டெல்லியில் உள்ள அனுமதியற்ற காலனிகளின் உறுப்பினர்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர். டெல்லியில் உள்ள 40 லட்சம் அனுமதியற்ற காலனிகளில் வசிப்போருக்கு உரிமத்துவ அனுமதி தருவது என்று மத்திய அமைச்சரவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுத்திருப்பதற்காக அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோஜ் திவாரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் விஜய் கோயல் ஆகியோரும் உடனிருந்தனர்.
பிரதிநிதிகள் மத்தியில் பேசிய பிரதமர், அனைவரும் ஒன்றிணைவோம். அனைவரும் உயர்வோம் என்பது தான் இந்த முடிவின் பின்னணியில் உள்ள கோட்பாடாக இருந்தது என்று கூறினார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட முடிவு என்று கூறிய அவர், மதம் அல்லது அரசியல் சார்பு பற்றிய வித்தியாசம் எதுவும் இன்றி இந்த உரிமை அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். உள்ளூர் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் தீவிர ஆலோசனை செய்த பிறகு பிரதமரின் உதய் திட்டம் தொடங்கப்பட்டது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் முந்தைய காலத்தில் ஒவ்வொரு அரசுக்கும் ஒத்துழைப்பு அளித்து வந்த டெல்லி மக்களுக்குக் கிடைத்த வெற்றியாக இது உள்ளது என்று பிரதமர் கூறினார். குடியிருப்பவர்கள் மனதில் நிச்சயமற்ற நிலை மற்றும் அச்சம் நிலவுவதை அரசு விரும்பவில்லை என்றும், அதனால் நில உரிமையை அவர்களுக்கே வாழ, தேவையான சட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். நீண்டகாலமாக நிலவி வந்த நிச்சயமற்ற நிலைக்கு இதன் மூலம் முடிவு கட்டப்பட்டுள்ளது என்றும், காலி செய்யப்படுவது அல்லது வெளியேறுவது போன்ற நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏதுமின்றி மக்கள் நிம்மதியாக வாங்க, தங்கள் கனவுகளை நனவாக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் அவர். “முழு டெல்லியின் வாய்ப்புகளையும் இது மாற்றும். டெல்லியின் அதிர்ஷ்டம் மாறாத வரையில், நாட்டின் அதிர்ஷ்டம் மாறாது” என்று அவர் கூறினார்.
பல தசாப்தங்களாக நலிந்த நிலையில் இருந்ததைக் குறிப்பி்ட பிரதமர், முடிவுகள் எடுக்காமல் தள்ளிப் போடுவது அல்லது முடிவுகளுக்கு இடையூறு செய்வது, பிரச்சினைகளில் இருந்து விலகிச் செல்வது ஆகியவை தான் சுதந்திரத்துப் பிந்தைய காலத்தில் கலாச்சாரமாக உருவாகிவிட்டது என்று குறிப்பிட்டார். அதனால் நமது வாழ்வில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது என்றார் அவர்.
ஜம்மு காஷ்மீர் பற்றிக் குறிப்பிட்ட அவர், தற்காலிகமாக அளிக்கப்பட்ட 370 சட்டப்பிரிவு வசதியால் அந்தப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை பாதித்து, குழப்பங்கள் நிலவியதாகக் கூறினார். அதேபோல முத்தலாக் பிரச்சினை இஸ்லாமிய இல்லத்தரசிகளின் வாழ்வை துன்பகரமாக்கியது என்று குறிப்பிட்டார். இரு இரு முரண்பாடுகளையும் நீக்கியதைப் போல, இந்தக் குடியிருப்புகளில் வாழும் 40 லட்சம் பேர் அகற்றப்படும் ஆபத்தை நீக்குவதற்கும் அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
நடுத்தர மக்களுக்காக, பாதியில் நின்று போயுள்ள வீட்டுவசதித் திட்டங்களுக்குப் புத்துயிரூட்ட சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அவர் கூறினார். நாட்டில் வீடுகள் வாங்கியுள்ள 4.5 லட்சம் பேருக்கு இது உதவியாக இருக்கும் என்றும், தாங்கள் அமைதியாக வாழ உதவி செய்வதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
டெல்லியைச் சேர்ந்த இந்த அனைத்துப் பயனாளிகளுக்கும் பிரதமரின் உதய் திட்டம் புதிய விடியலை உருவாக்கும் என்று பிரதமர் கூறினார்.
2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு அளிக்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பிரதமரின் உதய் திட்டத்தின் பின்னணி:
டெல்லியில் அனுமதியற்ற குடியிருப்புகளில் வசிப்போருக்கு உரிமத்துவ அனுமதி வழங்குவது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2019 அக்டோபர் 23 ஆம் தேதி முடிவு செய்தது. இதுதொடர்பான ஒழுங்குமுறை விதி 2019 அக்டோபர் 29 ஆம் தேதி அறிவிக்கை செய்யப்பட்டது.
பொதுவான அட்டர்னி பவர் (ஜி.பி.ஏ.), உயில், விற்பனை ஒப்பந்தம், பணம் செலுத்தியது மற்றும் ஆவணம் வைத்திருத்தலின் அடிப்படையில் சொத்துக்கான உரிமையை வழங்குவதற்கு வகை செய்யும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
சட்டத்தின்படி இப்போதுள்ள விலைகளின் அடிப்படையில் அல்லாமல், அரசால் நிர்ணயிக்கப்படும் அடையாளப்பூர்வமான முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கும் வகையில் உத்தேச சட்டம் இருக்கும். அனுமதியற்ற குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களின், சிறப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஒருமுறை நிவாரணம் தருவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.