தடங்கள், மின்மாற்றியின் திறன், மண்டலத்துக்கு இடையிலான மின் பகிர்வு குறிப்பிடத் தக்க அளவு திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
மின்சாரம் எளிதில் பெறுவதற்கான அட்டவணையை (Ease of Getting Electricity Index) பொறுத்தவரையில் 2014ம் ஆண்டு இந்தியா 99வது இடத்தில் இருந்தது. தற்போது 26 இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றார் அவர்.
இக்கூட்டத்தில் சவுபாக்கியா (SAUBHAGYA) முன்முயற்சியின் மூலம் வீடுகளுக்கு மின் இணைப்புத் தரும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் மின்சார மின் இணைப்பு முதல் விநியோகம் வரையில் அம்சங்களும் விவாதிக்கப்பட்டது. மாற்று எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறையில் மொத்த நிறுவப்பட்ட திறன் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. 2013-14ம் ஆண்டில் 35.5 கிகாவாட்ஸ் ஆக இருந்த திறன் 2017-18ம் ஆண்டில் 70 கிகாவாட்ஸாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் சூரிய சக்தியைப் பொறுத்தவரையில் மின்திறன் 2.6 கிகாவாட்ஸிலிருந்து 22 கிகாவாட்ஸாக உயர்ந்துள்ளது. 2022ம் ஆண்டில் மின்சாரத் திறன் 175 கிகாவாட்ஸ் எட்டுவதற்காக பிரதமர் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதில் நம்பிக்கையோடு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூரிய சக்தி உற்பத்தியின் பலன்கள் முழுமையாக விவசாயிகளுக்குச் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சூரிய சக்திக் குழாய்கள், எளிதில் இயங்கும் சூரிய சக்தி குக்கர் போன்றவற்றின் மூலம் விவசாயிகளுக்கு அந்தப் பலன் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தினார். பெட்ரோலியத் துறையைப் பொறுத்தவரையில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நடப்பு நிதியாண்டிலேயே எளிதில் அடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
நிலக்கரித் துறையைப் பொறுத்தவரையில் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.