சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நிரந்தர வளாகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ஒடிசா மாநிலத்தின் ஆளுநர் மற்றும் முதல்வர், மத்திய அமைச்சர்கள் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திரு பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சம்பல்பூர் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நிரந்தர வளாகம் அமைக்கப்படுவதன் வாயிலாக ஒடிசாவின் கலாச்சாரம் மற்றும் செழிப்பு எடுத்துக்காட்டப்படுவதுடன், மேலாண்மைத் துறையில் உலக அளவில் ஒடிசாவிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று கூறினார். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வந்த போக்கிற்கு மாற்றாக தற்போது இந்திய பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டில் செயல்படுவதாக அவர் தெரிவித்தார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் புதுமையான நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்) உருவாகி வருவதோடு, நெருக்கடியான காலங்களில் தனித்துவமான நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டு, வேளாண் துறையில் விரைவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் நாட்டின் உயர்ந்த இலட்சியத்தோடு மாணவர்கள் தங்கள் பணியை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்த புதிய தசாப்தத்தில் இந்தியாவிற்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கச் செய்வது உங்களது பொறுப்புடைமை என்று பிரதமர் தெரிவித்தார்.
உள்நாட்டுப் பொருட்களை சர்வதேச அளவில் உயர்த்துவதில் மாணவர்களின் பங்கு குறித்து பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். சம்பல்பூர் பகுதியின் ஆற்றல் வளம் மிக்க பொருட்களின் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தும் பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் பழங்குடி கலைப் பொருட்கள் போன்ற ஆற்றல் வளம் மிக்க உள்நாட்டு பொருட்களில் மாணவர்கள் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தினார். இந்தப் பகுதியின் அபரிமிதமான தாதுக்கள் மற்றும் இதர வளங்களை சீர்படுத்துவது தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் என்பதால் மாணவர்கள் இந்த பணியை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். தற்சார்பு இந்தியா இயக்கம், உள்ளூர் பொருட்கள் மற்றும் சர்வதேச கூட்டு முயற்சிக்கான பாலமாக இந்திய மேலாண்மை நிறுவனத்தின் மாணவர்களால் செயல்பட முடியும் என்பதால் உள்நாட்டுப் பொருட்களை சர்வதேச அளவில் உயர்த்துவதற்கான புதுமையான தீர்வுகளை இவர்கள் உருவாக்க வேண்டும். “புதுமை, ஒருமைப்பாடு, உள்ளடக்கியவை என்ற தாரக மந்திரத்துடன் உங்களது மேலாண்மை திறன்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்”, என்று திரு மோடி கூறினார்.
முப்பரிமாண அச்சிடுதல், மாறிவரும் உற்பத்தித் தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மை போன்ற நவீன தொழில்நுட்பங்களின் மூலம் எழும் புதிய மேலாண் சவால்கள் குறித்து பிரதமர் பேசினார். மின்னணு இணைப்பு, எங்கிருந்தும் பணி செய்யும் கருத்துரு ஆகியவற்றுடன் இந்த தொழில்நுட்பங்கள் இணைந்து உலகை சர்வதேச கிராமமாக மாற்றியிருக்கின்றன. அண்மை மாதங்களில் இந்தியா பல்வேறு விரைவான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, மாற்றங்களுக்கு இணையாக மட்டுமல்லாமல், அவற்றை ஊகித்து, அதைக் கடந்தும் முன்னேற முயன்றது என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
மாறிவரும் பணிகளின் பாணி மேலாண்மைத் திறன் மீதான தேவையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறிய பிரதமர், மேலிருந்து– கீழ் அல்லது மேல்– கனமான போன்ற மேலாண் திறன்களுக்கு மாற்றாக, கூட்டுச் செயல்பாடு, புதுமை மற்றும் மாறிவரும் மேலாண்மை ஆகியவை இடம்பெற்றுள்ளதாக பிரதமர் கூறினார். தொழில்நுட்ப மேலாண்மைக்கு இணையாக மனித மேலாண்மையும் மிகவும் முக்கியம்.
புதுமை மற்றும் கூட்டுமுயற்சியில் மிகப்பெரும் அளவில் இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று எதிர் கொள்ளப்பட்டது தொடர்பாக மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு திரு மோடி கேட்டுக் கொண்டார். கொள்ளளவும் திறனும் எவ்வாறு குறுகிய காலத்தில் விரிவுபடுத்தப்பட்டன என்பதை அவர்கள் ஆய்வு செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தினார். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் குறுகியகால அணுகுமுறையியிலிருந்து விலகி நீண்டகால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மிகப்பெரும் அளவில் புதுமை, திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் குறித்த அவரது கருத்தை விளக்கும் வகையில் ஜன்தன் கணக்குகள் மற்றும் எரிவாயு இணைப்புகள் 2014-ஆம் ஆண்டு 55 சதவீதத்தில் இருந்து தற்போது 98 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதை அவர் எடுத்துக் காட்டினார். “பெரும் நிறுவனங்களைக் கையாள்வது மட்டுமே மேலாண்மை அல்ல, உயிர்களைப் பாதுகாப்பதும் மேலாண்மை தான்”, என்று பிரதமர் கூறினார்.
சிறந்த நிர்வாகிகளாகும் முன்னர் நாட்டின் சவால்களை புரிந்துகொள்வது மிகவும் அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதற்கு உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது நிபுணத்துவத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல், பரந்த வாய்ப்புகளையும் அவை ஏற்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் கல்விமுறையில் வளர்ந்து வந்த இடர்பாடுகளைக் களையும் வகையில் விரிவான, பன்முகத்தன்மை வாய்ந்த, மற்றும் முழுமையான அணுகுமுறையை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.