பிரதமர் திரு.நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் மேதகு மடமேளா சிரில் ராமபோசாவுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார்.
கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்வது குறித்தும், இரு நாடுகளிலும் தடுப்பூசி இயக்கங்கள் நடைபெறுவது குறித்தும் இரண்டு தலைவர்களும் ஆலோசனை செய்தனர்.
தென்னாப்பிரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் தேவையான தடுப்பூசிகளையும், மருந்துப் பொருட்களையும் அனுப்பக் கூடிய அளவில், இந்தியா கணிசமான உற்பத்தித் திறனைப் பெற்றிருப்பதாக, பிரதமர், தென்னாப்பிரி்க்க அதிபரிடம் உறுதிப்படுத்தினார்.
சர்வதேச அளவில் தேவைப்படும் தடுப்பூசிகளையும், மருந்துகளையும் சிக்கன விலையில் கிடைக்கச் செய்வதற்கான பணியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இணைந்து செயல்படுவதில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் இரண்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கும், அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வதற்கும், இரு நாடுகளின் அதிகாரிகளும் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என்று இரண்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.