முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (07.08.2019) புதுதில்லியில் அவரது இல்லத்தில் புகழஞ்சலி செலுத்தினார்.
சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், “இந்திய அரசியலில் புகழுக்குரிய ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் சேவைக்காகவும், ஏழைகளின் வாழ்க்கை மேம்படவும் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட சிறந்ததொரு தலைவரின் மறைவுக்கு இந்தியா வருந்துகிறது. சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் இரக்க குணம் பல கோடி மக்களின் ஈர்ப்பு சக்தியாக இருந்தது.
சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் அனல் தெறிக்கும் பேச்சாளர், மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி. கட்சி எல்லைகளுக்கு அப்பால் அவர் மதிக்கத்தக்கவராகவும், பாராட்டப்படுபவராகவும் விளங்கினார். சித்தாந்த விஷயங்கள், பாஜக நலன் ஆகியவற்றில் அவர் சமரசமற்றவராக இருந்தார். கட்சியின் வளர்ச்சிக்குத் தீவிரமான பங்களிப்பைச் செய்தார்.
மிகச் சிறந்த நிர்வாகியான சுஷ்மா அவர்கள், தாம் வகித்த அமைச்சர் பதவிகளுக்கு உயர்ந்த தரத்தை அளித்தார். பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை மேம்படுத்தியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருந்தது. ஒரு அமைச்சராக அவரிடம் நம்மால் கருணையையும் காண முடிந்தது. உலகின் எந்தப் பகுதியில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்து வந்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் வெளியுறவு அமைச்சராக சுஷ்மா அவர்கள் ஓய்வின்றி பணியாற்றிய விதத்தை என்னால் மறக்க முடியாது. உடல்நிலை சரியாக இல்லாத போதும் தமது பணிக்கு சாத்தியமான அனைத்து வகையிலும் அவர் நியாயம் செய்து வந்தார். தமது அமைச்சக விஷயங்களில் துல்லியமான ஞானம் பெற்றிருந்தார். அவரது உணர்வும், உறுதிப்பாடும் இணை இல்லாதவை.
சுஷ்மா அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பாகும். இந்தியாவுக்கு செய்த அனைத்துப் பணிகளுக்காகவும் பெரு விருப்போடு அவர் நினைவுகூரப்படுவார். மிகவும் துயரமான இந்தத் தருணத்தில் அவரது குடும்பத்தார், ஆதரவாளர்கள், பற்றாளர்கள் ஆகியோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் நேற்று (06.08.2019) இரவு புதுதில்லியில் காலமானார்.