பிரதமர் திரு. நரேந்திர மோடி மாலத்தீவு புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கை வருமாறு:
“நமது மிக நெருங்கிய, நட்புக்குரிய, அண்டை நாடான மாலத்தீவு குடியரசின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாண்புமிகு இப்ராஹிம் முகமது சோலிஹ்-ன் வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, அந்நாட்டின் தலைநகர் மாலே செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் வளமான எதிர்காலத்தை விரும்பும் மாலத்தீவு குடியரசு மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்தை இந்தத் தேர்தல் பிரதிபலித்துள்ளது.
இந்தியாவும், மாலத்தீவும் வரலாற்று காலந்தொட்டு, இருநாட்டு மக்களிடையே நெருங்கிய பிணைப்புடனும், அமைதி மற்றும் செழுமைக்கான விருப்பத்தை பகிர்ந்து கொண்ட நாடுகளாகத் திகழ்கின்றன. உள்ளார்ந்த வளர்ச்சிக்கான ‘அனைவரும் இணைவோம் – அனைவரும் உயர்வோம்’ என்ற இந்திய அரசின் தொலைநோக்கு திட்டம், நமது அண்டை நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும். ஜனநாயக ரீதியான, வளமிக்க, அமைதியுடன் கூடிய குடியரசு நாடாக மாலத்தீவை பார்க்க வேண்டும் என்பதே இந்தியர்களின் உறுதியான விருப்பமாகும்.
அடிப்படை கட்டமைப்பு வசதி, சுகாதார சேவைகள், தொலைத் தொடர்பு மற்றும் மனிதவள மேம்பாடு போன்ற வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில், திரு. சோலிஹ் தலைமையிலான மாலத்தீவின் புதிய அரசுடன் இந்தியா நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்பட விரும்புகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பயணம் நமது இருநாடுகளிடையேயான நெருங்கிய ஒத்துழைப்புகள் மற்றும் பரிமாற்றங்களில் புதிய சகாப்தத்தை படைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்”.