பிரதமர் திரு.நரேந்திர மோடி, அமெரிக்க ஐக்கிய நாடுகளி்ன் அதிபர் மேதகு ஜோசப் ஆர். பிடனுடன் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினார்.
அதிபர் பிடனின் பதவிக்காலத்திற்கு அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், இந்திய-அமெரிக்க உத்திசார் கூட்டுறவை மேலும் மேம்படுத்துவதற்கு, அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
பிராந்திய அளவிலான வளர்ச்சிகளையும், புவியியல்-அரசியல் ரீதியான விஷயங்களையும் இரண்டு தலைவர்களும் விரிவாக ஆலோசனை செய்தனர். ஜனநாயக விழுமியங்களையும், பொதுவான உத்திசார் நலன்களையும் கட்டிக்காப்பதில் இந்திய-அமெரிக்க கூட்டுறவின் கடப்பாட்டை இருவரும் உறுதிப்படுத்தினர். விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கையும், சுதந்திரமான, வெளிப்படையான, உள்ளடக்கத்தன்மையுடன் கூடிய இந்திய-பசிபிக் பிராந்தியத்தையும் உறுதி செய்வதற்காக ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை இரண்டு தலைவர்களும் வலியுறுத்தினர்.
உலக பருவநிலை மாற்றம் என்ற சவாலை எதிர்கொள்வதற்கான முக்கியத்துவத்தை, பிரதமரும், அதிபர் திரு.பிடனும் அழுத்தமாக எடுத்துரைத்தனர். பாரீஸ் உடன்படிக்கையை திரும்பவும் பின்பற்றுவது என்ற திரு.பிடனின் முடிவை வரவேற்ற பிரதமர் திரு.மோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உயர் இலக்குகளை இந்தியா தனக்குத்தானே வகுத்துக் கொண்டுள்ளதை கோடிட்டுக் காட்டினார். இந்த ஆண்டு ஏப்ரலில் பருவநிலை தலைவர்கள் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான அதிபர் திரு.பிடனின் முன்முயற்சியை வரவேற்ற பிரதமர், அதில் பங்கேற்பதை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
அதிபர் திரு.பிடனும், டாக்டர் ஜில் பிடனும் இந்தியாவுக்கு, தமது வசதிப்படி, கூடிய விரைவில் வருகை தர வேண்டுமென்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
President @JoeBiden and I are committed to a rules-based international order. We look forward to consolidating our strategic partnership to further peace and security in the Indo-Pacific region and beyond. @POTUS
— Narendra Modi (@narendramodi) February 8, 2021