பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று அமெரிக்காவின் துணை அதிபர் மேதகு கமலா ஹாரிஸுடன் தொலைபேசியில் பேசினார்.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு, அதன் "உலகளாவிய தடுப்பூசி பகிர்வுக்கான உத்தியின்" கீழ் கிடைக்கச் செய்வதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் குறித்து துணை அதிபர் ஹாரிஸ் பிரதமரிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் முடிவிற்காக துணை அதிபர் ஹாரிஸைப் பாராட்டிய பிரதமர், அண்மைய நாட்களில் அமெரிக்க அரசிடமிருந்தும், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்திடமிருந்தும், இந்தியா பெற்று வரும், ஆதரவுக்கும் ஒப்புரவுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் சுகாதார விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை, குவாட் தடுப்பூசி முன்முயற்சி ஆகியவை தொற்றுநோயின் நீண்டகால சுகாதார பாதிப்பை நிவர்த்தி செய்வதில் வகிக்கும் பங்கையும் எடுத்துரைத்தனர்.
உலக சுகாதார நிலைமை இயல்பான பின்னர், விரைவில் இந்தியாவில் துணை அதிபர் ஹாரிஸை வரவேற்கவிருப்பதாக பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.