உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைச்சில் மகாராஜா சுகல்தேவ் நினைவு சின்னம் மற்றும் சித்தவுரா ஏரி மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். மகாராஜா சுகல்தேவ் பெயர் சூட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்திய வரலாறு என்பது, காலனி ஆதிக்கம் அல்லது காலனி மனப்பான்மை கொண்டவர்களால் எழுதப்பட்டது மட்டுமல்ல என்றார். இந்திய வரலாறு, சாதாரண மக்கள் தங்கள் நாட்டுப்புறங்களில் வளர்த்து, தலைமுறை, தலைமுறையாக முன்னெடுத்து வந்ததாகும். இந்தியாவுக்காகவும், இந்தியத்துவத்துக்காகவும் தங்களது அனைத்தையும் தியாகம் செய்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். வரலாறு படைத்தவர்களுக்கு எதிராக வரலாற்று ஆசிரியர்கள் இழைத்த அநீதி மற்றும் முறைகேடுகள் இப்போது திருத்தப்பட்டு வருகிறது. நாம் சுதந்திரமடைந்து 75-ம் ஆண்டில் நுழையவுள்ளோம். அதனால், அவர்களது பங்களிப்பை நினைவு கூர்வது மிகவும் முக்கியமாகும் என பிரதமர் வலியுறுத்தினார்.
செங்கோட்டை முதல் அந்தமான் நிக்கோபார் வரை நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பங்களிப்பைக் கொண்டாடியதை பிரதமர் சுட்டிக்காட்டினார். சர்தார் பட்டேலின் பங்களிப்பை, ஒற்றுமை சிலை மூலமாகவும், பாபா சாகிப் அம்பேத்கரின் பங்களிப்பை பஞ்ச தீர்த் மூலமாகவும் நாம் கொண்டாடியுள்ளோம். ‘’ எண்ணற்ற ஆளுமைகள் பல்வேறு காரணங்களால் அங்கீகரிக்கப்படவில்லை. சவுரி சவ்ராவில் என்ன நடந்தது என்பதை நாம் மறக்கலாமா? என பிரதமர் வினவினார்.
இதேபால, இந்தியத்துவத்தைப் பாதுகாக்க மகாராஜா சுகல்தேவ் அளித்த பங்களிப்பும் புறக்கணிக்கப்பட்டது. பாடப் புத்தகங்கள் புறக்கணித்த போதிலும், மகாராஜா சுகல்தேவ் அவாத், தாரை, பூர்வாஞ்சல் ஆகிய நாட்டுப்புற மக்களின் மனதில் வாழுகின்றார். தமது பங்களிப்பு, உணர்வுபூர்வமான, வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார். மகாராஜா சுகல்தேவின் நினைவுச் சின்னம், இனி வரும் தலைமுறையினருக்கு உந்துசக்தியாக இருக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். மருத்துவக் கல்லூரி விரிவாக்கம், சுகாதார வசதிகள் அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம், இந்தப் பின்தங்கிய மாவட்டம் மற்றும் அருகிலுள்ள பகுதிகள் சிறந்து விளங்கி, மக்களின் வாழ்க்கையை உயர்த்தும். மகாராஜா சுகல்தேவின் நினைவாக தபால்தலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
வசந்த பஞ்சமியையொட்டி திரு மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பெருந்தொற்றால் ஏற்பட்ட அவநம்பிக்கையை பின்தள்ளி, இந்த வசந்த பஞ்சமி இந்தியாவுக்கு புதிய நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது. நாட்டின் கட்டமைப்பு, இந்திய ஞானம் ஆகிவை சிறக்கவும், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அன்னை சரஸ்வதி அருளட்டும் என்று அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வரலாறு, நம்பிக்கை, ஆன்மீகம் தொடர்பான நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றின் பெரும் லட்சியம், சுற்றுலாவை மேம்படுத்துவதாகும் என்று பிரதமர் கூறினார். உத்தரப் பிரதேசம், சுற்றுலாவிலும், ஆன்மீக யாத்திரையிலும் சிறந்து விளங்குகிறது. அவற்றின் வாய்ப்புகள் மகத்தானவை. ராமாயண சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, புத்த சுற்றுலா ஆகியவை, ராம பிரான், கிருஷ்ண பரமாத்மா, புத்த பகவான் வாழ்க்கை தொடர்புடைய உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி, சித்திரகூடம், மதுரா, பிருந்தாவனம், கோவர்தன், குஷி நகர், ஷ்ராவஸ்தி போன்ற இடங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. தற்போது, மற்ற மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் மூன்று முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உ.பி. திகழ்கிறது.
சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான நவீன தொடர்பு வசதிகளுடன், உத்தரப் பிரதேசத்தில் இதர வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். அயோத்தி விமான நிலையம், குஷி நகர் சர்வதேச விமான நிலையம் ஆகியவை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வருங்காலத்தில் பெரிதும் பயன் அளிக்கும் என்று அவர் மேலும் கூறினார். உ.பி.யில் சுமார் 12 சிறு, பெரு விமான நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பல பூர்வாஞ்சலில் உள்ளன.
பூர்வாஞ்சல் விரைவுச் சாலை, புந்தேல் கண்ட் விரைவுச் சாலை, கங்கை விரைவுச் சாலை, கோரக்பூர் இணைப்பு விரைவுச் சாலை, பல்லியா இணைப்பு விரைவுச் சாலை, போன்ற நவீன, அகலமான சாலைகள் உத்தரப் பிரதேசம் முழுவதும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு வகையில் இது, நவீன உ.பி. யின், நவீன உள்கட்டமைப்பின் துவக்கமாகும். இரண்டு பிரத்யேக பெரிய சரக்கு வழித்தடங்கள் சந்திக்கும் இடமாக உ.பி.உள்ளது. உ.பி.யில் நவீன கட்டமைப்புகளை உருவாக்குவது, முதலீட்டாளர்களிடம் தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் துறைக்கும், இளைஞர்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
உத்தரப் பிரதேச அரசு கொரோனா பெருந்தொற்றை சமாளித்த விதம் குறித்து பிரதமர் பாராட்டினார். புலம் பெயர்ந்து ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்துள்ள உ.பி அரசுக்கு அவர் புகழாரம் சூட்டினார். கடந்த 3-4 ஆண்டுகளில் உ.பி. எடுத்த முயற்சிகள் கொரோனாவுக்கு எதிராகவும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன என்று அவர் கூறினார். மாநில அரசின் முயற்சியால், பூர்வாஞ்சலில் மூளைக் காய்ச்சல் பிரச்சினை வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், உ.பியில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 14-லிருந்து 24 ஆக உயர்ந்துள்ளது என்று பிரதமர் கூறினார். கோரக்பூர், பரேலி அகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை தவிர, 22 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. வாரணாசியில் நவீனபுற்றுநோய் மருத்துவமனைகளும், பூர்வாஞ்சலுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் உ.பி. ஜல் ஜீவன் இயக்கம் மெச்சத்தகுந்த பணியைச் செய்துள்ளது. சுத்தமான குடிநீர் வீட்டுக்கு வரும்போது, பல நோய்களை அது குறைத்துவிடும் என்று பிரதமர் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில், முன்னேற்றமான மின்சாரம், குடிநீர், சாலைகள், சுகாதார வசதிகள் ஆகியவற்றால் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோர் பயனடைந்து வருகின்றனர் என்று பிரதமர் கூறினார். பிரதமர் கிசான் சம்மான் நிதி மூலம்,உ.பி.யில் 2.5 கோடி விவசாய குடும்பங்களுக்கு பணம் நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒரு காலத்தில் அவர்களிடம் உரம் வாங்கக்கூட பணம் இல்லாமல் பிறரிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். மேலும், விவசாயிகள், பாசனத்துக்கு மின்சாரத்தைப் பயன்படுத்த இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியிருந்தது என்று கூறிய அவர், தமது அரசு மின்சார விநியோகத்தை மேம்படுத்தியதன் மூலம் அத்தகைய பிரச்சினைகளை நீக்கியுள்ளது என்றார்.
வேளாண் நிலங்களை ஒருங்கிணைக்க விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை (எப்பிஓ) அமைப்பது மிகவும் முக்கியமானதாகும் என்று பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் விவசாயிகளின் சாகுபடி பரப்பு குறைந்து வருவதை சமாளிக்கலாம். 1-2 ஏக்கர்களை வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்கள் 500 ஒன்று சேரும் போது, 500-1000 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளை விட வலிமை பெற முடியும் என்று அவர் கூறினார். இது போல, காய்கறி, பழங்கள், பால், மீன் போன்றவற்றுடன் தொடர்புடைய சிறு விவசாயிகள் கிசான் ரயில் மூலம் இப்போது பெரிய சந்தைகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வேளாண் சீர்திருத்தங்கள், சிறு, குறு விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். இந்த வேளாண் சட்டங்கள் குறித்த ஆக்கபூர்வமான கருத்துக்கள் நாடு முழுவதும் குவிந்து வருகின்றன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்து விதமான தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்று பிரதமர் கூறினார். வெளி நாட்டு நிறுவனங்களுக்காக சட்டங்களை இயற்றியவர்கள், இந்திய நிறுவனங்களைப் பற்றி கூறி விவசாயிகளை அச்சுறுத்தி வருவதாக அவர் கூறினார். இந்தப் பொய்களும், பிரச்சாரமும் அம்பலமாகியுள்ளன. புதிய சட்டங்களை இயற்றிய பின்னர், உத்தரப் பிரதேசத்தில், கடந்த ஆண்டை விட நெல் கொள்முதல் இருமடங்காகியுள்ளது. யோகி அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஏற்கனவே ரூ.1 லட்சம் கோடியை விடுவித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் நிலுவைத் தொகையை வழங்க வகை செய்ய, மத்திய அரசும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பணம் கிடைப்பதை உறுதி செய்ய உ.பி. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு அனைத்து இயன்ற முயற்சிகளையும் அரசு செய்து வருவதாக பிரதமர் உறுதியளித்தார். சுவமிதா திட்டம் கிராமவாசியின் வீட்டை சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்வதை முற்றிலுமாக அகற்றும் என்றார் அவர். இத்திட்டத்தின் கீழ், உ.பி.யில் சுமார் 50 மாவட்டங்களில் ட்ரோன்கள் மூலம் சர்வே செய்யப்பட்டு வருகிறது. 12 ஆயிரம் கிராமங்களில் ட்ரோன் சர்வே பணி இது வரை நிறைவடைந்துள்ளது. இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் சொத்து அட்டையைப் பெற்றுள்ளன. இந்தக் குடும்பங்கள் தற்போது, அனைத்து விதமான அச்சத்திலிருந்தும் விடுபட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார்.
எனவே, இந்த நிலையில், வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம், விவசாயிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் என்ற பொய்யை எப்படி யாரும் நம்பமுடியும் என பிரதமர் கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு மனிதனும் அதிகாரம் பெற வேண்டும் என்பதே நமது லட்சியமாகும். நம்நாட்டை தன்னிறைவாக்குவதே நமது உறுதியாகும். இந்த இலக்கை எட்ட நாம் உறுதிபூண்டுள்ளோம். கோஸ்வாமி துளசிதாசரின் ராமசரித்திரத்தின் கவிதையை மேற்கோள் காட்டி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். சரியான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் எந்த இலக்கையும், வெற்றி பெறச் செய்ய ராமபிரான் மனதில் இருந்து அருளுவார் என்பது அதன் பொருளாகும்.