பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலமாக ஜெர்மன் அதிபர் டாக்டர் ஏஞ்சலா மெர்க்கலுடன் இன்று கலந்துரையாடினார்.
உலக அரங்கிலும், ஐரோப்பாவிலும் வலுவான, நிலையான தலைமையை அளித்து வருவதற்காக அதிபர் மெர்க்கெலுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்திய - ஜெர்மனி ராணுவ பங்களிப்பு வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கோவிட்-19 பெருந்தொற்று நோய் பாதிப்பைக் கையாளுதல், இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக அளவிலான பிரச்சினைகள், குறிப்பாக இந்தியா - ஐரோப்பிய யூனியன் உறவுகள் உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவமான விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மெர்க்கெலிடம் விளக்கிய பிரதமர், உலக நன்மைக்காக தன்னுடைய திறன்களை அளிப்பதில் இந்தியாவின் உறுதியை தெரிவித்துக் கொண்டார். ஜெர்மனி மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில், உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவுதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதில் ஜெர்மனி வெற்றி காண பிரதமர் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் சேருவது என ஜெர்மனி முடிவு செய்திருப்பதை பிரதமர் வரவேற்றார். பேரிடரைத் தாங்கும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கூட்டமைப்பு என்ற அமைப்பின் கீழ் ஜெர்மனியுடன் கூட்டு முயற்சிகளை மேலும் பலப்படுத்த பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே இருதரப்பு உறவுகள் தொடங்கியதன் 70வது ஆண்டாக இந்த ஆண்டு இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் உத்திசார் கூட்டுறவின் 20வது ஆண்டாக இருப்பதாகவும் உரையாடலின்போது குறிப்பிடப்பட்டது. இவை தொடர்பாக உயர்விருப்ப இலக்கு குறித்த செயல்திட்டத்தை உருவாக்க 2021-ல் விரைவில் ஒரு தேதியில் ஆறாவது அரசுகள் இடையிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.