வங்கதேச பிரதமர் மேதகு ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பின் பேரில் நான் 2021 மார்ச் 26-27 ஆகிய தேதிகளில் வங்க தேசத்துக்கு பயணம் மேற்கொள்கிறேன்.
கொவிட்-19 தொற்று தொடங்கியபிறகு, எனது முதல் வெளிநாட்டு பயணமாக, நமது நட்பு அண்டை நாடான வங்கதேசத்துக்கு செல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அந்நாட்டுடன், இந்தியா ஆழமான கலாச்சார, மொழியியல் மற்றும் மக்கள் தொடர்புகளை கொண்டுள்ளது.
நாளை நடைபெறும் வங்கதேச தேசிய தின கொண்டாட்டங்களில் எனது பங்கேற்பை எதிர்நோக்கியுள்ளேன். இது வங்கதேசத்தின் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு பிறந்த தினத்தையும் நினைவு கூர்கிறது.
கடந்த நூற்றாண்டின் மிக உயர்ந்த தலைவர்களில் பங்கபந்துவும் ஒருவராக இருந்தார். அவரது வாழ்க்கை மற்றும் கொள்கைகள், கோடிக்கணக்கானோரை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
அவரது நினைவாக துங்கிபாரா பகுதியில் உள்ள பங்கபந்துவின் நினைவிடத்திற்கு சென்று, மரியாதை செலுத்துவதையும் நான் எதிர்நோக்கியுள்ளேன்.
புராண பாரம்பரியத்தில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும், பழங்கால ஜஷோரேஷ்வரி காளி கோயிலுக்கு சென்று வழிபடுவதையும் நான் எதிர்நோக்கியுள்ளேன்.
ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்திர தாக்கூர் தனது போதனைகளை கூறிய ஒரகண்டியில் மதுவா இன பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுவதையும் நான் குறிப்பாக எதிர்நோக்கியுள்ளேன்.
கடந்தாண்டு டிசம்பரில் நடந்த ஆக்கப்பூர்வமான காணொலி கூட்டத்தை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசினாவுடன் நான் விவாதிக்கவுள்ளேன்.
மேதகு வங்கதேச அதிபர் அப்துல் ஹமீத் மற்றும் இதர வங்கதேச பிரதிநிதிகளை சந்திப்பதையும் நான் எதிர்நோக்கியுள்ளேன்.
தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் ஷேக் ஹசினாவின் தலைமையின் கீழ் வங்கதேசத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாக மட்டுமின்றி, இந்த சாதனைகளுக்கு இந்தியாவின் நிலையான ஆதரவை உறுதியளிப்பதாகவும் எனது பயணம் அமைந்திருக்கும்.
கொவிட்-19க்கு எதிரான பேராட்டத்துக்கு, இந்தியாவின் ஆதரவு மற்றும் ஒற்றுமையையும் நான் தெரிவிப்பேன்.