அபுதாபி பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு அமீரக ராணுவப் படைகளின் துணை தலைமை தளபதியுமான மேன்மைமிகு ஷேக் முகமது பின் சயெத் அல் நஹ்யனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
பிராந்தியத்தில் கொவிட் பெருந்தொற்றின் பாதிப்பு குறித்து விவாதித்த இரு தலைவர்களும், சுகாதார நெருக்கடியின் போதும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையேயான ஒத்துழைப்பு இடைவிடாது தொடர்ந்தது குறித்து திருப்தி தெரிவித்தனர்.
கொவிட்டுக்கு பிந்தைய உலகத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையேயான ஒத்துழைப்பையும், நெருங்கிய தொடர்புகளையும் தொடர இருவரும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக, வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்புகளை மேலும் விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய சமுதாயத்தின் நலனில் எப்போதும் தனிப்பட்ட கவனத்தையும் அக்கறையையும் செலுத்தி வரும் அபுதாபி பட்டத்து இளவரசருக்கு தமது சிறப்பான பாராட்டுதல்களை பிரதமர் தெரிவித்தார்.
கொவிட் நெருக்கடியை விரைவில் வெற்றி கொள்ளலாம் என்று நம்பிக்கை தெரிவித்த இரு தலைவர்களும், விரைவில் நேரில் சந்தித்து கொள்வதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்கள்.