மொரிஷியஸ் குடியரசின் பிரதமர் மாண்புமிகு திரு பிரவிந்த் ஜுகுநாத் அவர்களே, அமைச்சர் பெருமக்களே, மொரிஷியசின் பிரமுகர்களே, மதிப்புமிகு விருந்தினர்களே, நண்பர்களே அனைவருக்கும் நமஸ்காரம்.
மொரிஷியசில் உள்ள நமது நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருநாடுகளுக்கும் இந்த கலந்துரையாடல், ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. நமது பரஸ்பர வரலாறு, பாரம்பரியம் மற்றும் ஒத்துழைப்பில் இது ஒரு புதிய அத்தியாயம். சமீபத்தில் மொரிஷியசில் நடைபெற்ற இந்துமாக்கடல் தீவுகள் விளையாட்டுப் போட்டிகள், அந்த நாட்டுக்குப் பெருமையை தேடித்தந்துள்ளன.
நமது இரு நாடுகளும் தற்போது துர்கா பூஜையைக் கொண்டாடி வருகின்றன: விரைவில் தீபாவளியைக் கொண்டாட உள்ளன. இவற்றை முன்னிட்டு மெட்ரோ திட்டத்தின் முதல்கட்டத் தொடக்கம் மிகுந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக அமைகிறது.
மெட்ரோ ரயில் தூய்மையான, திறம்பட்ட, நேரத்தை மிச்சப்படுத்தும் போக்குவரத்தை வழங்க உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்கும், சுற்றுலாவுக்கும் அது பங்களிக்கும்.
இன்று தொடங்கப்பட்ட மற்றொரு திட்டமான அதிநவீன காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை, தரமான மருத்துவ சேவைக்கு வழி வகுக்கும். இந்த மருத்துவமனை மின்சார பயன்பாட்டில் திறன்மிக்க கட்டிடத்தில், செயல்படுகிறது. மேலும் இந்த மருத்துவமனை, காகிதம் இல்லாத சேவைகளை வழங்க உள்ளது.
இந்த இரண்டு திட்டங்களும் மொரிஷியஸ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவை இரண்டும் மொரிஷியஸ் மேம்பாட்டில் இந்தியாவுக்கு உள்ள உறுதிப்பாட்டின் அடையாளமாக திகழ்கின்றன.
இந்தத் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பகல், இரவு பார்க்காமல், மழை, வெயில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்துள்ளனர்.
கடந்த நூற்றாண்டுகளைப் போல் அல்லாமல் இன்றைய நிலையில் நாம், நமது மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக உழைத்து வருகிறோம்.
மொரிஷியசின் நவீன அடிப்படை வசதி மற்றும் சேவைகளுக்காக திட்டமிட்டு வரும் பிரதமர் திரு பிரவிந்த் ஜுகுநாத்தின் தொலைநோக்குத் தலைமைப் பண்பை நான் பாராட்டுகிறேன். அவரும், மொரிஷியஸ் அரசும், இந்தத் திட்டங்கள் உரிய காலத்தில் நிறைவடைவதற்கு முக்கிய பங்காற்றியமைக்காக, அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்தத் திட்டங்களிலும், பொது நலனுக்கு நேரடியாக பங்களிக்கும் இதரத் திட்டங்களிலும் மொரிஷியசுடன், ஒத்துழைத்தமைக்காக இந்தியா பெருமிதம் கொள்கிறது.
சென்ற ஆண்டு, இதே போன்ற கூட்டுத்திட்டத்தின் மூலம், இளம் குழந்தைகளுக்கு ஈ-டேப்லெட்டுகள் வழங்கப்பட்டன.
புதிய உச்சநீதிமன்றக் கட்டடமும் மற்றும் ஓராயிரம் சமூக வீட்டுவசதி குடியிருப்புகளும், விரைவாக அமைக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் திரு ஜுகுநாத் ஆலோசனையின்படி, சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, மருத்துவ கிளினிக்குகள், மண்டல மருத்துவ மையங்கள் ஆகியவை அமைப்பதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
இந்தியாவும், மொரிஷியசும் தங்கள் மக்களுக்கு வளம் சேர்க்க பாடுபட்டு வரும், பன்முகத்தன்மை கொண்ட துடிப்பான ஜனநாயகங்கள்: இவை, மண்டல மற்றும் உலக அமைதிக்காகவும் உழைத்து வருகின்றன.
பரஸ்பரம் நாம் கொண்டுள்ள மரியாதை பல வழிகளில், காணப்படுகின்றது.
இந்த ஆண்டு பிரதமர் திரு ஜுகுநாத் இந்தியாவில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தினத்துக்கான மாபெரும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். எனது அரசு மீண்டும் பதவி ஏற்ற நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.
மொரிஷியசின் 50-வது சுதந்திர நாள் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக எமது குடியரசுத்தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளின் போது மொரிஷியஸ், அவரை மரியாதையுடன் நினைவு கூர்ந்தது. மரியாதை செலுத்தியது, அவருடன் தனக்கிருந்த தனிப்பட்ட உறவை, நினைவு கூர்ந்தது.
நண்பர்களே,
இந்துமாக்கடல், இந்தியாவுக்கும் மொரிஷியசுக்கும் இடையே ஒரு பாலமாக உள்ளது. நமது மக்களுக்கு, பெருங்கடல் பொருளாதாரம் சிறந்த வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
“மண்டலத்தின் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு” திட்டமான சாகர் திட்டத்தின் தொலைநோக்கு, கடல்சார் பொருளாதாரம், பாதுகாப்பு, பேரிடர் அபாயங்களைக் குறைத்தல் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களிலும் இருநாடுகளும் நெருங்கி உழைப்பதற்கான வழிகாட்டு நெறிகளை வழங்குகிறது.
பேரிடர் மீட்டெழுச்சி அடிப்படை வசதி கூட்டணியில், தொடக்கநிலை உறுப்பினராக சேர்ந்தமைக்காக, மொரிஷியஸ் அரசுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
மாண்புடையோரே,
இந்த மாதத்தில் ஆப்பிரவாசி கட்-டின் உலகப் பாரம்பரிய இடத்தில் ஆப்பிரவாசி தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி நமது தீரம் மிக்க முன்னோரின் வெற்றிகரமான போராட்டத்தைக் குறிப்பதாக அமையும்.
இந்த நூற்றாண்டில் மொரிஷியசின் மாபெரும் வெற்றியில் இந்தப் போராட்டங்கள் நல்ல பலனைத் தந்துள்ளன.
மொரிஷியஸ் மக்களின் உணர்வுமிக்க ஆர்வத்திற்கு தலை வணங்குகிறேன்.
இந்தியா – மொரிஷியஸ் நட்புறவு நீடூழி வாழட்டும்
இந்தியா – மொரிஷியஸ் நட்புறவு நீடூழி வாழட்டும்
உங்களுக்கு நன்றி. உங்களுக்கு மிக்க நன்றி