மக்களும் பங்குபெறக்கூடிய வகையிலான முனைப்பான நிர்வாகத்திற்கும், உரிய நேர செயல்பாட்டுக்கும் உதவும் தகவல் மற்றும் தொழில் நுட்பம்(ஐ.சி.டி) சார்ந்த பிரகதி (PRAGATI) எனும் பன்முக இயக்குதளம் மூலம் இன்று தனது பதினைந்தாவது கலந்துரையாடலை பிரதமர் மோடி மேற்கொண்டார்.
வருமானவரி மேலாண்மை தொடர்பான கையாளுதல் மற்றும் அதன் குறைபாடு தீர்வுகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். வரி செலுத்துபவர்கள் அளித்த புகார்கள் குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர், இதைக் கையாளுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதை உறுதி செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தொழில்நட்பத்தை முடிந்தவரையில் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
பிரதமர் கனிமவள மேம்பாட்டு நலத்திட்ட அமலாக்கம் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். இதுவரை 12 வளம் நிறைந்த மாநிலங்களிடமிருந்து ரூ. 3,214 கோடி நிதிபெறப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதைவிட அதிகமான நிதி திரட்டப்படும் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பாக அலுவலர்கள் கனிமவளம் நிறைந்த மாவட்டங்களில் பின் தங்கிய சமுதாயத்தினர், பழங்குடியினர் / மலைவாழ் மக்கள் பயன் பெறும் வகையில் நிதி உபயோகத்திற்கான முறையையும் நடவடிக்கைகளையும் ஒரே மாதிரியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
ராஜஸ்தான், அசாம், மேகாலயா, சிக்கிம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள சாலை ரயில் மற்றும் மின்துறை சார்ந்த முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார்.