தென்னாப்பிரிக்காவில் இருந்து வருகை புரிந்துள்ள மேன்மை தங்கிய அதிபர் ரமஃபோசா மற்றும் சிறப்பு விருந்தினர்களே,
நண்பர்களே,
இந்தியாவின் ஒருங்கிணைந்த நண்பரான அதிபர் ரமஃபோசா இன்று நம்மிடையே வருகை புரிந்திருப்பது நமக்கெல்லாம் பெருமகிழ்ச்சி தரும் விஷயமாகும். இந்தியா அவருக்குப் புதியதல்ல. ஆனால், அதிபராக அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். அவரது இந்திய வருகை நமது உறவுகளில் சிறப்பான தருணமாக உள்ளது. இந்த ஆண்டு மகாத்மாகாந்தி அவர்களின் 150-ஆவது பிறந்த ஆண்டுவிழா. நெல்சன் மண்டேலாவின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. அதுமட்டுமின்றி, சென்ற ஆண்டு இருதரப்பு தூதரக உறவுகள் ஏற்பட்ட வெள்ளி விழா ஆண்டாகும். இத்தகைய சிறந்த தருணத்தில் அதிபர் ரமஃபோசா இந்தியா வந்திருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வருகை நமக்குத் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் குடியரசு தின விழாவில் அவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்த மதிப்பையும், பெருமையையும் நமக்கு அளித்த அவருக்கு இந்தியா நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இந்த சிறப்பை நமக்கு அளித்த அவருக்கு இந்தியா முழுவதும் நன்றி செலுத்துகிறது.
நண்பர்களே,
2016-ல் நான் தென்னாப்பிரிக்கா சென்றிருந்த போது, அதிபர் ரமஃபோசாவை நான் சந்தித்தேன். அந்தத் தருணத்தில் அவர் துணை அதிபராக இருந்தார். முதலாவது சந்திப்பிலேயே இந்தியா மீதான அவரது அன்பையும், ஆர்வத்தையும் நான் உணர்ந்து கொண்டேன். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடந்த போது, அவரது சிறப்பான விருந்தோம்பலை நான் அறிந்தேன். புதுதில்லியில் இது குளிர்காலமாக இருந்தாலும், இந்தியாவின் பயணத்தை அதிபர் ரமஃபோசா இதமாகவே மேற்கொள்வார் என்று நம்புகிறேன். இந்தியாவில் உள்ள அதிபரையும், அவரது தூதுக் குழுவினரையும் நான் வரவேற்கிறேன்.
நண்பர்களே,
அதிபருடன் இன்றையக் கலந்துரையாடலின் போது, நமது உறவுகள் குறித்து அனைத்துப் பரிமாணங்களிலும் நாங்கள் விவாதித்தோம். எங்களின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் மேலும் மேலும் ஆழமாகின்றன. நமது இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு “துடிப்புமிக்க குஜராத்” உச்சிமாநாட்டில் தென்னாப்பிரிக்கா பங்கேற்பு நாடாகக் கலந்து கொண்டது. தென்னாப்பிரிக்காவில் முதலீட்டை அதிகரிக்க அதிபர் ரமஃபோசாவின் முயற்சிகள் காரணமாக இந்திய நிறுவனங்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார். தென்னாப்பிரிக்காவின் திறன் வளர்ச்சி செயல்பாடுகளில் நாமும் கூட பங்குதாரர்களாக இருக்கிறோம். பிரிட்டோரியாவில் காந்தி-மண்டேலா திறன் பயிற்சி கல்விக் கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் உறவுகளைப் புதிய நிலைக்குக் கொண்டுசெல்ல உறுதிபூண்டுள்ளன. எனவே, இருநாடுகளைச் சேர்ந்த மிகப்பெரும் வணிகத் தலைவர்களை இன்னும் சற்றுநேரத்தில் நாம் சந்திக்கவிருக்கிறோம்.
நண்பர்களே,
உலக வரைபடத்தை நாம் பார்க்கும்போது, இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இந்தியப் பெருங்கடலில் மிக முக்கியமான பகுதிகளில் அமைந்திருப்பதைத் தெளிவாக காணலாம். நாம் இருவரும் பன்முகத் தன்மை நிறைந்த ஜனநாயக நாடுகள். மகாத்மாகாந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரைப் பின்பற்றும் நாம் அவர்களின் வாரிசுகள் ஆவோம். எனவே, நமது இரண்டு நாடுகளைப் பற்றி உலக அளவிலான பார்வைகள் ஒரேமாதிரியாக உள்ளன. பிரிக்ஸ், ஜி20, இந்தியப் பெருங்கடல் கரையோர அரசுகளின் சங்கம் போன்ற பல அமைப்புகளில் நமது பரஸ்பர ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் மிகவும் வலுவாக உள்ளன. ஐநா பாதுகாப்பு சபையின் சீர்திருத்தங்களுக்கும், நாம் ஒருங்கிணைந்து பாடுபடுகிறோம். அதிபரின் இந்தியப் பயணத் திட்டத்தின் சிறப்புப் பகுதியாக இருப்பது இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது “காந்தி-மண்டேலா சுதந்திர சொற்பொழிவு” ஆகும். நான் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மாண்புமிகு அதிபரின் உரையைக் கேட்பதற்கு ஆர்வமுடன் உள்ளன.
நண்பர்களே,
குடியரசு தின விழாவில் அதிபர் ரமஃபோசா தலைமை விருந்தினராகப் பங்கேற்பது நமது உறவுகளை வலுப்படுத்துவது என்ற உறுதியைப் பகிர்ந்து கொள்ளும் ஓர் அடையாளமாகும். நான் மீண்டும் ஒருமுறை அதிபரை அன்புடன் வரவேற்கிறேன்.
நன்றி.