Metro will further strengthen the connectivity in Ahmedabad and Surat - what are two major business centres of the country: PM Modi
Rapid expansion of metro network in India in recent years shows the gulf between the work done by our government and the previous ones: PM Modi
Before 2014, only 225 km of metro line were operational while over 450 km became operational in the last six years: PM Modi

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலமாக நடத்தினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர், மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மெட்ரோ ரயில் சேவை குறித்து அகமதாபாத்துக்கும், சூரத்துக்கும் பாராட்டு தெரிவித்ததோடு, நாட்டின் இரண்டு முக்கிய வர்த்தக நகரங்களுக்கு இடையேயான இணைப்பு இந்த ரயில் சேவை மூலம் மேம்படும் என்று கூறினார். குஜராத்தின் புதிய ரயில்கள்; அகமதாபாத்திலிருந்து கேவடியாவிற்கு நவீன ஜன் சதாப்தி ரயில் உட்பட பல்வேறு இணைப்புகள் கேவடியாவுக்கு தொடங்கப்பட்டுள்ளதற்காகவும் அவர் குஜராத் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமானத் திட்டங்களுக்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். கொரோனா காலத்தின் போதும், கட்டமைப்புக்கான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதையே இது காட்டுகிறது. சமீப காலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கட்டமைப்புத் திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன அல்லது புதிய திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டன.

அகமதாபாத், சூரத் நகரங்கள், தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு பங்களிப்பவையாக திகழ்கின்றன என்று கூறிய பிரதமர், அகமதாபாதில் முதல் முதலாக மெட்ரோ ரயில் துவங்கப்பட்ட போது நிலவிய உற்சாகத்தை நினைவுகூர்ந்தார். அதையடுத்து அகமதாபாத் தனது கனவுகளையும் அடையாளத்தையும் மெட்ரோவுடன் எவ்வாறு இணைத்துக் கொண்டது என்பதையும் அவர் குறிப்பிட்டார். வசதியான போக்குவரத்தின் மூலம் நகரத்தின் பல்வேறு புதிய இடங்களும், இந்த நகரத்தோடு இணைக்கப்படும் என்பதால் இரண்டாவது கட்டம் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும். இதே போன்று சூரத் நகரமும் மேலும் சிறந்த இணைப்பு வசதியைப் பெறும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் வருங்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன என்று பிரதமர் கூறினார்.

மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், திட்டங்களைப் பற்றிய அணுகுமுறையில், முந்தைய அரசுகளுக்கும் தற்போதைய அரசுக்கும் உள்ள வேறுபாடு பற்றிக் கூறினார். 2014 ஆம் ஆண்டுக்கு முன் 10-12 ஆண்டுகளில் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ இணைப்பு இருந்தது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 400 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ இணைப்பு இயக்கப்பட்டுள்ளது. 27 நகரங்களில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கான புதிய வழித்தடங்கள் குறித்த பணிகளை அரசு துவக்கியுள்ளது. முந்தைய காலகட்டத்தில் நவீன முறையிலான ஒருங்கிணைந்த சிந்தனை இருக்கவில்லை என்பது குறித்து அவர் வேதனை தெரிவித்தார். மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த தேசிய அளவிலான கொள்கை எதுவும் இருக்கவில்லை. எனவே பல்வேறு நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் குறித்த தொழில்நுட்பங்கள், இதர முறைகளில் சீரான தன்மை நிலவவில்லை. இரண்டாவதாக, மெட்ரோ ரயில், இதர போக்குவரத்து அமைப்புகளுடன் இணைந்ததாக இருக்கவில்லை. இன்று, இந்த நகரங்களில், போக்குவரத்து, ஒருங்கிணைந்த ஒரு அமைப்பாக செயல்படுகிறது. இந்த நகரங்களில் மெட்ரோ தனித்து செயல்படாமல் மற்ற போக்குவரத்து முறைகளுடன் இணைந்து ஒட்டுமொத்த போக்குவரத்துக்கான அமைப்பாக செயல்படும். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பொது நடமாடும் அட்டை திட்டம், இந்த ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

சூரத், காந்திநகர் உதாரணத்தை எடுத்துக் கொண்ட பிரதமர், நகர்ப்புறமயமாக்குதல் பற்றிய அரசின் சிந்தனை வருங்காலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு தாமாகவே முன்வந்து செயல்படும் வகையில் அமைந்துள்ளது என்று கூறினார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, வளர்ச்சியைப் பற்றி அல்லாமல் கொள்ளைநோய் நிலவியது பற்றியே, சூரத் குறிப்பிடப்பட்டு வந்தது. சூரத்தை, தொழில் முனைவோர் தன்மை கொண்டதாக மாறும் வகையில் அரசு மேம்படுத்தியது. நாட்டில் அதிக அளவு மக்கள் தொகை உள்ள நகரங்களில் எட்டாவது இடத்தில் சூரத் உள்ளது. உலகில் மிக அதிகமாக வளர்ச்சியுறும் நகரங்களில், சூரத், நான்காவது இடத்தில் உள்ளது. பத்தில் ஒன்பது வைரங்கள் சூரத்தில்தான் பட்டை தீட்டி மெருகேற்றப்படுகின்றன. நாட்டில் மனிதர்களால் தயாரிக்கப்படும் துணியில் 40 சதவிகிதம் சூரத்தில் தான் தயாரிக்கப்படுகிறது. நாட்டில் மனிதர்களால் தயாரிக்கப்படும் இழைகளில் 30 சதவிகிதம் சூரத்தில் தான் தயாரிக்கப்படுகிறது. இன்று நாட்டிலேயே மிகத் தூய்மையான நகரங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது சூரத். இந்நகரத்தில் வசிப்பதை மேலும் எளிமையாக்கும் வகையில் ஏழை மக்களுக்கு வீட்டு வசதி வழங்குதல், போக்குவரத்து மேலாண்மை, சாலைகள் பாலங்கள் கட்டுதல், கழிவுநீர் அகற்றுதல், மருத்துவமனை வசதிகள் என்று பல்வேறு துறைகளிலும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். சிறந்த முறையில் திட்டமிடுதல், முழுமையான சிந்தனை ஆகியவற்றின் மூலமே இவை எல்லாம் சாத்தியமாயின. “ஒரே இந்தியா உன்னத இந்தியா” என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக சூரத் மாறியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலுமிருந்து வரும் தொழில்முனைவோருக்கும், தொழிலாளர்களுக்கும் உறைவிடமாக சூரத் மாறியுள்ளது என்று பிரதமர் கூறினார்.

அரசாங்க ஊழியர்களும் ஓய்வு பெற்றவர்களும் மட்டுமே இருக்கும் இடம் காந்தி நகர் என்ற நிலை மாறி, இன்று துடிப்பான பல இளைஞர்கள் உள்ள நகரமாக மாறியுள்ள காந்திநகர் குறித்தும் பிரதமர் கூறினார். ஐஐடி, தேசிய சட்ட பல்கலைக்கழகம், என் ஐ எஃப் டி, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், பண்டித தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்விக்கான இந்தியக் கல்வி அமைப்பு (இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டீச்சர் எஜுகேஷன்), திருபாய் அம்பானி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி, தேசிய வடிவமைப்புக் கழகம் (என் ஐ டி) ரக்ஷா சக்தி பல்கலைக்கழகம் போன்ற பல கல்வி அமைப்புகளுடன் அடையாளம் காணப்படுகிறது காந்திநகர். இந்த நகரத்தின் கல்விப்பரப்பை இந்த அமைப்புகள் மாற்றி அமைத்ததோடு மட்டுமல்லாமல், இந்தக் கல்வி அமைப்பு வளாகங்களுக்கு நிறுவனங்களைக் கொண்டு வந்து, நகரத்தில் வேலை வாய்ப்புகளை பெருகச் செய்துள்ளன. மகாத்மா மந்திர் மூலமாக ‘மாநாட்டு சுற்றுலா’ உத்வேகம் பெற்றது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். கிப்ட் சிட்டி, சபர்மதி நதிக்கரை, கங்கரிய ஏரிக்கரை, தண்ணீர் விமான நிலையம் பஸ் ரபிட் டிரன்சிட் சிஸ்டம் துரித பேருந்து போக்குவரத்து அமைப்பு, மோட்டேராவில் உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கு, ஆறு வழித்தட காந்திநகர் நெடுஞ்சாலை ஆகியவை அகமதாபாதின் அடையாளமாகத் திகழ்கின்றன. நகரம் தனது பழைய தன்மையை இழக்காமல் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது என்று பிரதமர் கூறினார்

அகமதாபாத், உலக புராதன நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், டோலராவில் புதிய விமான நிலையம் ஏற்படுத்தப்படும் என்று கூறினார். ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மோனோ ரயில் திட்டத்துடன் இந்த விமான நிலையத்திலிருந்து அகமதாபாத்துக்கு இணைப்பு ஏற்படுத்தப்படும். அகமதாபாத், சூரத் ஆகியவற்றை நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பையுடன் இணைக்கும் வகையிலான புல்லட் ரயில் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கிராமப்புற வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் தெரிவித்தார். குஜராத்தில் கடந்த 20 ஆண்டு காலங்களில் சாலைகள், மின்சாரம், நீர் நிலை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், குஜராத்தின் வளர்ச்சிப் பயணத்தில் இவையனைத்தும் மிக முக்கிய பங்காற்றின என்று கூறினார். இன்று குஜராத்தில் உள்ள ஒவ்வொரு கிராமமும், அனைத்து பருவ காலங்களிலும் பயணம் மேற்கொள்ளக் கூடிய சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின கிராமங்களிலும் மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள் உள்ளன. இன்று குஜராத்தில் உள்ள 80 சதவிகித வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 10 லட்சம் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. விரைவில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கும்.

இதேபோன்று நீர்ப்பாசனமும் புதிய உத்வேகம் பெற்றுள்ளது. சர்தார் சரோவர் சவுநி யோஜனா திட்டம், நீர் தொகுப்பு இணைப்பு ஆகியவை வறண்ட பகுதிகளுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்க வகை செய்துள்ளன. நர்மதா நீர் கட்ச்சை சென்றடைந்துள்ளது. நுண் நீர் நீர்ப்பாசனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின்சாரம் மேலும் ஒரு வெற்றிக்கதை. சூரிய சக்தியில் முதன்மை மாநிலமாக குஜராத் திகழ்கிறது. கட்ச்சில் உலகிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி ஆலையை அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கியது. சர்வோதயா யோஜனா திட்டத்தின் கீழ் நீர்ப்பாசனத்திற்கு என்று தனியாக மின்சாரம் அளிப்பதற்கான திட்டத்தை முதலில் நாட்டில் தொடங்கிய மாநிலமாக குஜராத் திகழ்கிறது.

சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் பிரதமர் கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இம்மாநிலத்தில் இருபத்தோரு லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ கேந்திரங்கள் இங்குள்ள நோயாளிகளுக்கு சுமார் 100 கோடி ரூபாய் மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளன. பிரதமர் ஆவாஸ் க்ராமிண் திட்டத்தின் கீழ் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் முப்பத்தி ஐந்து லட்சத்துக்கும் அதிகமான கழிப்பறைகள் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ளன.

இந்தியா மிகத் துணிச்சலான முடிவுகளை எடுக்கிறது. அது மட்டுமல்லாமல், அவற்றை விரைவாகச் செயல்படுத்தி வருகிறது என்றும் பிரதமர் உறுதிபடக் கூறினார். இந்தியா பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது என்பது மட்டுமல்லாமல், மேலும் சிறந்த முறையிலும் செயல்பட்டு வருகிறது என்றும் பிரதமர் கூறினார். உலகிலேயே மிகப்பெரிய சிலை; உலகிலேயே மிகப் பெருமளவில், வாங்கக்கூடிய விலையில் வீட்டு வசதி திட்டம்; சுகாதார நல உறுதித் திட்டம்; 6 லட்சம் கிராமங்களுக்கான இணையதள தொடர்பு சேவை; சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பு மருந்து செலுத்துவதற்கான மிகப்பெரிய இயக்கம் ஆகியவை இந்தச் சிந்தனைக்கான உதாரணங்கள்.

ஹசீரா மற்றும் கோங்கா இடையே ரோ பாக்ஸ் படகுப் போக்குவரத்து சேவை; கிர்நார் ரோப் வே ஆகியவை, மிகத் துரிதமாகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள், உள்ளூர் மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கு உதவுகின்றன என்பதற்கான உதாரணங்கள் என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் எரிபொருள், நேரம் ஆகியவற்றை மிச்சப்படுத்தி உள்ளன. கோங்கா மற்றும் ஹசீராவுக்கு இடையே உள்ள தூரம் 375 கிலோ மீட்டரிலிருந்து படகுப் போக்குவரத்தின் மூலமாக 90 கிலோ மீட்டராகக் குறைந்து விட்டது. இரண்டே மாதங்களில் 50 ஆயிரம் மக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தச் சேவை மூலமாக 14,000 வாகனங்களும் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும், கால்நடைத்துறையும் பயனடைந்துள்ளன. இதேபோன்று கிர்நார் திட்டம் இரண்டரை மாதங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் விருப்பங்களையும், தேவைகளையும் உணர்ந்துகொண்டு அதற்கேற்ப விரைந்து செயல்படுவதன் மூலமே புதிய இந்தியாவின் குறிக்கோளை அடைய முடியும் என்று பிரதமர் கூறினார். இந்த நோக்கத்தை அடைவதற்கான திசையிலான ஒரு திட்டமாக பிரகதி திட்டம் உள்ளது என்பதை திரு மோடி முன்வைத்தார். நாட்டில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது புதிய உத்வேகம் பெறும் வகையில் பிரகதி செயல்பட்டு வருகிறது. பிரதமரைத் தலைமையாக கொண்டு இது செயல்படுகிறது. நேரடியாக அனைத்து பங்குதாரர்களிடமும் பேசி பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டு காலத்தில் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன என்று பிரதமர் கூறினார்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டங்களுக்குத் தீர்வு காண்பதன் மூலம் சூரத் போன்ற நகரங்களுக்கு புதிய ஆற்றல் கிடைக்கும் என்று பிரதமர் வலியுறுத்தினார். உலக அளவில் போட்டியிடும்போது நல்ல கட்டமைப்பு வசதி இருக்கும் பட்சத்தில் சிறு குறு நடுத்தர தொழில் துறைக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படும். தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், இத்தகைய சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கடன்கள் எளிய முறையில் வழங்கப்பட்டு, அவர்கள் மிகக் கடினமான காலங்களைக் கடக்க உதவி செய்யப்பட்டது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளை மாற்றியமைத்ததன் மூலமாக அவர்களுக்கு மிகப் பெரும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வர்த்தகம் புரிந்தால் அவர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் நிறுத்தப்படும் என்ற பயத்தின் காரணமாக அவர்கள் விரிவடையாமல் இருந்தனர் ஆனால், இப்போது மறு வரையறை செய்ததன் மூலமாக அவர்கள் இவ்வாறு அச்சம் கொள்ளத் தேவையில்லை. அரசு, கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டு அவர்களுக்கு, புதிய வாய்ப்புகளை அளித்துள்ளது. இதேபோன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரையறைகள், உற்பத்தி மற்றும் சேவைத் துறைக்கு இடையே இருந்த வேறுபாட்டை நீக்கி, சேவைத் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அரசு கொள்முதலில் அவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிறு தொழில்கள் செழிப்பாக வளர்ச்சி பெறும் வகையில், புதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதிலும், இந்தத் தொழில் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிறந்த வசதிகளுடன் சிறந்த வாழ்க்கை பெற வேண்டும் என்பதிலும் அரசு மிகவும் உறுதியாக உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Private equity investments in Indian real estate sector increase by 10%

Media Coverage

Private equity investments in Indian real estate sector increase by 10%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 24, 2024
December 24, 2024

Citizens appreciate PM Modi’s Vision of Transforming India