வாரணாசியில் இன்று ரூ.3350 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கி வைத்தார். சுகாதாரம், துப்புரவு, நவீன நகரங்கள், போக்குவரத்து இணைப்பு, மின் சக்தி, வீட்டு வசதி மற்றும் பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்களை அவர் துவக்கி வைத்தார். உத்தரப்பிரதேச ஆளுநர் திரு. ராம் நாயக், முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக தனது இன்னுயிரை ஈந்த வாரணாசியைச் சேர்ந்த மறைந்த திரு. ரமேஷ் யாதவுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.
வாரணாசி புறநகரில் உள்ள ஆரே கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர், வளர்ச்சிக்காக தனது அரசு இரு துறைகளில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். இதில் நெடுஞ்சாலை, ரயில்வே துறைகளில் உள்கட்டமைப்பை உருவாக்குதலும், மக்களுக்கு இந்த வளர்ச்சிப் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதும் இதில் அடங்கும். இதன் பின்னணியில் நிதிநிலை அறிக்கையின் போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன என்று தெரிவித்தார்.
இன்று துவங்கப்பட்ட திட்டங்கள் குறித்து பேசுகையில், இவை புதிய இந்தியாவில் வாரணாசியை மிக முக்கியமான மையமாக மாற்றுவதற்கான முயற்சியாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். வாரணாசியில் இன்று டி.எல். டபிள்யு மையத்திலிருந்து மின்மயமாக்கப்பட்ட ரயிலை கொடியசைத்துத் துவக்கி வைத்ததை முன்னிட்டு, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்முயற்சி இந்திய ரயில்வேத் துறையின் திறனையும், வேகத்தையும் அதிகரிக்கும் என்று கூறினார். மேலும் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரயில்வே துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனை பிரதிபலிக்கும் வகையில், தில்லி முதல் வாரணாசி வரை பயணிக்கும் இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான “வந்தே பாரத்” விரைவு ரயில் சேவை துவங்கப்பட்டது. இந்தத் திட்டங்கள், போக்குவரத்தை எளிமைப்படுத்துவதுடன் வாரணாசி, பூர்வாஞ்சல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய தொழில்கள் அமைக்கவும் வழிவகுக்கின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.
பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு பிரதமர் சான்றிதழ்களை வழங்கினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இந்திய தொழில்நுட்ப பயிலரகத்தின் நூறு ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் மையமும் லெஹர்தாராவின் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையையும் பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த புற்றுநோய் சிகிச்சை வழங்கும் என்று பிரதமர் கூறினார்.
ஆயுஷ்மான் பாரத்தைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசத்தில் 38,000 மக்கள் இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் உத்தரப்பிரதேசத்தில் சுமார் 1 கோடியே 20 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமரின் விவசாய வெகுமதி நிதித் திட்டம் குறித்து பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுமார் 2.25 கோடி ஏழை விவசாயிகளுக்கு இது உதவும் என்று கூறினார்.
பசுக்கள் மற்றும் அதன் சந்ததிகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான தேசிய காமதேனு நல ஆணையம் குறித்து பிரதமர் விவரித்தார்.
வாரணாசியில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் நேரத்திற்கு நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பிறகு, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் உபகரணங்களையும், கருவிகளையும் அவர் வழங்கினார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.