பிரதமர் திரு. நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்கினார். அதன் தொடக்கமாக துவாரகாவில் அமைந்துள்ள துவாரகதீஸ்வர் ஆலயத்தில் வழிபட்டார்.
அதையடுத்து, ஓகாவுக்கும் பேத் துவாரகாவுக்கும் இடையில் அமைக்கப்பட இருக்கும் பாலத்திற்கும் இதர சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல்லை நாட்டினார்.
அதையடுத்து பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் “இன்று துவாரகாவில் புதிய சக்தியையும் உற்சாகத்தையும் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
“இன்று அடிக்கல் நாட்டப்பட்டு அமைக்கப்பட இருக்கும் பாலம் நமது பண்டைய பாரம்பரியத்தை இணைப்பதற்கான அடையாளமாகத் திகழும். மேலும் சுற்றுலாவை பிரகாசிக்கச் செய்யும். வேலைவாய்ப்பை அதிகரிக்கும்” என்று குறிப்பிட்ட பிரதமர் . சுற்றுலாவை மேம்படுத்துவதுதான் வளர்ச்சிக்கான வழி என்பதைச் சுட்டிக்காட்டினார்.
போதிய கட்டுமான வசதி இல்லாதது பல்வேறு இன்னல்களுக்கு வழியமைத்துவிட்டது என்பதையும் பேயத் துவாரகா மக்கள் பல்வேறு சவால்களைஎதிர்கொள்ள நேர்ந்தது என்பதையும் பிரதம மந்திரி நினைவூகூர்ந்தார்.
“சுற்றுலாத் துறையின் வளர்ச்சி, தனியாக ஏற்பட்டுவிடாது. கிர் காட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டுமானால், அருகில் உள்ள துவாரகா போன்ற இடங்களுக்கும் அவர்கள் வரும் வகையில் தூண்ட வேண்டும்.
கட்டுமான வசதிகளை அமைப்பது பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் இருக்கவேண்டும். வளர்ச்சிக்கான சூழ்நிலையையும் அதிகரிப்பதாக அமையவேண்டும்.
துறைமுக மேம்பாடு,துறைமுகம் சார்ந்த மேம்பாடு ஆகியவற்றுடன், கடல் வளம் சார்ந்த பொருளாதார மேம்பாடு இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் துணை புரியவேண்டும்” என்றும் பிரதமர் கூறினார்.
மீனவர்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும்வகையிலான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று கூறிய பிரதமர், “கண்ட்லா துறைமுகம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. காரணம், வளங்கள் அனைத்தும் அந்தத் துறைமுகத்தின் மேம்பாட்டுக்கே பயன்படுத்தப்பட்டன. அலாங் நகருக்குப் புதிய வாழ்வு அமைத்துத் தரப்பட்டுள்ளது. அங்குள்ள தொழிலாளர்களின் நலன்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றும் கூறினார்.
கடல் பாதுகாப்புக்கு இந்திய அரசு நவீன சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறது. துவாரகாவில் தேவபூமி என்ற இடத்தில் இதற்காகத் தனி நிறுவனம் அமைக்கப்படும் என்றார் அவர்.
“நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவுகள் குறித்துப் பேசிய பிரதமர், அரசின் மீது நம்பிக்கை இருக்கும்போது, கொள்கைகள் மிகச் சிறந்த எண்ணத்துடன் உருவாக்கப்படும்போது, நாட்டின் சிறந்த நலன்களுக்காக மக்கள் எங்களை ஆதரிப்பது இயல்பானதே.
மக்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் அரசு முழு உதவியையும் அளிக்கும் என்பதை உறுதிபடக் கூறுகிறேன்.
உலகின் கவனம் முழுவதும் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகிறது. இங்கே பலரும் முதலீடு செய்ய முன்வந்து கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார்.
“இந்தியாவின் வளர்ச்சிக்கு குஜராத் மாநிலம் தனது தீவிரமான பங்களிப்பைச் செலுத்துவதை நான் காண்கிறேன். குஜராத் அரசைப் பாராட்டுகிறேன்” என்றும் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார்.