பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜப்பானிய பிரதமர் திரு.சின்ஷோ அபேயை செப்டம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் இந்தியா வருகிறார்.
இந்தியா-ஜப்பான் இடையிலான 12வது வருடாந்திர உச்சிமாநாட்டை இருநாட்டு பிரதமர்களும் குஜராத் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் செப்டம்பர் 14ஆம் தேதி நடத்துகிறார்கள். பின்னர் இருநாட்டுத் தலைவர்களும் ஊடகங்களுக்கு அறிக்கையளிக்கிறார்கள். அதே நாளில் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அனைவரும் பங்கேற்கும் வகையில் இந்தியா ஜப்பான் இடையிலான வர்த்தக சந்திப்பும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது பிரதமர் மோடி மற்றும் பிரதமர் அபே இணைந்து நடத்தும் நான்காவது உச்சிமாநாடாகும். இந்தியா ஜப்பான் இடையிலான “சிறப்பு உக்திசார் சர்வதேச கூட்டுறவு’ திட்டம் சார்ந்து சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் குறித்து மதிப்பிடுவதோடு, இனி பயணிக்க வேண்டிய திசை குறித்து இருநாட்டு தலைவர்களும் முடிவெடுப்பார்கள்.
அகமதாபாத்-மும்பை இடையே இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டம் துவங்கப்பட்டதை நினைவுகூறும் பொது நிகழ்ச்சியில் செப்டம்பர் 14ம் நாள் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரத்தை இந்த ரயில் வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேக ரயில்களைப் பொறுத்தவரை ஜப்பான் ஜாம்பவானாகத் திகழ்கிறது. அதன் ஷின்கான்சென் புல்லட் ரயில் உலகின் அதிவேக ரயில்களில் ஒன்று.
பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே ஆகியோரை அகமதாபாத் நகரம் செப்டம்பர் 13ஆம் தேதி ஏராளமான பொது நிகழ்ச்சிகளோடு வரவேற்கிறது. இந்நிகழ்ச்சிகள் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருநாட்டு பிரதமர்களும் மகாத்மா காந்தியால் சபர்மதி நதிக்கரையில் தொடங்கப்பட்ட சபர்மதி ஆசிரமம் செல்கிறார்கள். பிறகு அகமதாபாதின் 16ஆம் நூற்றாண்டுகால புகழ்பெற்ற மசூதியான ‘சிதி சையீத் நீ ஜாலி’ மசூதியை பார்வையிடுகிறார்கள். பின்னர் தண்டி குதிர் என்ற பெயரில் மகாத்மா மந்திரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்கள்.