மேதகு நெதர்லாந்து பிரதமர் அவர்களே,
உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துகளும், நன்றியும்.
உங்களது தலைமையில், உங்கள் கட்சி தொடர்ந்து 4-வது முறையாக மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. ட்விட்டரின் வாயிலாக நான் உங்களுக்கு உடனடியாக வாழ்த்து தெரிவித்திருந்த போதும், இன்று நாம் காணொலி வாயிலாக சந்திப்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் உங்களுக்கு நல் வாழ்த்து கூற விரும்புகிறேன்.
மேதகு நெதர்லாந்து பிரதமர் அவர்களே,
ஜனநாயகம் மற்றும் சட்ட விதிமுறைகள் போன்ற பகிரப்படும் மாண்புகளின் அடிப்படையில் நமது உறவுகள் அமைந்துள்ளன. பருவநிலை மாற்றம், தீவிரவாதம், பெருந்தொற்றுகள் போன்ற சர்வதேச சவால்களை எதிர் கொள்வதிலும் நமது அணுகுமுறை ஒன்றாக உள்ளன.
இந்திய-பசிபிக் நெகிழ்வு தன்மை வாய்ந்த விநியோக சங்கிலி, சர்வதேச டிஜிட்டல் ஆளுகை போன்ற புதிய துறைகளிலும் நமது கருத்துக்கள் ஒருங்கிணைந்து வருகின்றன. தண்ணீர் மீதான கேந்திர கூட்டமைப்பின் வாயிலாக நமது உறவிற்குப் புதிய பரிமாணத்தை இன்று நாம் வழங்குவோம். முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட விரைவு நடவடிக்கைகளும், நமது வலுவான பொருளாதார ஒத்துழைப்பிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
நம்மைப் போன்ற ஒத்த கருத்துடைய நாடுகளுக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் கொவிட்டுக்குப் பிந்தைய காலத்தில், பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
மேதகு நெதர்லாந்து பிரதமர் அவர்களே,
2019-ஆம் ஆண்டு, அரச பெருமக்கள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டதன் காரணமாக இந்திய- நெதர்லாந்து உறவுகள் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்தக் காணொலி உச்சிமாநாடு, நமது உறவுகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
மேதகு நெதர்லாந்து பிரதமர் அவர்களே,
வெளிநாடு வாழ் இந்தியர்கள் பற்றி நீங்கள் குறிப்பிட்டவாறு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஐரோப்பாவில் வாழ்ந்து வருவது உண்மை, ஆனால் இந்தக் கொரோனா காலத்தில், பெருந்தொற்றின் போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்களின் மீது நீங்கள் காட்டும் அக்கறைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஐக்கிய நாடுகள் சபையின் 26-வது பருவநிலை மாற்ற உறுப்பினர்கள் மாநாடு மற்றும் ஐக்கிய ஐரோப்பாவுடனான இந்திய-ஐக்கிய ஐரோப்பிய உச்சி மாநாடு ஆகியவற்றில் பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் வாய்ப்புகளையும் நாம் பெறுவோம்.
குறிப்பு: இது, பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.