பஹ்ரைன் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் மேன்மைமிகு இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொலைபேசி மூலம் இன்று உரையாடினார். இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துக்களை மேன்மைமிகு இளவரசர் சல்மான் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையேயான இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்த இரு தலைவர்களும், அரசியல், வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து மேம்பட்டு வரும் உறவு குறித்து திருப்தி தெரிவித்தனர். இரு நாடுகளுக்கிடையே நிறுவப்பட்ட ராஜாங்க உறவுகளின் பொன்விழாவை 2021-22-ல் இந்தியா மற்றும் பஹ்ரைன் கொண்டாடுகின்றன.
கொவிட் பெருந்தொற்றின் போது பஹ்ரைனில் வசிக்கும் இந்திய சமூதாயத்தின் நலனை சிறப்பான முறையில் பேணுவதற்காகவும், அவர்களது சமூக மற்றும் கலாச்சாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் பஹ்ரைன் தலைமைக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
மேன்மைமிகு அரசர் ஹமாத் பின் இஸா அல் கலிஃபாவிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, விரைவில் இந்தியாவுக்கு வருமாறு பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் மேன்மைமிகு இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலிஃபாவிற்கு அழைப்பு விடுத்தார்.