#MannKiBaat: PM extends greetings to people of Bangladesh on their independence day
India will always stand shoulder to shoulder with the people of Bangladesh: PM Modi during #MannKiBaat
Jallianwala Bagh massacre in 1919 left a deep impact on Shaheed Bhagat Singh: PM Modi during #MannKiBaat
#MannKiBaat: Bhagat Singh, Sukhdev and Rajguru were not scared of death. They lived and died for our nation, says PM Modi
We are marking 100 years of Champaran Satyagraha. This was one of the earliest Gandhian mass movements in India: PM #MannKiBaat
The Champaran Satyagraha showed us how special Mahatma Gandhi was and how unique his personality was: PM Modi during #MannKiBaat
New India manifests the strength and skills of 125 crore Indians, who will create a Bhavya and Divya Bharat, says the PM #MannKiBaat
India has extended support to the movement towards digital transactions. People of India have rejected corruption & black money: PM Modi
People of India are getting angry as far as dirt is concerned, this will lead to more efforts towards cleanliness: PM Modi during #MannKiBaat
Wastage of food is unfortunate. It is an injustice to the poor: PM Modi during #MannKiBaat
Depression can be overcome. We all can play a role in helping those suffering from depression overcome it: PM Modi during #MannKiBaat
Lets us make the 3rd International Day of Yoga memorable by involving more and more people: PM Modi during #MannKiBaat
PM Modi highlights the benefits of maternity bill during #MannKiBaat

எனதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் என் நல்வணக்கங்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் தேர்வுக்கான தயாரிப்புகளோடு ஒன்றியிருக்கிறார்கள். யாருக்கெல்லாம் தேர்வுகள் முடிந்து விட்டதோ, அவர்கள் சற்றே ஆசுவாசமாக இருக்கிறார்கள்; எங்கெல்லாம் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றதோ, அந்தக் குழந்தைகளின் குடும்பங்கள் சற்று அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் மாணவச் செல்வங்களோடு பகிர்ந்து கொண்ட விஷயங்களை மீண்டும் ஒரு முறை கேளுங்கள், தேர்வுக்காலங்களில் அந்தக் கருத்துகள் உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும்.

 

     இன்று மார்ச் மாதம் 26ஆம் தேதி. இந்த நாள் தான் வங்காளதேசத்தின் சுதந்திரத் திருநாள். அநீதிக்கு எதிரான வரலாற்றுப் போராட்டம்……. வங்க பந்துவின் தலைமையின் கீழ் வங்காளதேசத்தின் மக்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள். இன்று இந்த மகத்துவம் நிறைந்த நாளிலே, நான் வங்காளதேசத்தின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வங்காளதேசம் மேலும் முன்னேற்றமும் வளர்ச்சியும் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன், பாரதம் வங்காளதேசத்தின் உறுதியான நண்பன் என்பதை நான் அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன், ஒரு நல்ல நண்பன் என்ற முறையில், நாம் தோளோடு தோள் சேர்ந்து ஒட்டுமொத்த பிரதேசத்திலும் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு நமது பங்களிப்பை தொடர்ந்து ஆற்றி வருவோம்.

 

     ரவீந்திரநாத் தாகூர், அவரது நினைவுகள் எல்லாம் நாமெல்லாரும் போற்றிவரும் செல்வங்களாக இருப்பது நமக்குப் பெருமையாக இருக்கிறது. வங்காளதேசத்தின் தேசியகீதம்கூட ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இயற்றியது தான். குருதேவ் தாகூரைப் பற்றி மிக சுவாரசியமான விஷயம்….. 1913ஆம் ஆண்டில் நோபல் பரிசைப் பெற்ற ஆசியக்கண்டத்தைச் சேர்ந்த முதல் நபர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்; அவருக்கு ஆங்கிலேயர்கள் நைட் (knight) என்ற பட்டத்தையும் அளித்தார்கள். 1919ஆம் ஆண்டு ஜாலியான்வாலா பாக் படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது; அந்த சமயத்தில் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இந்தப் படுகொலைக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்த மாமனிதர்களில் ஒருவராக விளங்கினார். இந்தப் படுகொலை பன்னிரெண்டே வயது நிரம்பிய ஒரு பாலகன் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. வயல் வெளிகளிலும், மைதானங்களிலும் ஆடிவிளையாடி வந்த அந்த சின்னஞ்சிறு பாலகன் மனதில் இந்தச் சம்பவம் ஆறாத வடுவாக ஆனது. 1919ஆம் ஆண்டில் பன்னிரெண்டே வயது நிரம்பிய அந்த பாலகன் பாரத மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்த தேசபக்தன், தியாகி பகத் சிங். இன்றிலிருந்து 3 நாட்கள் முன்பாகத் தான், மார்ச் மாதம் 23ஆம் தேதி பகத் சிங்கையும் அவரது தோழர்களான சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரையும் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டார்கள்; மார்ச் மாதம் 23ஆம் தேதி நடந்த இந்த சோகமான சம்பவம் நடந்த போது, தியாகச் செம்மல்களான பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் முகங்களில் பாரத அன்னைக்கு அருஞ்சேவை புரிந்த மகிழ்வு கொப்பளித்தது, சற்று கூட மரணம் பற்றிய அச்சம்  காணப்படவேயில்லை. வாழ்கையின் அனைத்துக் கனவுகளையும் பாரத அன்னையின் விடுதலையின் பொருட்டு அவர்கள் அர்ப்பணமாக அளித்தார்கள். இந்த மூவரும் இன்றும் கூட நம் அனைவருக்கும் கருத்தூக்கமாகத் திகழ்கிறார்கள். பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் தியாகக் கதையை நாம் சொற்களில் வடித்து விட முடியாது. ஒட்டுமொத்த ஆங்கிலேய சாம்ராஜ்யமும் இந்த மூவரைக் கண்டு நடுநடுங்கியது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள், தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது, ஆனால் இவர்களை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆங்கிலேயர்களைக் கவலை அரித்துக் கொண்டிருந்தது. மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று தூக்குத் தண்டனை என்று உறுதி செய்யப்பட்டிருந்தது, ஆனால் மார்ச் மாதம் 23ஆம் தேதியே அவர்கள் தூக்கிலிடப்பட்டு விட்டார்கள். யாருக்கும் இது தெரியாத வகையில் கள்ளத்தனமாக அரங்கேற்றப்பட்டது,. பின்னர் அவர்களின் உடல்கள் இன்றைய பஞ்சாப் மாநிலம் கொண்டு செல்லப்பட்டு, யாருமறியா வண்ணம் எரிக்கப்பட்டது. பல ஆண்டுகள் முன்னே, அங்கே முதல் முறையாக அங்கே செல்லும் வாய்ப்புக் கிட்டிய போது, அந்த மண்ணில் ஒருவிதமான அதிர்வை என்னால் உணர முடிந்தது. உங்களுக்கெல்லாம் எப்போது வாய்ப்புக் கிட்டுகிறதோ, அப்போது பஞ்சாப் செல்லுங்கள், பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு, பகத்சிங்கின் அன்னை, படுகேஷ்வர் தத் ஆகியோரின் சமாதிகள் அமைந்திருக்கும் இடத்துக்கு கண்டிப்பாகச் சென்று வாருங்கள் என்று நான் நாட்டின் இளைஞர்களிடம் வேண்டிக் கொள்கிறேன்.

 

     சுதந்திர வேட்கை, அதன் தீவிரம் ஆகியன பரந்திருந்த ஒரு காலகட்டம் அது. ஒரு புறம் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்ற வீரர்கள் ஆயுதப் புரட்சியை மேற்கொள்ள இளைஞர்களுக்கு உத்வேகமளித்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 100 ஆண்டுகள் முன்பாக, ஏப்ரல் மாதம் 1917ஆம் ஆண்டு காந்தியடிகள் சம்பாரண் சத்தியாகிரஹத்தை மேற்கொண்டார்கள். இது சம்பாரண் சத்தியாகிரஹத்தின் நூற்றாண்டு. பாரதத்தின் விடுதலைப் போரில் காந்தியடிகளின் சிந்தனைகள், காந்தியடிகளின் வழிமுறை ஆகியவற்றின் வெளிப்பாடு முதன்முறையாக சம்பாரண்ணில் தான் வெளிப்பட்டது. சுதந்திரப் போராட்ட யாத்திரையில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது, குறிப்பாக போராட்டத்தின் வழிமுறைகள் என்ற கண்ணோட்டத்திலிருந்து. சம்பாரண் சத்தியாகிரஹம், கேடா சத்தியாகிரஹம், அகமதாபாதில் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஆகிய இவை அனைத்திலும் காந்தியடிகளின் சிந்தனைகள், வழிமுறைகள் ஆகியவற்றின் ஆழமான தாக்கம் புலப்படத் தொடங்கிய காலகட்டம் அது. 1915ஆம் ஆண்டில் காந்தியடிகள் அயல்நாட்டிலிருந்து திரும்பி வந்தார், 1917ஆம் ஆண்டில் பீகாரில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய கிராமம் சென்று, நாட்டுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தார். இன்று நமது மனதில் காந்தியடிகள் பற்றிய கருத்தைக் கொண்டு, சம்பாரண் சத்தியாகிரஹத்தை நாம் மதிப்பிட முடியாது. சற்றே கற்பனை செய்து பாருங்கள், 1915ஆம் ஆண்டு பாரதம் திரும்பிய ஒருவர், வெறும் இரண்டே ஆண்டுகள் அனுபவம்…….. நாடு அவரை அறிந்திருக்கவில்லை, அவர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, இது ஒரு தொடக்கம் தான். அந்த வேளையில் அவர் எத்தனை துயரங்களை அனுபவித்திருப்பார், எத்தனை உழைக்க வேண்டியிருந்திருக்கும் என்பதை எல்லாம் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. சம்பாரண் சத்தியாகிரஹத்தின் வாயிலாக காந்தியடிகளின் ஒருங்கிணைப்புத் திறன், பாரத சமுதாயத்தின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ளும் ஆற்றல், மிகவும் ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருந்த மக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக உத்வேகப்படுத்தும் சக்தி, போராட்டக் களத்துக்கு அவர்களை வரவழைப்பது ஆகியவை மூலமாக ஒரு அற்புதமான வல்லமையை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டினார். இன்று நாம் காந்தியடிகளின் மகத்துவம் பற்றி நாம் அறிந்திருக்கிறோம்; ஆனால் சுமார் 100 ஆண்டுகள் முன்பிருந்த காந்தியடிகள் பற்றி நினைத்துப் பாருங்கள், சம்பாரண் சத்தியாகிரஹத்தின் மூலமாக காந்தியடிகளின் பொதுவாழ்வு தொடங்கியது, இது அவருக்கு ஒரு கற்றல் அனுபவமாகத் திகழ்ந்தது. பொதுவாழ்வு எப்படித் தொடங்கப்பட வேண்டும், அதற்காக எந்த அளவு உழைக்க வேண்டும், காந்தியடிகள் எப்படி உழைத்தார் என்பதையெல்லாம் நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முடிகிறது. அந்தக் காலகட்டத்தில் இருந்த மகத்தான தலைவர்களான ராஜேந்திர பாபு, ஆச்சார்ய கிருபளானி போன்றவர்களை எல்லாம் காந்தியடிகள் கிராமம் செல்லப் பணித்தார். மக்களோடு மக்களாக இணைந்து, அவர்கள் ஆற்றும் பணிகளை எப்படி சுதந்திரப் போராட்டத்தோடு இணைப்பது என்பதை அவர் கற்றுக் கொடுத்தார். காந்தியடிகளின் இந்த வழிமுறை பற்றி ஆங்கிலேயர்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. போராட்டமும் நடைபெற்றது, ஆக்கமும் நிகழ்ந்தது, இரண்டுமே ஒரேநேரத்தில் நடைபெற்றன. ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல காந்தியடிகளின் வழிமுறையில் ஒருபுறத்தில் போராட்டம், இன்னொரு புறத்தில் ஆக்கம். ஒருபுறம் சிறைநிரப்புதல், மற்றொரு புறத்தில் ஆக்கபூர்வமான செயல்கள். மிகப்பெரியதொரு சமநிலை காந்தியடிகளின் செயல்பாட்டில் காண முடிந்தது. சத்தியாகிரஹம் என்றால் என்ன?, ஒத்துழையாமை என்றால் என்ன?, இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தோடு ஒத்துழையாமல் இருப்பது என்றால் என்ன? ஆகியவற்றின் விளக்கம் காந்தியடிகளின் சொற்கள் வாயிலாக அல்ல, அவரது வெற்றிகரமான செயல்பாட்டின் மூலமாகப் பளிச்சிட்டது.

 

     இன்று நாடு சம்பாரண் சத்தியாகிரஹத்தின் நூற்றாண்டைக் கொண்டாடி வரும் வேளையில், பாரதத்தின் சாமான்யக் குடிமகனின் சக்தி எத்தனை அளப்பரியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அளவில்லாச் சக்தியை சுதந்திரப் போராட்டத்தில் கையாண்டதைப் போலவே இன்றும் நாம் கையாள வேண்டும்; அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், நலமாக இருக்க வேண்டும் என்ற மந்திரத்தை மனதிலேற்றி, 125 கோடி நாட்டு மக்களின் மனவுறுதி, உழைக்கும் திறன், நாட்டுக்காக, சமுதாயத்துக்காக, ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்குவது ஆகியவையே, நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் இன்பொருளாவியை அர்ப்பணித்தவர்களுக்கு நாம் செலுத்தும் சிறப்பான காணிக்கையாகும்.

 

இன்று நாம் 21ஆம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறோம், இன்றைய காலகட்டத்தில் யார் தான் பாரதத்தில் மாற்றம் ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள், எந்த இந்தியர் நாட்டின் மாற்றத்தில் பங்கு கொள்வதை விரும்ப மாட்டார்? 125 கோடி நாட்டுமக்களின் இந்த வேட்கை, மாற்றத்திற்க்காக அவர்களின் முயற்சி, இவை தாம் புதிய பாரதம் படைப்பதில் பலமான அடித்தளமாக அமையும். புதிய பாரதம் என்பது அரசின் ஏதோ திட்டமல்ல. புதிய பாரதம் என்பது 125 கோடி நாட்டு மக்களின் அறைகூவல். 125 கோடி நாட்டுமக்களுமாக இணைந்து புதிய பாரதம் அமைக்க வேண்டும் என்ற உணர்வு இது தான். 125 கோடி நாட்டு மக்களின் மனங்களின் ஆழத்தில் இருக்கும் விருப்பம், ஆசை, மனவுறுதி, தாகம் இது.

 

எனதருமை நாட்டுமக்களே, நாம் சற்றே நமது தனிப்பட்ட வாழ்விலிருந்து விலகி, புர்ந்துணர்வுடன் சமுதாயத்தில் இருக்கும் செயல்பாடுகளைப் பார்த்தால், நமக்கருகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தால், நாம் ஆச்சரியப்பட்டுப் போவோம். பல லட்சக்கணக்கானவர்கள், அவர்களின் கடமைகளை ஆற்றுவதைத் தவிர சமூகத்துக்காகவும், அதில் இருக்கும் பாதிக்கப்பட்ட-தாழ்த்தப்பட்ட-துயரத்தில் இருக்கும் ஏழை எளியவர்களுக்காக, ஆக்கபூர்வமான ஏதாவது ஒன்றை தன்னலமற்ற வகையில் செய்து வருகிறார்கள். அமைதியான முறையில், தவம் இயற்றுபவர்களைப் போல அவர்கள் இத்தகைய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பலர் தினமும் மருத்துவமனை செல்கிறார்கள், நோயாளிகளுக்கு உதவி புரிகிறார்கள். தேவை எனச் செய்தி கேட்டவுடனேயே ஓடோடிச் சென்று ரத்த தானம் அளிக்கும் பலர் இருக்கிறார்கள். யாராவது பட்டினியில் வாடினால், அவர்களுக்கு உணவளிக்கும் நல்ல செயலைப் புரிபவர்களும் பலர் இருக்கிறார்கள். நமது தேசம் இப்படிப்பட்ட பல விலைமதிப்பில்லாத மாணிக்கங்கள் நிறைந்த தேசம். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள், இது நமது நாடி நரம்புகளில் எல்லாம் இருக்கிறது. இதை நாம் ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமேயானால், ஒருங்கிணைந்த வகையில் நோக்கினோமேயானால், இது எத்தனை மகத்தான சக்தி என்பது நன்கு புலனாகும். புதிய பாரதம் பற்றி நாம் பேசும் போது, இந்தக் கருத்து பற்றிய விமர்சனங்கள் எழுவது இயல்பான விஷயம் தான், இது மக்களாட்சி முறையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். ஆனால் 125 கோடி நாட்டுமக்கள் உறுதி பூண்டு விட்டால், தங்கள் பாதையை அவர்கள் முடிவு செய்து விட்டால், ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் அடியெடுத்து வைக்கத் தொடங்கி விட்டால், புதிய பாரதம் சமைப்பது என்ற 125 கோடி நாட்டுமக்களின் கனவு, நாம் பார்த்துக் கொண்டே இருக்கும் வேளையில் உருப்பெறத் தொடங்கும், நனவாகும்.  அனைத்து விஷயங்களும் வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்பதோ, அரசின் திட்டமாக இருக்க வேண்டும் என்பதோ, அரசுப் பணத்திலிருந்து செலவு செய்யப்பட வேண்டும் என்பதோ அவசியமில்லை. நான் கண்டிப்பாக போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டே நடப்பேன், என் கடமைகளை முழுவதுமாக நேர்மையோடு ஆற்றுவேன், வாரத்தில் ஒருநாள் நான் பெட்ரோல்-டீசல் ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன் என்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உறுதி பூண்டு விட்டால், மிகப் பெரிய மாற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்கூடாகவே காண முடியும். விஷயம் மிகச் சின்னதாகக் கூட இருக்கலாம். அதாவது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் குடிமகன் என்ற முறையில் தத்தமது கடமைகளை ஆற்ற வேண்டும், பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் நான் கூற விரும்புவது. இது தான் ஒரு புதிய பாரதத்தின் மங்களகரமான தொடக்கமாக அமையும்.

2022ஆம் ஆண்டு, சுதந்திரம் அடைந்து 75ஆவது ஆண்டில் நாம்  அடியெடுத்து வைத்திருப்போம்.   பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரை நாம் நினைவில் கொள்வோம், சம்பாரண் சத்தியாகிரஹத்தை மனதில் இருத்துவோம். நாம் அடைந்த தன்னாட்சியை நல்லாட்சியாக மலரச் செய்யும் இந்தப் பயணத்தை நாம் ஏன் ஒழுங்குமுறையுடனும், மனவுறுதியுடனும் மேற்கொள்ளக் கூடாது? இந்தப் பயணத்தில் பங்கெடுக்க வாருங்கள் என்று நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

 

எனதருமை நாட்டுமக்களே, நான் உங்களுக்கு இன்று என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக நமது நாட்டில் மிகப்பெரிய அளவில் மக்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் செயல்படும் டிஜி-தன் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள். ரொக்கமில்லாப் பரிவர்த்தனையை எப்படி மேற்கொள்ள முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரித்தது. பரம ஏழைகள் கூட இதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், மெல்ல மெல்ல ரொக்கமில்லாத முறையில் எப்படித் தொழில் செய்வது என்ற திசையை நோக்கி முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. நாணய விலக்கலுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் தொகை செலுத்தல் முறையில் பல முன்னேற்றங்களைக் காண முடிகிறது. பீம் செயலியை நாம் ஆரம்பித்து 2-3 மாதங்களே ஆன நிலையில், இதுவரை சுமார் ஒண்ணரை கோடி மக்கள் இதைத் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

 

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போரில் நாம் முன்னேற வேண்டும். 125 கோடி நாட்டுமக்கள் இந்த ஆண்டு 2 ½ இலட்சம் கோடி அளவு டிஜிட்டல்வழி பரிவர்த்தனையைச் செய்யும் உறுதி பூண முடியுமா? இதை செயல்படுத்த 125 கோடி நாட்டுமக்களும் விரும்பினால், இதற்காக ஓராண்டுக்காலம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, இதை ஆறே மாதங்களில் கூட செய்து விட முடியும். இதை செயல்படுத்தும் வகையில் நாம் பள்ளிக்கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம், நாம் ரயிலிலோ, விமானத்திலோ செய்யும் பயணத்துக்கான பயணச்சீட்டுக் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளலாம், மருந்துகளை டிஜிட்டல் முறையில் வாங்கலாம், நாம் மலிவுவிலை உணவுப்பொருட்கள் கடையை நடத்துபவர் என்றால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். நமது அன்றாடச் செயல்பாடுகளில் இவற்றை நாம் கைக்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் தேசத்துக்கு மிகப் பெரிய சேவையாற்றுகிறீர்கள் என்பதை நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் களவீரர்களாக செயல்படுவீர்கள். கடந்த நாட்களில், மக்களின் விழிப்புணர்வுக்காக டிஜிதன் கொண்டாட்டங்களுக்கான பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாடுமுழுவதிலும் 100 நிகழ்ச்சிகளைச் செய்வது என்ற உறுதி மேற்கொள்ளப்பட்டிருந்தது. 80-85 நிகழ்ச்சிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. இவற்றில் பரிசுத் திட்டங்களும் இடம் பெற்றிருந்தன. சுமார் 12 ½ இலட்சம் நுகர்வோர் இதன் மூலம் பயன் பெற்றார்கள். 70,000 வியாபாரிகள் இவர்களுக்கான பரிசுகளை வென்றார்கள். ஒவ்வொருவரும் இந்தப் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்லும் உறுதி பூண்டார்கள். ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி டா.பாபாசாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாள். இந்த டிஜிதன் கொண்டாட்டங்கள் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாளன்று நிறைவு பெறும் என்பது முன்பே முடிவு செய்யப்பட்ட விஷயம். 100 நாட்கள் நிறைவடைந்ததை ஒட்டி, ஒரு மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. மிகப்பெரிய குலுக்கலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பாபா சாஹிப் அம்பேத்கரின் பிறந்த நாளுக்கு இன்னும் எத்தனை காலம் பாக்கி இருக்கிற்தோ, அதற்குள்ளாக முடிந்த மட்டிலும் நாம் பீம் செயலி பற்றிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ரொக்கப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் நமது பங்களிப்பு அமைய வேண்டும்.

 

     நேசம்நிறை நாட்டுமக்களே, ஒவ்வொரு முறையும் நான் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக உங்களை ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்வதற்கு இணங்க, பலவகைப்பட்ட ஆலோசனைகளை நீங்கள் எனக்கு அளித்து வருகிறீர்கள். ஆனால் உங்கள் ஆலோசனைகளில் தூய்மை பற்றி நீங்கள் அதிக அழுத்தத்தை எப்போதுமே கொடுத்து வருவதை என்னால் பார்க்க முடிகிறது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

 

டேராடூனைச் சேர்ந்த காயத்ரி என்ற 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தொலைபேசி வாயிலாக ஒரு செய்தியை அளித்திருக்கிறார் –

 

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நீங்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நான் உங்களிடம் என் மனதின் குரலைத் தெரிவிக்க விரும்புகிறேன். தூய்மை என்பது எத்தனை முக்கியமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூற விழைகிறேன்.  நான் தினமும் கடக்கும் வழியில் இருக்கும் நதியில் மக்கள் அதிக குப்பை கூளங்களைப் போட்டு மாசுபடுத்துகிறார்கள். இந்த நதி ரிஸ்பனா பாலத்தைக் கடந்து வருகிறது, என் வீட்டருகில் இது ஓடுகிறது. நதியை மாசுபடுத்துவதற்கு எதிராக நாங்கள் பகுதி பகுதியாகச் சென்றும், நடைபயணங்களை மேற்கொண்டும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் இதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. நீங்கள் உங்கள் தரப்பிலிருந்து ஒரு குழுவை அனுப்பியோ, செய்தித்தாள்கள் வாயிலாகவோ இந்த விஷயம் பற்றிய விழிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

 

சகோதர சகோதரிகளே, 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி மனதில் எத்தனை வலி இருக்கிறது பாருங்கள். அந்த நதியில் பெருகிவரும் குப்பைக் கூளங்களைப் பார்த்து அவருக்கு எத்தனை கோபம் ஏற்படுகிறது பாருங்கள்!! நான் இதை நல்லதொரு அறிகுறியாகவே காண்கிறேன். 125 கோடி நாட்டுமக்களின் மனங்களிலும் மாசினைக் கண்டால் கோபம் எழ வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். ஒரு முறை கோபம் ஏற்பட்டு விட்டால், அருவருப்பு உண்டாகி விட்டால் சீற்றம் ஏற்படும். அப்போது நாமே கூட, மாசிற்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்குவோம். காயத்ரியும் தனது கோபத்தை வெளிப்படுத்துவது நல்ல விஷயம் தான்; அவர் எனக்கு ஆலோசனையும் வழங்கி இருக்கிறார்; மாசுக்கு எதிராக அவர் முயற்சிகளை மேற்கொண்டாலும், அவை வெற்றி பெறவில்லை என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார். தூய்மை பற்றிய இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே விழிப்புணர்வும் ஏற்பட்டு விட்டது. ஒவ்வொருவரும் இதில் தங்களை ஆக்கபூர்வமாக இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது ஒரு மக்கள் இயக்கமாகவே மலர்ந்திருக்கிறது. அசுத்தத்துக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. விழிப்புணர்வாகட்டும், ஆக்கபூர்வமான பங்களிப்பாகட்டும், இயக்கமாகட்டும், இவற்றுக்கான மகத்துவம் கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் தூய்மை, இயக்கம் சார்ந்தது அல்ல, இயல்பு சார்ந்தது. இந்த இயக்கம் இயல்பை மாற்றும் இயக்கம். இந்த இயக்கம் தூய்மையை இயல்பாக ஆக்க ஏற்பட்ட இயக்கம். இயக்கம் சமூகரீதியில் செயல்படலாம். பணி கடினமானது தான் என்றாலும், செய்யத்தான் வேண்டும். தேசத்தின் புதிய தலைமுறை, பாலகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரிடத்தில் உருவாகி இருக்கும் இந்த உணர்வு, நல்லதொரு அறிகுறியைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்திருக்கிறது என்பதில் எனக்குப் பெருநம்பிக்கை இருக்கிறது. இன்று எனது மனதின் குரலில், யாரெல்லாம் காயத்ரியின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்கள் அனைவரிடமும் நான் கூற விரும்புவது ஒன்றைத் தான் – காயத்ரி அளித்திருக்கும் செய்தி நம் அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் செய்தியாக அமைய வேண்டும்.

 

பாசம்மிகு நாட்டுமக்களே, மனதின் குரல் நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே, எனக்கு உணவை வீணாக்குதல் பற்றி பல ஆலோசனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. நாம் நமது இல்லங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் உணவருந்தும் போது நமது தட்டுக்களில் தேவைக்கு அதிகமாக உணவை இட்டுக் கொள்கிறோம் என்பதை நாமனைவரும் அறிவோம். கண்ணில் படும் உணவை எல்லாம் நாம் நமது தட்டுக்களில் போட்டுக் கொள்கிறோம், ஆனால் முழுமையாக உண்ண முடிவதில்லை. நம் தட்டுக்களில் நிரப்பிக் கொள்வதில் பாதியளவு கூட நம் வயிறுகளில் நம்மால் நிரப்பிக் கொள்ள முடிவதில்லை. மிஞ்சிய உணவை அப்படியே போட்டு விட்டு வெளியேறி விடுகிறோம். நாம் விட்டுச் செல்லும் மிச்சம் மீதிகளால் எத்தனை நாசத்தை ஏற்படுத்துகிறோம் என்பதை நாம் எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா? நாம் மிச்சம் மீதி வைக்கவில்லை என்றால், இது எத்தனை ஏழைகளுக்கு உணவளிக்க உதவியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறோமா? இது புரியவைக்கப்பட வேண்டிய விஷயமில்லை. நம் வீடுகளில் குழந்தைகளுக்கு அன்னை உணவு படைக்கும் போது என்ன கூறுவார் தெரியுமா? தம்பி, உன்னால் எந்த அளவு சாப்பிட முடியுமோ, அந்த அளவுக்கு மட்டும் தட்டுல போட்டுக்கோ என்பாள். ஏதோ ஒருவகையில் முயற்சி செய்யப்பட்டு வருகிறது என்பது என்னவோ உண்மை தான்; ஆனாலும் இந்த விஷயத்தில் காட்டப்படும் உதாசீனம், சமுதாயத்துக்கு எதிராக இழைக்கப்படும் ஒரு மிகப்பெரிய துரோகச் செயல். இது ஏழைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி.  இன்னொரு புறத்தில் உணவை வீணாக்கவில்லை என்றால் சேமிப்பு ஏற்படும், குடும்பம் பொருளாதார ரீதியாக பலன் பெறும். சமுதாயரீதியாக சிந்திக்கும் போதும் இது நல்ல விஷயம் தான், குடும்பரீதியாக நோக்கும் போதும், இது பயன் தரும் விஷயம் தான். நான் இந்த விஷயத்தில் அதிக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு மொபைல் செயலியை ஏற்படுத்தி இயக்கத்தை நடத்தி வரும் சில இளைஞர்களை நான் அறிவேன்; எங்காவது உணவு மிஞ்சி இருந்தால், இவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இவர்கள் மிஞ்சிய உணவை சேகரித்துச் சென்று, தேவையானவர்களுக்கு அதைப் பகிர்ந்தளிப்பார்கள். உணவை நல்ல முறையில் பயனபடுத்தும் இந்த வழிமுறை, இதற்காக செய்யப்படும் உழைப்பு நம்நாட்டு இளைஞர்கள் செய்து வருகிறார்கள். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் எங்காவது இப்படிப்பட்டவர்களை நீங்கள் சந்திக்கலாம். நாம் உணவை வீணாக்கக் கூடாது என்று இவர்களின் வாழ்கை நமக்கு உத்வேகம் அளிக்கும் ஒன்றாக அமைகிறது. எந்த அளவு நம்மால் கொள்ள முடியுமோ, அந்த அளவு மட்டுமே நாம் தட்டில் இட்டுக் கொள்ள வேண்டும்.

 

மாற்றம் காண்பதற்கான வழிகள் இப்படிப்பட்டவை தாம் பாருங்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வு கொண்டவர்கள், இலையிலும் சற்றுக் குறைவாகப் போட்டுக் கொள், வயிற்றிலும் சற்றுக் குறைவாக நிரப்பிக் கொள் என்று அவர்கள் எப்போதுமே கூறுவார்கள். ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி உலக உடல்நல நாள். ஐக்கிய நாடுகள் சபை 2030ஆம் ஆண்டுக்குள்ளாக Universal Health Coverage, அனைவருக்குமான உடல்நலப் பாதுகாப்பு என்ற இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இந்த முறை ஐக்கியநாடுகள் சபை ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரும் உலக உடல்நல நாளை முன்னிட்டு மன அழுத்தம் என்ற கருத்தின் மீது அழுத்தம் தர இருக்கிறார்கள். இந்த ஆண்டு அவர்களின் கருப்பொருள் மன அழுத்தம். உலகெங்கும் சுமார் 35கோடிக்கும் அதிகமானோர் மனவழுத்தத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. நம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு மனவழுத்தம் இருக்கிறது என்பதே கூட பல நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை; சில வேளைகளில் இது பற்றி மனம் திறந்து பேசக் கூட சங்கடம் ஏற்படுவது இன்னொரு சிக்கல். யார் மனவழுத்தத்தில் துயரப்பட்டுக் கொண்டிருக்கிறாரோ அவரும் எதுவும் தெரிவிப்பதில்லை, ஏனென்றால் அவருக்கு இதை வெளியே சொல்லக் கூட வெட்கமாக இருக்கிறது.

 

மன அழுத்தம் விடுபட முடியாத நிலை என்று கருத வேண்டாம் என்பதையே நான் நாட்டுமக்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். மனோவியல் ரீதியான ஒரு சூழலை ஏற்படுத்துவதன் மூலமாக நாம் ஒரு தொடக்கத்தை உண்டாக்கலாம். மன அழுத்தத்தை அழுத்தி வைத்திருப்பதற்கு பதிலாக, அதை வெளிப்படுத்துவது என்பது தான் முதல் உத்தி.  நண்பர்களிடம், தாய்-தந்தையரிடம், சகோதர-சகோதரிகளிடம், ஆசிரியர்களிடம் மனம் திறந்து பேசுங்கள், உங்கள் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே உரையுங்கள். சில வேளைகளில் தனிமை, குறிப்பாக விடுதிகளில் தங்கிப் படிக்கும் குழந்தைகளிடம் சிரமங்கள் அதிகம் காணப்படுகின்றன. நாம் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர்கள் என்பது நமது தேசமக்கள் செய்த நற்பயன் என்றே கூற வேண்டும். குடும்பம் பெரியதாக இருக்கும், கலகலப்பான சூழல் நிலவும், இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே இருக்கும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் மகனோ மகளோ அல்லது வேறு ஒரு உறுப்பினரோ, குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உண்பதற்கு பதிலாக, நான் பிறகு சாப்பிடுகிறேன், என் உணவை மேஜை மீது வைத்து விடுங்கள் என்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது வீட்டில் இருக்கும் அனைவரும் வெளியே செல்லும் போது, இல்லை, இல்லை நான் இன்று வெளியே வர விரும்பவில்லை, தனியாக இருப்பதையே விரும்புகிறேன் என்று கூறும் போது தாய்-தந்தையரின் கவனம் அவர்களின் மீது செலுத்தப்பட வேண்டும். அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சற்றேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? கண்டிப்பாக அவர்கள் மன அழுத்தத்தின் முதல் படியில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் எல்லோருடனும் கலந்து பழகாமல், தனிமையை நாடுகிறார்கள் என்றால் நிலையை சீர்செய்ய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அவர்களுடன் மனம் திறந்து பேசுபவர்களிடம் அவர்களைப் பழக விடுங்கள். கலகலப்பாகப் பேசும் சூழலை ஏற்படுத்தி, அவர்களையும் அதில் பங்கு பெற ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு உளைச்சல் தரும் மனப்பாங்கை வெளியேற்றுங்கள். இது தான் சிறந்த வழி. மன அழுத்தம், மனம் மற்றும் உடல்ரீதியான நோய்களை வாவென்றழைக்கிறது. எப்படி நீரிழிவு நோய் அனைத்து விதமான நோய்களுக்கும் சுகமான தளமமைத்துக் கொடுக்கிறதோ, அதைப் போலவே மன அழுத்தமும் நமது தாக்குப் பிடிக்கும் சக்தி, கடுமையான சூழல்களுக்கு எதிராகப் போராடும் தன்மை, தன்முனைவுத் திறன், முடிவெடுக்கும் ஆற்றல் என நமது அனைத்துத் திறன்களையும் முடக்கிப் போட்டு விடுகிறது. உங்கள் நண்பர்கள், உங்கள் குடும்பம், உங்கள் சுற்றம், உங்கள் சூழல் என இவையனைத்தும் தான் உங்களை மன அழுத்தத்திலிருந்து காப்பாற்ற முடியும், அப்படியே நீங்கள் மன அழுத்தத்தில் சிக்கி இருந்தாலும், உங்களை வெளிக் கொணர முடியும். மேலும் ஒரு வழி இருக்கிறது. உங்களைச் சார்ந்தவர்களிடத்தில் நீங்கள் வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்றால், உங்கள் அருகில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் சேவை உணர்வுடன் மக்கள் பணியில் ஈடுபடுங்கள். முழுமனதோடு சேவை புரியுங்கள், அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள், உங்களின் துக்கம் தானாகவே கரைவதை நீங்கள் கண்கூடாகக் காண முடியும். மற்றவர்களின் துக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்தால், அதை சேவை உணர்வோடு அந்தச் செயலைச் செய்தால், உங்களுக்குள்ளே ஒரு தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். மற்றவர்களோடு கலந்து பழகுவதன் மூலமாக, மற்றவர்களுக்கு தன்னலமற்ற சேவை புரிவதன் வாயிலாக, நீங்கள் உங்கள் மனதில் இருக்கும் பாரத்தை எளிதில் இறக்கி வைத்துக் கரைக்க முடியும்.

 

இதைப் போலவே யோகமும் உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு நல்ல வழி. அழுத்தத்திலிருந்து விடுதலை, நெருக்கடியிருந்து ஓய்வு, மலர்ந்த முகம் ஆகியவற்றை அடைய யோகம் மிகுந்த உதவிகரமாக இருக்கிறது. ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோக தினம்; இது 3வது யோக தினமாகும். நீங்கள் இப்போதிலிருந்தே உங்கள் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்குங்கள். லட்சக்கணக்கானவர்கள் சமூகரீதியாக யோகதினத்தில் பங்கெடுப்பதை உறுதி செய்யுங்கள். 3வது சர்வதேச யோக தினம் குறித்து உங்கள் மனதில் ஆலோசனைகள் ஏதும் இருந்தால், நீங்கள் மொபைல் செயலி வாயிலாக உங்கள் ஆலோசனைகளை எனக்குக் கண்டிப்பாக அனுப்புங்கள், வழிகாட்டுங்கள். யோகம் தொடர்பாக பாடல்கள், படைப்புகள் ஆகியவற்றை நீங்கள் உருவாக்கலாம், இதனால் மக்களின் புரிதல் அதிகப்படலாம்.

 

அன்னையர்-சகோதரிமார்களிடமும் நான் இன்று ஒரு விஷயம் குறித்துப் பேச விரும்புகிறேன். இன்று உடல்நலம் பற்றி பல விஷயங்களைப் பேசியிருக்கிறோம். கடந்த நாட்களில் அரசு ஒரு மிகப்பெரிய தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது. நம் நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது, அவர்களின் பங்களிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால் இதனுடன் கூட பெண்களுகென சில சிறப்பான கடமைகள் இருக்கின்றன. குடும்பத்தின் பொறுப்பை அவரே சுமக்கிறார், வீட்டில் பொருளாதாரப் பொறுப்பிலும் அவரது பங்களிப்பு இருக்கிறது; இதன் காரணமாக பிறந்த குழந்தைக்கு அநீதி இழைக்கப்படுகிறது. பாரத அரசு மிகப் பெரிய தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது. வேலைக்குச் செல்லும் மகளிரின் பேறுக் காலத்தில், முன்பு அவர்களுக்கு 12 வாரக்கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது; இப்போது இது 26 வாரக்கால மகப்பேறு விடுப்பாக ஆக்கப்பட்டிருக்கிறது. உலகில் 2 அல்லது 3 நாடுகள் தாம் நம்மை விட அதிக மகப்பேறுவிடுப்பு அளித்திருக்கிறார்கள். நமது இந்த சகோதரிகளுக்காகவே பாரத அரசு இப்படிப்பட்ட ஒரு மகத்தான முடிவை எடுத்திருக்கிறது. பாரதத்தின் வருங்காலக் குடிமகனுக்கு பிறந்த நாள்முதல் முறையான கவனிப்பு இருக்க வேண்டும், அன்னையின் முழுமையான அன்பு அந்தச் சிசுவுக்குக் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்தால் தான், இவர்கள் வருங்காலத்தில் தேசத்தின் செல்வங்களாக ஆவார்கள் என்பது தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை குறிக்கோள். அப்போது தான் அன்னையரின் உடல்நலமும் சிறந்து விளங்கும். இதன் காரணமாக முறையான துறைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 18 லட்சம் மகளிருக்கு இதன் பலன் கிட்டும்.

 

எனக்குப் பிடித்தமான நாட்டுமக்களே, ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி புனிதமான இராமநவமி, ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் ஆகியன வரவிருக்கின்றன. இந்த மாமனிதர்களின் வாழ்கை நமக்கு என்றென்றும் உத்வேகம் அளித்து வரட்டும், புதிய பாரதம் சமைக்க நமக்கு மனவுறுதி அளிக்கட்டும். இரண்டு நாட்கள் கழித்து, சைத்ர சுக்ல ப்ரதிபதா, வர்ஷ் ப்ரதிபதா, புத்தாண்டு ஆகியன வரவிருக்கின்றன. இந்தப் புத்தாண்டை முன்னிட்டு நான் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வசந்தகாலத்திற்குப் பிறகு, பயிர்கள் முதிர்ச்சியடையத் தொடங்கி, விவசாயிகளின் உழைப்பிற்கான பலன் கிடைக்க இருக்கும் வேளை இது. நமது தேசத்தின் பல மூலைகளிலும் இந்தப் புத்தாண்டை பலப்பல வழிகளில் கொண்டாடுகிறார்கள். மஹாராஷ்ட்ரத்தில் குடிபடவா எனவும், ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் உகாதி எனவும், சிந்தி சேடீ-சாந்த் எனவும், காஷ்மீரில் நவ்ரேஹ் எனவும், அவத் பிரதேசத்தில் சம்வத்ஸர் பூஜை எனவும், பீகாரின் மிதிலைப் பகுதியில் ஜுட்-ஷீதல் எனவும், மகதத்தில் சாதுவாணி எனவும் புத்தாண்டு பலவிதமாகக் கொண்டாடப்படுகிறது. பாரதம் இத்தனை வித்தியாசங்கள் நிறைந்த தேசம். உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

PM @narendramodi extends his greetings to the people of Bangladesh on their Independence Day. #MannKiBaat pic.twitter.com/1ku2W7s7p1

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Indian economy ends 2024 with strong growth as PMI hits 60.7 in December

Media Coverage

Indian economy ends 2024 with strong growth as PMI hits 60.7 in December
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 17, 2024
December 17, 2024

Unstoppable Progress: India Continues to Grow Across Diverse Sectors with the Modi Government